சொற்றுணை வேதியன் பாடல் வரிகள்
நாம் பள்ளி படிக்கும் போது தமிழ் பாடத்தில் பாடல்கள் அதிகமாக படித்திருப்போம். கம்பராமாயணம் பாடல்கள், சிலப்பதிகாரம் பாடல்கள், ஆண்டாள் அருளிய பாடல்கள், சீறாபுராணம் போன்றவற்றில் வரும் பாடல்கள் மற்றும் அதில் வரும் கதைகள் போன்றவற்றை படித்திருப்போம். அதில் வரும் கதைகளையும் நாம் அறிந்திருப்போம். ஆனால் படித்து முடித்ததும் அதில் உள்ள பாடலை சொல்லு என்றால் தெரியாது. அதை Google-லில் தான் Search செய்வோம். அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் தான் நம் பதிவில் தினந்தோறும் பாடல் வரிகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சொற்றுணை வேதியன் பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..
Sotrunai Vedhiyan Lyrics in Tamil pdf
சொற்றுணை வேதியன் பாடல் விளக்கம்:
பாடல் -1
சொற்றுணை வேதியன்
சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி
பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர்
கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது
நமச்சி வாயவே.
விளக்கம்:
புனிதமான சொற்கள் கொண்ட வேதங்களுக்குத் துணையாக இருந்து அவற்றை அருளியவனும், ஒளியாக இருந்து நமக்கு வழிகாட்டுபவனும் ஆகிய சிவபிரானின் பொன் போன்று பொலியும் இணையான திருவடிகளை நமது மனத்தினில் பொருந்த வைத்து நாம் கையால் தொழுது வழிபட்டால், கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் நாம் தள்ளிவிடப் பட்டாலும், நமக்கு பெரிய துணையாக இருந்து சிவபிரானின் திருநாமம் ஆகிய நமச்சிவாய நம்மை காப்பாற்றும்.
பாடல் -2
பூவினுக் கருங்கலம்
பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம்
அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங்
கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம்
நமச்சி வாயவே
விளக்கம்:
பூக்களுக்கு அணிகலனாகத் திகழ்வது தாமரை மலர். பசுக்களுக்கு ஆபரணம் போல் திகழ்வது சிவபிரான் மகிழ்ந்து நீராடும் பொருட்களை அளிக்கும் தன்மை, அரசர்களுக்கு அணிகலனகத் திகழ்வது நடுநிலை நெறி தவறாமல் நடந்து கொள்ளும் தன்மை. நாக்குகளுக்கு அரிய ஆபரணம் போல் திகழ்வது நமச்சிவாய மந்திரமாகும்.
பாடல் -3
விண்ணுற அடுக்கிய
விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை
யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே
விளக்கம்:
ஆகாயம் வரை மிகவும் உயரமாக கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள குவியல் ஆயினும், ஒரு தீப்பொறி அந்த அடுக்கினில் படர்ந்துப் பற்றிக்கொண்டால் அனைத்து கட்டைகளும் சாம்பலாக மாறி ஒன்றும் இல்லாத நிலை ஏற்படுவது போல், நாம் இந்த உலகினில் தொடர்ந்து செய்த பாவங்கள் எத்தனை ஆயினும் அவை அனைத்தையும் சுட்டெரிக்கும் தன்மை வாய்ந்து நமச்சிவாய என்னும் திருநாமம்.
பாடல் -4
இடுக்கண்பட் டிருக்கினும்
இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று
வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு
மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது
நமச்சி வாயவே
விளக்கம்:
எந்த வகையான இடுக்கண் தன்னை எதிர் நோக்கினும். அந்த இடுக்கண்களிலிருந்து நீர் என்னை விடுவிக்க வேண்டும் என்று எவரையும் இறைஞ்சும் நிலையில் நான் இல்லை. அருளின் வயமாகிய சிவபிரானின் நாமமாகிய நமச்சிவாய மந்திரம், மலையின் கீழ் மாட்டிக் கொண்டு எழமாட்டாத நிலையில் இருந்தாலும், அதனால் எனக்கு ஏற்படும் நடுக்கத்தை கெடுத்து காப்பாற்றும்.
பாடல் -5
வெந்தநீ றருங்கலம்
விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம்
அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந்
திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம்
நமச்சி வாயவே
விளக்கம்:
பல வகையான விரதங்களை மேற்கொண்டு தவம் செய்து மெய்ப்பொருளை நாடும் முனிவர்களுக்கு அழகு சேர்ப்பது அவர்கள் அணியும் விபூதியாகும்; அந்தணர்க்கு பெருமை சேர்ப்பது அவர்கள் நான்மறைகளையும் ஆறு அங்கங்களையும் கற்றுத் தேர்ந்தவராக இருத்தல்; சந்திரனுக்கு அழகு சேர்ப்பது அவன் சிவபெருமானைச் சரண் அடைந்து அவரது திருமுடியில் இடம் பெற்று இருக்கும் நிலை; சைவர்களாகிய நம் அனைவர்க்கும் பெருமை சேர்க்கும் அணிகலனாக விளங்குவது நமச்சிவாய மந்திரம் ஆகும்.
பாடல் -6
சலமிலன் சங்கரன்
சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு
நல்கு வான்நலன்
குலமில ராகிலுங்
குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது
நமச்சி வாயவே
விளக்கம்:
அனைவருக்கு ஒரே தன்மையாக காணப்படும் சிவபெருமான், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு எப்போதும் நன்மை செய்பவன்; சிவபிரான் தன்னைச் சாராதவர்களுக்கு நன்மை அளிக்காதவன். நற்குலத்தில் பிறவாதாரும், சிவபிரானின் நாமத்தை ஓதினால், அவர்களுக்கும் நற்குலத்தோர் அடையும் நன்மைகளை அளிப்பவன் சிவபெருமான்.
பாடல் -7
வீடினார் உலகினில்
விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி
கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென்
றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று
நமச்சி வாயவே
விளக்கம்:
வீடுபேறு அடையும் நோக்கத்துடன், உலகப் பற்றினை விட்டொழிந்த சிறந்த தொண்டர்கள் ஒன்று கூடி சிவநெறியைச் சிந்தித்தனர். நானும் அவர்களைப் பின்பற்றிச் சென்று அவர்கள் கூறிய அஞ்செழுத்து மந்திரத்தைப் பற்றினேன்; அந்த நமச்சிவாய மந்திரமும் என்னைப் பற்றிக்கொண்டு பல நன்மைகள் புரிந்தது.
பாடல் -8
இல்லக விளக்கது
இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது
சோதி யுள்ளது
பல்லக விளக்கது
பலருங் காண்பது
நல்லக விளக்கது
நமச்சி வாயவே
விளக்கம்:
நமச்சிவாய மந்திரம், நமது உள்ளத்தில் ஞான விளக்காக நின்று நம்மை பிணைத்திருக்கும் மலங்களை அகற்றும்; சொற்களுக்குத் துணையாக நின்று சொற்களுக்குப் பொருளை அளிக்கும்; என்றும் நிலைத்து நிற்பது, பல்லாயிரக் கணக்கான உயிர்களின் உள்ளே நிற்பது; பக்குவப் பட்ட நிலையில் நின்று பாசங்களை அறுத்த பலரும் காண்பது: நல்ல உள்ளங்களில் வீற்றிருப்பது ஆகும்.
பாடல் -9
முன்னெறி யாகிய
முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர
ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங்
கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது
நமச்சி வாயவே
விளக்கம்:
முதல்வனாகிய முக்கண்ணனே அனைவருக்கும் முன்னே தோன்றிய நெறியாவான். அத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபிரானின் செம்மையான நெறியை உறுதியுடன் சரணம் என்று வாழும் அடியார்களுக்கெல்லாம் மிகவும் நன்மை பயப்பதான வீடுபேறு எனப்படும் நன்னெறியினை அளிப்பது நமச்சிவாய என்னும் மந்திரமாகும்,
பாடல் -10
மாப்பிணை தழுவிய
மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி
பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய
நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக்
கிடுக்க ணில்லையே
விளக்கம்:
மான் கன்றினை இடது கையில் ஏந்தியும், இடது பாகத்தில் உமையம்மையை ஏற்றுக் கொண்டும் காட்சி அளிக்கும் சிவபிரானின் திருவடிகளை, அனைவரும் மலர்கள் தூவி வழிபடுவதால் எப்போதும் பூக்களுடன் இணைபிரியாது இருக்கும் திருவடிகளை நமது மனத்தினில் பொருத்தி, நமது நாவுடன் நமச்சிவாயப் பதிகத்தினை பிணைத்து சிவபிரானை புகழ்ந்து பாட வல்லவர்களுக்கு எத்தைகைய துயரங்களும் ஏற்படாது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |