Thai Amavasai Sirapugal In Tamil
வாசிப்பாளர்களுக்கு வணக்கம்! ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது அன்றைய நாள் விரதம் இருந்து முன்னோர்களுக்கு உணவுகளை படைத்து வழிபடுவார்கள். மேலும் அமாவாசை நாட்களில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
அமாவாசை அன்று முன்னோர்கள் மற்றும் குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் நன்மை தரும். தை மற்றும் ஆடி அமாவாசை தனி சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. தை அமாவாசை ஏன் இவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
தை அமாவாசை என்றால் என்ன?
தை அமாவாசை என்பது மக்கள் முன்னோர்களை வழிபட்டு அவர்களிடம் இருந்து ஆசிர்வாதம் பெறுவார்கள். இந்த நன்னாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, பித்ரு பூஜை செய்வது, நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளைப் படைப்பது, ஏழை எளியோருக்கு அன்னதானம் கொடுப்பது, மற்றும் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்வது போன்ற விஷயங்களை செய்யலாம்.
தை அமாவாசை 2025 எப்போது?
தை மாதம் 16 ஆம் தேதி (January 29) அன்று தை அமாவாசை கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் முன்னோர்களை வழிபட்டு நற்பலன்களை பெறுங்கள்.தை அமாவாசையின் சிறப்புகள்:
- தை மாதத்தில், மகர ராசியில் சூரியன் பகவானோடு சேரும் இந்த நாளே தை அமாவாசை ஆகும்.
- இந்த நாளில் முன்னோர்களை வழிபடுவதனால் வாழ்வில் பல நன்மைகளை நாம் பெறலாம்.
- ஆடி அமாவாசை நாளில் பித்துருலோகத்தில் இருந்து வரும் நம் முன்னோர்கள், 6 மாத காலம் பூமியில் இருந்து நம்மை ஆசிர்வதித்த பின், தை அமாவாசை அன்று நம்முடைய மனப்பூர்வமான வழிபாட்டை ஏற்று கொண்டு முழுமனதோடு நம்மை ஆசிர்வதித்து பித்துருலோகம் செல்கின்றனர்.
- சூரியபகவான் தந்தையை குறிக்கும் கிரகம் என்பதால் அவரை பிதுர்காரகர் என்றும், சந்திரன் தாயை குறிக்கும் கிரகம் என்பதால் அவரை மாதுர்காரகர் என்றும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. இவர்கள் இருவரும் இணையும் அமாவாசை நாளானது பொதுவாகவே முன்னோர்கள் வழிபாட்டிற்கு உகந்த நாளாகும்.
- தை அமாவாசை நாளில் நாம் பிதுருக்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணம், திவசம் போன்றவற்றை செய்வதன் மூலம் ஏழேழு தலைமுறைகளை சேர்ந்த முன்னோர்களை மகிழ்விக்க முடியும். இதனால் நம் பிள்ளைகளுக்கும் நமக்கும் பல நன்மைகள் நடைபெறும்.
- தர்ப்பணம் கொடுக்கும் அளவிற்கு வசதி இல்லாதவர்கள், நமது முன்னோர்களை நினைத்து காகத்திற்கு உணவளிப்பது, பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது போன்ற காரியங்களை செய்யலாம்.
- இந்த நன்னாளில் குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அமாவாசை விரதம் யார் இருக்கலாம்?
- தாய், தந்தையை இழந்தவர்கள்
- கணவனை இழந்த பெண்கள்
- தாய், தந்தை மற்றும் உடன் பிறந்தவர்களை இழந்த பெண்களும் விரதம் இருக்கலாம்.
யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்கலாம்?
- பெற்றோர்களை இழந்த ஆண்கள்
- கணவனை இழந்த பெண்கள்
- பிள்ளைகளை இழந்த தந்தை அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |