மறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள் | Maraiyudaiyai Thodudaiya Lyrics in Tamil

Advertisement

Maraiyudaiyai Thodudaiya Lyrics in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக மறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள் பற்றி தான் பார்க்கப் போகின்றோம். திருஞான சம்பந்தர் அவர்கள் தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி நகரம் சென்ற போது, அந்த நகரத்திலிருக்கும் மூக்கீச்சரம், சிராப்பள்ளி, ஆனைக்கா ஆகிய மூன்று தலங்களும் சென்று பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்து வணங்கினார். அதன் பிறகு பாற்றுறை என்று அழைக்கப்பட்ட தலம், மற்றும் நெடுங்களம் என்று அழைக்கப்பட்ட தலத்திற்கும் சென்றார் என்று பெரியபுராணம் குறிப்பிடுகின்றது.

அப்படி அவர் இயற்றிய அந்த பெரிய புராணப் பாடலை தான் நம் பதிவின் வாயிலாக காணப்போகின்றோம். இந்த பதிகத்தினை “இடர் களையும் பதிகம்” என்று அழைப்பார்கள். இந்த பதிகத்தினை தினமும் பக்தியுடன் ஓதினால், எடுத்த காரியங்கள் எந்த விதமான தடைகளும் இன்றி நடக்கும் என்றும், ஏற்பட்ட வீண் பழி அவமானங்கள் விலகும் என்றும் இறையருள் எளிதில் கிட்டும் என்றும் பெரியோர்கள் கூறுகின்றனர். ஆகையால் மறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள் பற்றி படித்தறியலாம் வாங்க.

கடன் தொல்லையை காணாமல் போகச் செய்யும் பதிகம்

மறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள்: 

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. [1]

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. [2]

நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. [3]

மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடையா ரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. [4]

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்தாள் நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. [5]

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தகீதர் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. [6]

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. [7]

குன்றின்உச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூழ் இலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை யருவரைக்கீழ் அடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும்
நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. [8]

வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனும்
சூழவெங்கும் நேடஆங்கோர் சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்
நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. [9]

வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. [10]

நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம் பந்தன்சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே. [11]

இடர்களையும் பதிகம் pdf Pdf

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement