Entha Kilamai Entha Kadavul
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய ஆன்மிகம் பதிவின் வாயிலாக எந்த கிழமையில் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே ஆன்மீகத்தில் அதீத நம்பிக்கை இருக்கும். அதுபோல நம் அனைவருக்குமே ஒவ்வொரு கடவுளின் மீது அதீத பற்று இருக்கும்.
அப்படி இருக்கையில் நாம் அந்த கடவுளுக்கு உகந்த நாளிலோ அல்லது உகந்த கிழமையிலோ கோவிலுக்கு சென்று வழிபடுவோம். ஆனால் எந்த கடவுளுக்கு எந்த கிழமை உகந்ததாக இருக்கும் என்று நம்மில் பலருக்கும் தெரியாது. அதனால் இந்த பதிவின் வாயிலாக எந்த கிழமையில் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
எந்த கிழமையில் என்ன செய்தால் நல்லது..
எந்த கிழமையில் எந்த கடவுளை வணங்க வேண்டும்:
பொதுவாக இந்து சமயத்தில் இருக்கும் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு கிழமை உகந்த கிழமையாக இருக்கும். அன்று நாம் அந்த கடவுளை மனதார வணங்கி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகையால் இப்போது கடவுளுக்கு உகந்த கிழமைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ஞாயிற்று கிழமை:
ஞாயிற்றுக்கிழமை அன்று கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரியனை வணங்கினால் நற்பலன்கள் கிடைக்கும். அதுவும் ஞாயிற்று கிழமை அன்று ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்லி வணங்குவது இன்னும் சிறப்பானது. இதனால் நம்மை அறியாமல் செய்த பாவங்கள் கூட ஒழிந்துவிடும். மேலும் நம்முடைய தோஷங்களும் நீங்கி விடும்.
திங்கட்கிழமை:
திங்கட்கிழமையானது சிவபெருமானுக்கு உகந்த அற்புதமான நாளாக இருக்கிறது. இதை சோமவார விரதம் என்பார்கள். ஆகவே திங்கட்கிழமை அன்று விரதங்கள் இருந்து பால், அரிசி மற்றும் சர்க்கரை போன்றவற்றை படையலாகவும் வைத்து வழிபடலாம். இப்படி வழிபட்டு வருவதால், நற்பலன்களை பெறலாம்.
செவ்வாய் கிழமை:
செவ்வாய்க்கிழமையில் முருக பெருமான், அனுமன், துர்க்கை ஆகியோரை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வருவது மிகுந்த பலனை தரும். செவ்வாய் கிழமையில் முருக பெருமானுக்கு விரதம் இருந்தால் பல நற்பலன்களை பெற முடியும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பதால் கூடுதல் பலன்களை பெறமுடியும்.
கடவுளுக்கு ஆகாத பூக்கள் எது தெரியுமா..
புதன் கிழமை:
பொதுவாக புதன் கிழமைகளில் விரதம் இருந்தால் கல்வி, புகழ், ஞானம், தனம் போன்றவற்றை பெறமுடியும். புதன் கிழமை விநாயகப் பெருமானை வழிபட உகந்த நாளாகும். எந்தக் காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும், முதலில் விநாயகரை வணங்கி விட்டுத் தொடங்கினால் அந்த காரியம் தடை இல்லாமல் நடந்து முடியும்.
மேலும் இந்த நாளில், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். ஸ்ரீஹயக்ரீவ வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது. ஸ்ரீ நரசிம்மருக்கு பானகப் பிரசாதம் வழங்கி வழிபடுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
வியாழக்கிழமை:
வியாழக்கிழமை என்று மகாவிஷ்ணுவை விரதமிருந்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. அதிலும் அந்த நாளில் விஷ்ணுவையும் லட்சுமி தேவியையும் நினைத்து விரதமிருந்து வணங்க வேண்டும். மேலும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை அன்று வழிபடுவதால் நன்மை உண்டாகும்.
அதுபோல வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாக இருக்கிறது. அதனால் இந்த நாளில் விரதமிருந்தால் குருவின் அருளால் திருமணம் யோகம், குழந்தை பாக்கியம், சகல செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை:
பொதுவாக வெள்ளி கிழமை என்றாலே சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கிறது. அதிலும் வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனையும், அவரது அவதாரங்களையும் விரதமிருந்து வழிபடுவது பல நன்மைகளை தரும். அம்பாளை பூஜை செய்து பாயசம், வடை நைவேத்யம் செய்து வழிபடலாம்.
ஸ்ரீலலிதா சகஸ்ர நாம பாராயணம் செய்யலாம். காலையும், மாலையும் சிவாலயத்தில் உள்ள அம்பாளையும் பெருமாள் கோயிலில் உள்ள தாயாரையும் வணங்கி வருவதால் பல நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் மகாலட்சுமி வழிபாடு செல்வ வளத்தை கொடுக்கும்.
சனிக்கிழமை:
சனிக்கிழமை என்றாலே சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள் தான். எனவே இந்த நாளில், கோயிலுக்குச் சென்று ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுவது மிகுந்த பலன்களை பெற்று தரும்.
அதுமட்டுமில்லாமல், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர், காளி தேவி, திருமால் போன்ற தெய்வங்களை வழிபாடு செய்வதால் நன்மை உண்டாகும்.
மேலும் சனிக்கிழமை அன்று கருடாழ்வார், நந்திகேஸ்வரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என இறைவனுக்குத் தொண்டு செய்து இறைநிலை அடைந்த அடியவர்களை வணங்குவதற்கு உகந்த நாளாகவும் இருக்கிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |