நவராத்திரி கொலு வைக்கும் முறை | Navarathri Golu Vaipathu Eppadi |நவராத்திரி விளக்கம்
இந்திய மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் விழாதான் இந்த நவராத்திரி. மக்களை கொடுமை செய்து வந்த மகிசாசுரனை அன்னை ஆதிபராசக்தி வதம் செய்து வெற்றியடைந்த விழாவினை தான் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவானது 9 நாள் தொடர்ச்சியாக அம்மனுடைய உருவங்களை வைத்து வழிபாடு செய்வதாகும். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரியை மகா நவராத்திரி என்று அழைக்கின்றனர். அன்னை சக்தி தேவியின் சிறப்பையும், வீரத்தையும் பாராட்டும் வகையில் இந்த நவராத்திரி விழா இந்திய மக்களால் சிறப்பாக 9 நாள் கொண்டாடப்படுகிறது. இந்த பதிவில் நவராத்திரி கொலு எப்படி வைப்பது, நவராத்திரி அன்று எது மாதிரியான உணவு வகைகள் வைத்து இறைவனுக்கு படைக்கலாம் என்பதை பற்றி எல்லாம் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுவோம்..!
மகாளய அமாவாசை வழிபாடு |
நான்கு விதம் கொண்ட நவராத்திரிகள்:
நவராத்திரியானது 4 விதமாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. சாரதா நவராத்திரி அல்லது மகா நவராத்திரி (புரட்டாசி மாதம்), வசந்த நவராத்திரி (பங்குனி மாதம்), ஆஷாட நவராத்திரி (ஆனி மாதம்), சியாமளா நவராத்திரி (தை மாதம்) என்று ஒவ்வொரு மாதமும் கொண்டாடப்படுகிறது. ஆஷாட மற்றும் மகா நவராத்திரியை குப்த நவராத்திரி என்றும் அழைக்கின்றனர். இந்த நவராத்திரியை தாந்திரீகவாதிகள் தங்கள் சக்தியை அதிகரிக்க எடுக்கின்றனர்.
நவராத்திரி கொலு வைப்பது எப்படி.? | Navarathri Golu Vaipathu Eppadi:
1. ஒன்றாம் படி: ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள் போன்றவைகளை முதல் படியில் வைப்பார்கள்.
2. இரண்டாம் படி: ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளை இரண்டாம் படியில் வைப்பார்கள்.
3. மூன்றாம் படி: மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகளை மூன்றாவது படியில் வைப்பார்கள்.
4. நான்காம் படி: நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை நான்காம் படியில் வைப்பார்கள்..
5. ஐந்தாம் படி: ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகளை ஐந்தாவது கொலு படியில் வைப்பார்கள்.
6. ஆறாம் படி: ஆறறிவு மனிதர்கள் பொம்மைகளை ஆறாவது கொலு படியில் வைப்பார்கள்.
7. ஏழாம் படி: மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகளை ஏழாம் படியில் வைப்பார்கள்.
8. எட்டாம் படி: தேவர்கள், அஷ்டதிக்குப் பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் மற்றும் தேவதைகளின் உருவங்களை வைப்பார்கள்.
9. ஒன்பதாம் படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் வைக்க வேண்டும்.
கொலு படிகளின் விளக்கம்:
- கொலுவில் கீழ் இருக்கும் மூன்று படிகளில் கொலுவிற்காக வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம் போன்றவை, தாமச குணத்தைக் குறிக்கும்;
- அடுத்த மூன்று படிகளில் கொலுவிற்காக வைக்கப்படும் அரசர், ராணி, மந்திரி போன்றவை, ரஜோ குணத்தைக் காட்டும்;
- மற்ற மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ சிலைகள் சத்வ குணத்தை அடைவதற்கு வழியை நமக்கு உணர்த்துகிறது.
நவராத்திரி வழிபாட்டு முறை:
நவராத்திரி விழாவன்று நவராத்திரி விரதம் எடுப்பவர்கள் அந்த ஒன்பது நாளும் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு விரதத்தினை கடைப்பிடிக்க வேண்டும்.
நவராத்திரி விரதத்தினை எடுப்பவர்கள் திருமணம் ஆன பெண்களை தங்களது வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமர வைத்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் போன்ற பொருள்களை கொடுக்கலாம்.
8-ம் நாளான நவராத்திரி அன்று 2 முதல் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களை அம்மனின் அம்சமாக கருதி பொட்டு, வளையல், உணவு, இனிப்பு மற்றும் ஆடை கொடுத்துகுழந்தைகளை சந்தோஷப்படுத்தலாம்.
நவராத்திரி உணவு வகைகள்:
நவராத்திரி அன்று இறைவனுக்கு 9 நாள்கள் வரை படைக்கும் உணவு வகைகளை தெரிந்துக்கொள்ளுவோம்.
முதல் நாள்: வெண் பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை போன்ற உணவுகளை படைப்பார்கள்.
இரண்டாம் நாள்: புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம் போன்ற உணவுகளை படைப்பார்கள்.
மூன்றாம் நாள்: கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்.
நான்காம் நாள்: தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்து வடை, பட்டாணி சுண்டல் போன்ற உணவுகளை படைத்து மகிழ்வார்கள்.
ஐந்தாம் நாள்: சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல் போன்ற உணவுகளை இறைவனுக்கு படைப்பார்கள்.
ஆறாம் நாள்: தேங்காய் சாதம், தேங்காய் பால் பாயாசம், ஆரஞ்சு பழம், மாதுளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம் போன்ற உணவுகளை படைப்பார்கள்.
ஏழாம் நாள்: எலுமிச்சை சாதம், பழ வகைகள், வெண் பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு போன்ற உணவுகளை படைப்பார்கள்.
எட்டாம் நாள்: பால் சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல் போன்ற உணவுகளை படைப்பார்கள்.
ஒன்பதாம் நாள்: சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக் கடலை, எள் உருண்டை போன்ற உணவுகளை படைப்பார்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |