Navagraha
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவின் வாயிலாக நவகிரகங்களின் குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. நவக்கிரகங்கள் மூலம் தான் இவ்வுலகம் இயங்க காரணமாக இருக்கிறது. ஆன்மீகத்தின் படி பார்த்தால் நம் வாழ்க்கையை புரட்டிப்போடுவதே இந்த நவகிரகங்கள் தான். அதாவது, ஒவ்வொரு நவக்கிரகத்தின் பெயர்ச்சியும் நமக்கு பல விளைவுகளை ஏற்படுத்தும்.
இவ்வாறு ஏற்படுத்தும் விளைவுகள், ஒரு சில ராசிகளுக்கு நன்மை அளிப்பதாகவும் ஒரு சில ராசிகளுக்கு தீமை அளிப்பதாகவும் இருக்கும். அதுமட்டுமில்லாமல், 12 ராசிகளில் உள்ள ஒவ்வொரு ராசிக்கும் ஆளும் கிரகம் ஒன்று இருக்கும். அக்கிரகத்தின் சுழற்சியும் நம் வாழ்க்கையில் பல விளைவுகளை ஏற்ப்படுத்தும்.
நவகிரகங்களின் குணங்கள்:
நம் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக இருக்கும் நவகிரகங்கள் அனைத்தும் தனக்கென்று ஒரு குணங்களை கொண்டிருக்கும். அக்குணத்திற்கு ஏற்றவாறு நமக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஓகே வாருங்கள் நவகிரகங்களின் குணங்கள் பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.
நவகிரகங்கள் மூன்று குணங்களை கொண்டிருக்கும். அவை பின்வருமாறு:
- சாத்வீகம் குணம்
- ராஜசம் குணம்
- தாமசம் குணம்
1. சாத்வீகம் குணம் – சூரியன், சந்திரன், குரு
கிரகங்களில், சாத்வீகம் குணம் கொண்ட கிரகங்கள் சூரியன், சந்திரன் மற்றும் குரு ஆகும். சாத்வீகம் குணம் என்பது மிகவும் சிறப்பான குணம் ஆகும். சகிப்புத் தன்மை தருதல், வாய்மை, நம்பிக்கை, விவேகம், மகிழ்ச்சி, கருணை, வைராக்கியம், பாவம் செய்ய கூச்சப்படுதல் அல்லது அச்சப்படுதல், பணிவு, எளிமை போன்ற அற்புத குணங்களை கொண்டிருக்கும்.
சூரியன்:
சூரியன் ஆத்ம காரகன் – சூரியனை வைத்தே அரசாங்க பதவி, தந்தையின் உடன் பிறந்தவர்களின் விபரங்கள் ஜாதகத்தில் முடிவு செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், உலகில் அசையும் பொருட்கள் மற்றும் அசையாத பொருட்கள் என அனைத்துக்கும் ஆத்மாவாக விளங்குவது சூரியனே ஆகும்.
சந்திரன்:
சந்திரன் உடலுக்கு காரகன் ஆவர். கடற்பயணம், ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, சுக போகம் போன்றவற்றிக்கு காரகன் சந்திரன் ஆவர். சந்திரனில் வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரண்டு முறைகள் உள்ளது. அதன்படியே பலன்களையும் தருவார்.
குரு பகவான்:
குரு பகவான் புத்திரகாரகன். எல்லா கிரகங்களின் தோஷத்தையும் போக்குபவர் குரு பகவான். அறிவு, தெய்வதரிசனம், தீர்த்த யாத்திரை, செல்வாக்கு மற்றும் பணம் போன்றவற்றிக்கு காரகன் குரு பகவான்.
2. ராஜசம் குணம்- புதன், சுக்கிரன்
ராஜசம் குணம் என்பது இன்பத்தில் பற்று, ராஜசம் குணம் பெருகும் போது அசுரத்தன்மை ஏற்படும் குணம் ஆகும். ராஜசம் குணம் உடைய கிரகம் புதன் மற்றும் சுக்கிரன் ஆகும்.
புதன்:
ஜோதிடத்தில் புதன் பகவான் வித்யா காரகன் என்று அழைக்கப்படுகிறார். ஜாதகத்தில் கல்வி, மாமன், அத்தை மற்றும் மைத்துனர்கள் புதன் மூலம் கணிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், பேச்சாற்றல், கணிதம், நண்பர், சாதுர்யம், கவிதை, சிற்பம், சித்திரம், நடிப்பு, நாடகம், எழுத்து கலை, சாஸ்திர ஞானம், நுண்கலைகள் ஆகியவற்றிக்கு புதன் காரகம் ஆவார்.
9 நவகிரகங்கள் பற்றிய தகவல்கள்..!
சுக்கிரன்:
ஜோதிடத்தில் சுக்கிரனை களத்திர காரகன் என்று அழைப்பார்கள். ஆபரணம், இளமை, வியாபாரம், நடிப்பு, நடனம், சித்திரம், ராஜபோக வாழ்வு மற்றும் வீடு கட்டுதல் போன்றவற்றிக்கு காரகர் ஆவர்.
3.தாமசம் குணம் – செவ்வாய், சனி, ராகு, கேது:
தாமசம் குணம் என்பது, காமம், மோகம், பகட்டுக்காக செயல்களை செய்தல், கோபம், பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்தல், பொய் பேசுதல், அச்சம், வெகுளி, வருத்தம், கவலை, கலக்கம், பிறரிடமிருந்து பலன் மற்றும் பொருட்களை எதிர்பார்த்தல், மயக்கம், வெளிவேஷம், பேராசை, உறக்கம், இம்சை, யாசித்தல் போன்ற குணங்களை உடையது.
செவ்வாய்:
ஜோதிடத்தின்படி, போர்குணம் கொண்ட கிரகம் செவ்வாய் ஆகும். ரத்தத்திற்கு காரகன் செவ்வாய். உடல் உறுதி மற்றும் மன உறுதி தருபவர். அதுமட்டுமில்லாமல், கண்டிப்பதும் இவரே, தண்டிப்பதும் இவரே.
சனி:
ஜோதிடத்தில் ஆயுள் காரன் என்று அழைக்கப்படுபவர். முக்கியமாக, நம் வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்திற்கு காரணம் இவரே. வலிமை, ஆயுள், அடிமை, எருமை, கஞ்சத்தனம், கள்ளதனம், மது, தானியம், வாதம், மரணம், மனது வெறுக்க கூடிய செய்கை, ஆகியவற்றிக்கு காரகன் சனி பகவான்.
ராகு:
ஜோதிடத்தின்படி, பதவி, புகழ் இவற்றைப் பெற ராகுவின் அருள் வேண்டும், விஷம், மரணம், பித்தம், பேய் பிசாசு, மது குடித்தல், அன்னிய மொழி பேசுதல், குஷ்டம், வழக்குகள், புத்திர தோஷம், பித்ரு தோஷம் போன்றவற்றிக்கு காரகர் ராகு.
கேது:
ஜோதிடத்தில் ஞான காரகன் என்று அழைக்கப்படுபவர் கேது. கடுமையான தடங்கள், ஞானம், மோட்சம், மாந்திரீகம், கொலை, ஆணவம், அகங்காரம், சிறைப்படல் ஆகியவற்றிக்கு காரணமாக இருப்பவர் கேது.
27 நட்சத்திரங்களும் அவற்றை ஆளும் கிரகங்களும்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |