உங்கள் நட்சத்திரத்திற்கு நீங்கள் என்ன தானம் செய்ய வேண்டும் தெரியுமா..?

Advertisement

Natchathira Dhanam in Tamil

ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! இன்று நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் என்ன தானம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக தானம் என்பது நாம் செய்யும் புண்ணியம் ஆகும். நம்மால் முடிந்த உதவியை இல்லாதவர்களுக்கு செய்யும் போது நமக்கு புண்ணியம் சேர்க்கிறது. அதுபோல ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன.

அப்படி இருக்கும் ராசிகளில் ஒவ்வொரு ராசிக்கும் 3 நட்சத்திரங்கள் என்று 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆகவே 27 நட்சத்திரங்களை கொண்டவர்களும் என்னென்ன தானங்கள் செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்கள் ராசிப்படி நீங்கள் செய்ய வேண்டிய தானங்கள்..

27 நட்சத்திரகாரர்களும் செய்ய வேண்டிய தானங்கள்: 

பொதுவாக நாம் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் தானம் செய்திருப்போம். தானம் என்றாலே அது சிறப்பு வாய்ந்தது தான். அதிலும் நம்முடைய நட்சத்திரத்திற்கு என்ன தானம் எய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, நம்மால் முடிந்த தானத்தை ஒரே ஒரு முறை  செய்தால் கூட அது நம்முடைய புண்ணியக் கணக்கில் சேர்ந்துவிடும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே இந்த 27 நட்சத்திரகாரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் பற்றி தற்போது காண்போம்.

அஸ்வினி:

உடல் நிலை சரி இல்லாதவர்களுக்கு அல்லது ஏழை மக்களுக்கு மருத்துவம் சம்மபந்தப்பட்ட மருந்துகளை தானமாக வழங்கலாம். திருமணத்திற்காக கஷ்டப்படும் பெண்களுக்கு உங்களால் முடிந்த தங்கத்தை தானமாக கொடுக்கலாம்.

பரணி:

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களால் முடிந்த வரை அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பு. அதிலும் கோவில்களுக்கு எள் தானமாக கொடுக்கலாம். இப்படி செய்வதால் வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.

கிருத்திகை:

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இரும்பு தானம் செய்யலாம். அல்லது வறுமையில் வாடிக் கொண்டு இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த பண உதவியைச் செய்யலாம்.

ரோகினி:

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு வண்டி, வாகனம் போன்றவை வாங்கிக் கொடுக்க வேண்டும். அதுபோல பால் தானம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

மிருகசீரிஷம்:

மிருகசீரிஷம் நட்சத்திரத்தை கொண்டவர்கள் தானம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் மனக்கவலையில் இருப்பவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறுவதால் வாழ்வில் சகல நன்மைகளும் உண்டாகும்.

திருவாதிரை:

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் சிவன் கோவிலில் இருக்கும் பக்தர்களுக்கு ஒரு வேளை அன்னதானம் செய்யலாம். இதனால் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் உண்டாகும்.

புனர்பூசம்:

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் உதவி கேட்பவர்களுக்கு அதாவது விபத்து அல்லது முதலுதவி போன்ற விஷயங்களுக்கு ஓடிப்போய் உதவி செய்ய வேண்டும். முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது இன்னும் சிறந்தது. இதனால் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிச்சயமாக நடக்கும்.

பூசம்: 

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோவில்களுக்கு பசுவை தானமாக கொடுக்கலாம். இதை செய்ய முடியாதவர்கள் பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது பசுமாட்டிற்கு உங்களால் முடிந்தவரை தீவனம் வாங்கி கொடுக்கலாம். இதனால் வாழ்வில் பல நன்மைகள் உண்டாகும்.

ஆயில்யம்:

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் சிவன் கோவில்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம். ஏழைகளின் திருமண செலவிற்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம். மேலும், கோவில்களில் மரம் நடுவது, புற்று கோவில்களுக்கு அபிஷேகம் செய்வது போன்றவற்றை செய்து வந்தால் நல்லது நடக்கும்.

குலதெய்வத்திற்கு தானமாக கொடுக்க வேண்டிய பொருட்கள்

மகம்:

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கு உதவி செய்யலாம். அவர்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி தானமாக கொடுக்கலாம். அல்லது ஆடைகள் வாங்கி கொடுத்தால் சகல யோகங்களும் வந்து சேரும். எள் தானம் செய்வது இன்னும் சிறந்தது.

பூரம்:

பூரம் நட்சத்திரக்காரர்கள் சிவன் கோவில்களில் விசேஷ பூஜைகளுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம். அல்லது உங்களால் முடிந்தால் சிவலிங்கத்தை தானமாக கொடுக்கலாம்.

உத்திரம்:

உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வயதானவர்களுக்கு தேவையானவற்றை உங்களால் முடிந்தவரை வாங்கி கொடுக்கலாம். மேலும் எள் தானம் செய்யலாம்.

ஹஸ்தம்:

அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உங்களால் முடிந்த தங்கத்தை வாங்கி தரலாம் அல்லது ஏழை திருமணத்திற்கு தேவையான உதவி செய்யலாம்.

சித்திரை:

சித்திரை நட்சத்திரக்காரர்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அதாவது, தந்தை இல்லாத அல்லது தாய் இல்லாத ஏழை குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்யலாம்.

சுவாதி:

சுவாதி நட்சத்திரக்காரர்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு உங்களால் முடிந்த மருத்துவ உதவியை செய்யலாம். இதனால் நன்மை உண்டாகும்.

விசாகம்:

விசாகம் நட்சத்திரக்காரர்கள் பாழடைந்த கோவில்களை சீரமைக்கும் பணியில் உங்களால் முடிந்த உதவியை செய்யலாம் இதனால் நல்லது நடக்கும்.

அனுசம்:

அனுசம் நட்சத்திரக்காரர்கள் உங்களின் கண் முன் யார் கஷ்டப்படுகிறார்களோ அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். நண்பர்களுக்கு ஓடி உதவி வேண்டும்.

கேட்டை:

கேட்டை நட்சத்திரக்காரர்கள் வேத காரியங்களுக்கும், வேத விற்பன்னர், அர்ச்சகர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தால் நிறைய நல்லது நடக்கும். மேலும் யாகங்களுக்கு தேவையான பொருட்களை கோவில்களுக்கு தானமாக அளிக்கலாம்.

மூலம்:

கோவில்களில் மரத்தை நடுவது சிறந்த பலனைத் தரும். கோவில்களுக்கு தேவையான சிறிய சிறிய பொருளுதவி செய்து வந்தாலே போதும் நிறைய மாற்றங்கள் உங்கள் வாழ்வில் நிகழும்.

பூராடம்:

பூராடம் நட்சத்திரக்காரர்கள் குடை, நிழற்குடை போன்றவற்றை தானமாக வழங்கலாம். தங்குவதற்கு இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.

உத்திராடம்:

உத்திராட நட்சத்திரக்காரர்கள் யானை வைத்திருக்கும் கோவில்களுக்கு சென்று  கோவில்களில் இருக்கும் யானைகளுக்கு சாப்பிடுவதற்கு வெல்லம், தேங்காய் போன்ற யானைக்கு செய்யும் உணவுகளுக்கு தானம் செய்யலாம்.

திருவோணம்:

திருவோணம் நட்சத்திரக்காரர்கள் காது கேளாதவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்.

அவிட்டம்:

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாதிக்க முடியாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். ஏழை குழந்தைகளுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் எந்த உதவி செய்து வந்தாலும் நிறைய நன்மைகள் உண்டாகும்.

சதயம்:

சதயம் நட்சத்திரக்காரர்கள் அபிஷேகம் சம்பந்தப்பட்ட பொருட்களை கோவில்களுக்கு தானமாக அளிக்கலாம்.

பூரட்டாதி:

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் குழந்தைகள் ஆசிரமத்திற்கு உங்களால் முடிந்த வஸ்திரங்களை தானமாக அளிக்கலாம். அல்லது ஏழைகள் திருமண உதவி, திருமணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பொருள் உதவி செய்யலாம்.

உத்திரட்டாதி:

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை அல்லது அவர்களுக்கு தேவையான ஏதாவது ஒரு உதவி செய்து வந்தால் நிச்சயம் நிறைய நன்மைகள் நடக்கும். மேலும் கைத்தொழில் செய்து வருபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்.

ரேவதி:

ரேவதி நட்சத்திரக்காரர்கள் மங்கள வாத்தியம் வாசிப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும், பராமரிக்கப்படாமல் இருக்கும் கோவில்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்வதும் நன்மைகள் பெற்றுத்தரும். மேலும், விளக்கு ஏற்றுவதற்கு நல்லெண்ணெய் வாங்கி கொடுத்தாலும் அது நன்மை தரும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement