சிவன் விரதம்..!
சிவபெருமானை வணங்கக்கூடிய, வழிபட கூடிய, மிகவும் முக்கியமான விரதம் கார்த்திகை மாதம் திங்கள் கிழமை அன்று எடுக்கப்படும் சிவன் விரதம், இந்த சோமவார விரதமாகும். சோமவாரம் என்பது திங்கள் கிழமையை குறிக்கும். திங்கள் கிழமை என்பது சந்திரனுக்கு உரிய நாளாகும். சோமவார விரதம் என்பது வருடம் முழுவதும் அதாவது ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. ஆனாலும் கார்த்திகை மாதத்துச் சோமவாரங்கள் (திங்கட்கிழமைகள்) தனிச் சிறப்புமிக்கவை.
இந்த நாட்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா விமரிசையாக நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீர் நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்த நீரால் சிவபெருமானுக்குத் திருமுழுக்காட்டு செய்கிற காட்சி சிலிர்க்க வைக்கும்.
கார்த்திகை சோமவார தினங்களில் இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், சிவாலயங்களில் அருளும் ஸ்ரீசந்திரசேகர மூர்த்திக்கு வெண்மை நிற மலர்கள் சூட்டி, வெண்பட்டாடை அணிவித்து வழிபட்டால், ஆயுள் பலம் பெருகும். விருத்தி அடையும். மன அமைதி கிட்டும். வம்சம் தழைத்தோங்கும்!
கார்த்திகை சோம வார நாளில், சங்காபிஷேக தரிசனம் செய்யுங்கள். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். சரி இப்போது சோமவார விரதம் இருக்கும் முறை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சோமவார விரதம் இருக்கும் முறை / சிவன் விரதம்: 1
சோமவார விரத நாளில் காலையில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி விரதத்தைத் தொடங்கலாம். இறைவனின் ஆயிரம் திருநாமங்களை கூறி வில்வத்தால் அர்ச்சித்தால் அனைத்து பாவங்களும் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய் நீக்கம், அகால மரண பயமின்மை என எல்லா நற்பலன்களையும் கார்த்திகை சோமவார விரதம் தரும்.
சிவன் விரதம்: 2
இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளிலாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும்.
சிவன் விரதம்: 3
ஆண்களும் இந்த விரதத்தை பின்பற்றலாம். பெண்கள் திருமணமாகாதவர்கள் நல்ல கணவன் வேண்டியும் (somavara vratham for marriage), திருமணமானவர்கள் கணவன் நோயில்லாமல் நீண்ட காலம் வாழவும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.
கணவன், மனைவி இருவருமாக இந்த விரதத்தை மேற்கொண்டு வந்தால் வாழ்வில் அனைத்து வளங்களும் கிட்டும். விரதமிருப்பவர்கள் மாலை வேளையில் சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானை மனமுருக வழிபட்டு வரலாம்.
சிவன் விரதம்: 4
திருமணமான பெண்கள் வீட்டிலோ அல்லது சிவாலயம் சென்றோ முழு நெல்லிக்கனியில் சிறிய துளையிட்டு அதில், நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றினால் செல்வம் பெருகும்.
சிவன் விரதம்: 5
அன்றைய தினம் முழுவதும் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை இடைவிடாது மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே இருந்தால் வாழ்வில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். ஆகவே, நாமும் கார்த்திகை மாத சோமவார விரதத்தைக் கடைப்பிடித்து சிவசக்தியின் அருளைப் பெறுவோமாக.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |