Nadha vindhu lyrics in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில் முருகன் கடவுளை போற்றி பாடக்கூடிய நாத விந்து கலாதீ நமோநம பாடல் வரிகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். கேட்டதை அள்ளித்தரும் முருக பகவானை நினைத்து நாம் இந்த பாடலை உச்சரிப்பதன் மூலம் நற்பலன்களை பெறலாம். முருகன் சுவாமி, நம் கஷ்டங்கள் அனைத்தையும் நீங்க செய்பவர். அவரை நினைத்து நாம் விரதம் இருந்தால் அதற்கான பலன்களை அவரே நமக்கு தருவார். எனவே, எல்லாமுமாய் இருந்து நம்மை காக்கும் முருக பெருமானின் நாத விந்து கலாதீ நமோநம பாடல் வரிகளை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
Nadha Vindhu Thiruppugazh Lyrics in Tamil:
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம …… வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம …… பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம …… கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம …… அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு …… மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக …… வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி …… லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் …… பெருமாளே.
முருக பெருமானின் வேலுண்டு வினையில்லை பாடல் வரிகள்
பாடல் விளக்கம்:
நாத விந்து கலாதீ நமோநம … லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய
தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி,
வேத மந்த்ர சொரூபா நமோநம … வேதங்கள், மந்திரங்கள்,
இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி,
ஞான பண்டித ஸாமீ நமோநம … பேரறிவுக்குத் தலைவனான
தெய்வமே, போற்றி, போற்றி,
வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம … பல கோடிக்
கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி,
போற்றி
போக அந்தரி பாலா நமோநம … (அனைத்து உயிர்களுக்கெல்லாம்)
இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி
நாக பந்த மயூரா நமோநம … தன் காலினால் பாம்பை அடக்கிக்
கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி,
பரசூரர் சேத தண்ட விநோதா நமோநம … எதிரிகளான
சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி,
போற்றி,
கீத கிண்கிணி பாதா நமோநம … இசை ஒலி எழுப்பும்
சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி,
போற்றி
தீர சம்ப்ரம வீரா நமோநம … மிகவும் பராக்ரமசாலியான
போர்வீரனே, போற்றி, போற்றி,
கிரிராஜ … மலைகளுக்கெல்லாம் அரசனே,
தீப மங்கள ஜோதீ நமோநம … திருவிளக்குகளின் மங்களகரமான
ஒளியே, போற்றி, போற்றி,
தூய அம்பல லீலா நமோநம … பரிசுத்தமான பரவெளியில் லீலைகள்
புரிபவனே, போற்றி, போற்றி,
தேவ குஞ்சரி பாகா நமோநம … தேவயானையை மணாட்டியாகப்
பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி,
அருள்தாராய் … உனது திருவருளைக் கொடுத்து அருள்வாயாக.
ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார
நீதியும் … தானம், பல சிறப்பான பூஜைகள் செய்தல், நல்ல நூல்களைப்
படித்தல், சற்குணம், ஒழுக்கம், நியாயம்,
ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத … கருணை, குருவின்
திருப்பாதங்களைச் சேவித்தல் ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும்
(சோழமண்டலத்தில்),
ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை … ஏழு உலகங்களில்
உள்ளோரும் மெச்சுகின்ற காவேரி நதியால் செழித்து வளமுறும்
சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடாளும்
நாயக … சோழ மண்டலத்தில், மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்
ராஜகெம்பீரம் என்னும் நாட்டை* ஆளுகின்ற அரசனே,
வயலூரா … வயலூருக்குத் தலைவா,
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை … தன்மீது அன்புவைத்த
திருவாரூராரின் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்பை
சேர்தல் கொண்டவரோடே முனாளினில் … நாடியவராய்,
அவருடன் முன்பொருநாள்,
ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி … ஆடலில் சிறந்த,
விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே)
ஆதி அந்தவுலாவாசு பாடிய … ஆதி உலா எனப்படும் அழகிய
(கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில் … சேரர் பெருமானாம்
சேரமான் பெருமான்** நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து
வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. … திரு
ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு
கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே.
nadha vindhu lyrics in tamil pdf |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |