ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் திருக்கோயிலின் சிறப்பு..!

srivilliputhur temple

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் (srivilliputhur temple) மிகவும் பழமை வாய்ந்தது. மேலும் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருஸ்தலமாகும்.

108 திவ்ய தேசங்களின் ஒன்றான வைணவ ஸ்தலமாக திகழ்கின்றது. மேலும் பன்னிரு ஆழ்வார்களில் இரண்டு பேர் ஒரே இடத்தில் வாழ்ந்த ஊராக ஸ்ரீவில்லிபுத்தூர்(srivilliputhur temple) திகழ்கிறது.

இந்த ஸ்தலத்தின் இராஜகோபுரம் தமிழக அரசின் சின்னமாக அமைந்துள்ளது மிகவும் சிறப்பாகும். முன்னொரு காலத்தில் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அடர்ந்த வனமாக காட்சியளித்திருக்கின்றது.

மேலும் இந்த கோயில் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில் வடபக்த்தர் சயனர் கோயில் அமைந்துள்ளது. வடபக்த்தர் சயனருக்குத்தான் ஆண்டாள் தன் மாலையை சூடி கொடுத்தால் என்று குருபரம்பரை நூல்கள் கூறுகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூர் இராஜகோபுரம் கிபி 765-ம் ஆண்டு முதல் 815-ம் ஆண்டுகளில் ஸ்ரீவல்லவதேவ மன்னரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கிபி 815-ம் நூற்றாண்டுகளில் மாவேலி வானாதுராயர் என்பவர் இந்த கோயிலை புதிப்பித்தும், விரிவுபடுத்தியும் திருப்பணிகள் செய்தார் என்று கூறப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் (srivilliputhur temple) வரலாறு:

முன்னொரு காலத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது, கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார்.

வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப் போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, இந்த நகரம், வில்லிப்புத்தூர் என்ற பெயர் பெற்றது.

இங்கே தான் ஆண்டாள் பிறந்து வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. பெரியாழ்வாரின் மகளாக பிறந்த ஆண்டாள், பெருமாளுக்கு சாற்றப்படும் பூவை, அவள் ஒவ்வொரு முறையும் அவள் தலையில் வைத்து அழகு பார்த்ததற்கு பின் கொடுத்திருக்கிறாள். இதனை அறியாத பெரியாழ்வார் பெருமாளுக்கு பூவை போட்டிருக்கிறார்.

ஒருமுறை பூவில் தலைமுடி இருப்பது கண்டு பெரியாழ்வார் அஞ்சி, அதை தவிர்த்து வேறு பூவை சூட்டினார். உடனே இறைவன், “ஆழ்வார்! கோதையின் கூந்தலில் சூட்டிய பூவையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு சூட்டு” என்றார். இன்றளவும் ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறுநாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்கு சாத்தப்படுகிறது.

மேலும் இந்த நகரம் “திருமகளே தெய்வீக குழந்தையாக ஆண்டாள்” என்று பிறந்ததின் காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பெயரிடப்பட்டது, அது திருமகளைக் குறிக்கும் வண்ணம் தமிழ் வார்த்தையான “திரு” என்ற அடைமொழி கொண்டு திருவில்லிப்புத்தூர்(srivilliputhur temple) என்று வழங்கப் பெற்றது.

சிதம்பரம் நடராசர் கோயிலின் ரகசியம் என்ன?

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் (srivilliputhur temple) சிறப்பு:

இத்தலத்தின் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக அமைந்துள்ளது மிகவும் சிறப்பாகும். இத்தலம் 108 திவ்ய தேசங்களில் 90 வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்தில் மூலவர் வடபத்ரசாயி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் மட்டுமே ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரே ஸ்தலத்தில் காட்சியளிக்கிறார்கள். உற்சவர் பெருமாள் பேண்ட், சட்டை அணிந்தும், முக்கிய விழாக்காலங்களில் வெள்ளை வேஷ்டி அணிந்தும் அருள்பாலிக்கிறார்.

திருப்பதி பெருமாளுக்கு புரட்டாசி 3 வது சனிக்கிழமை பிரம்மோற்சவத்துக்கு ஆண்டாளுக்கு சூட்டிய மாலை அணிவிக்கப்படுகிறது. இங்கு ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகர் அணிகிறார்.

இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம். தன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து கொடுத்த போது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம். இதன் அடிப்படையில் இத்தலத்தில் சுவாமிக்கு அருகில் கருடாழ்வார் இருக்கிறார்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம். ஆண்டாள் கோயில் கருவறையைச் சுற்றி முதல் பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் திருப்பாற்கடல், வைகுண்டம் பெருமாள் உட்பட அனைத்து பெருமாளையும் தரிசிக்கலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்(srivilliputhur temple) ஆண்டாள், பெரியாழ்வார், வடபத்ரசாய் ஆகிய மூன்று பேர் அவதரித்த தலம் என்பதால் “முப்புரிஊட்டியதலம்” என அழைக்கப்படுகிறது. ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை பாடினாள். இதில் திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார்திருமொழி 143 பாசுரங்களும் கொண்டுள்ளது.

ஸ்ரீனிவாசபெருமாளுக்கு திருப்பாவை என்ற பாசுரத்தால் பாமாலை பாடி பூமாலை சூடிக்கொடுத்ததால் “சூடிக்கொடுத்த நாச்சியார்” என்ற பெயரும் உண்டு. பெரியாழ்வார், நாச்சியார் பிறந்த இடம். தமிழ்நாடு அரசு சின்னத்தில் போடப்பட்டுள்ள கோபுரம் இக்கோவிலின் கோபுரம் என்பது கூடுதல் சிறப்பு. இக்கோவிலின் ராஜ கோபுரத்தை கட்டியவர் பெரியாழ்வார்.

ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய இவர், தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்று கூறுவர். அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றி கொண்டு, தாம் பெற்ற பொன் முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது.

11 நிலைகள், 11 கலசங்களுடன் இருக்கும் இக்கோபுரத்தின் உயரம் 196 அடி. பெரியாழ்வார் காலத்தில் ஒரு ரூபாய்க்கு 196 காசுகள் மதிப்பிருந்ததாம். இதன் அடிப்படையில் அவர், இந்த உயரத்தில் கோபுரம் கட்டியதாக சொல்கிறார்கள். ஆனால், என்ன காரணத்தாலோ பெரியாழ்வார் இக்கோபுரத்தை கட்டிய போது சிற்பங்கள் எதுவும் அமைக்கவில்லை. ஒரு சிலைகள் கூட இல்லாமல், தமிழர்களின் கட்டடக் கலையை எடுத்துக்காட்டும் விதமாக இருந்ததும், இக்கோபுரம் தமிழக அரசின் சின்னமாக இடம் பிடிக்க ஒரு காரணமாக அமைந்தது. ஸ்ரீவில்லிப்புத்தூரின் மற்றொரு அதிசயம் ஆடிப்பூரம் அன்று இழுக்கப்படும் அழகிய தேர் ஆகும்.

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலின் சிறப்புகள்..!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திறக்கப்படும் நேரம்:

காலை 6.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை (மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கும்).

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.