திருப்பள்ளியெழுச்சி பாடல் 10 | Thirupalliyezhuchi Lyrics in Tamil With Meaning
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்களையும் இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் (இன்றைய ஆவுடையார் கோவில்) எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகத் திருப்பள்ளியெழுச்சியை அருளினார்.
திருப்பள்ளியெழுச்சி என்பது, ‘சுப்ரபாதம்’ என வடமொழியில் வழங்கும். வைகறையில்-அதிகாலைப் பொழுதில்- இருள்நீங்க ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய திரோதானமலம் அகல ஞானவொளி வெளிப்படுகின்ற முறைமையை இப்பாடல்கள் குறிக்கின்றன. மேலும், இது நம்முள் உறங்கும் இறைவனைத் துயில் எழுப்புவதுமாம். எனவே, அதிகாலை பொழுதில் திருப்பள்ளியெழுச்சி பாடல்களை துதித்து இறைவன் அருள் பெருவோம்.
திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள்:
மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சி| Manickavasagar Thirupalliyezhuchi:
பாடல் -1
போற்றி ! என்வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது ; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்!
சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
ஏற்றுயர் கொடியுடையாய்! எனை உடையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
பாடல் விளக்கம்:
என் வாழ்வுக்குத் தாரகமாகிய பொருளே! சேற்றினிடத்து இதழ்களையுடைய தாமரை மலர்கள் மலர்கின்ற குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த, திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! உயர்ந்த இடபக் கொடியை உடையவனே! என்னை அடிமையாக உடையவனே! எம் தலைவனே! வணக்கம். பொழுது விடிந்தது; தாமரை போலும் திருவடிகளுக்கு ஒப்பாக இரண்டு மலர் களைக் கொண்டு சாத்தி அதன் பயனாக உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்கு அருளோடு மலர்கின்ற அழகிய நகையினைக் கண்டு உன் திருவடியைத் தொழுவோம்; பள்ளி எழுந்தருள்வாயாக.
பாடல் -2
அருணன் இந்திரன் திசை அணுகினன்! இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த் திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள் நிரை அறுபதம் முரல்வன ;இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
அருள் நிதி தரவரும் ஆனந்த மலையே! அலைகடலே பள்ளி எழுந்தருளாயே!
பாடல் விளக்கம்:
பெரியோய்! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! அருட்செல்வத்தைக் கொடுக்க வருகின்ற இன்ப மலையே! அலைகளையுடைய கடல் போன்றவனே! சூரியன் தேர்ப் பாகன் இந்திரன் திசையாகிய கீழ்த்திசை அடைந்தான். இருள் முழுதும் நீங்கிவிட்டது. உதய மலையில் உனது திருமுகத்தினின்றும் தோன்று கின்ற கருணையைப் போல, சூரியன் மேல் எழுந்தோறும் உனது கண் போன்ற வாசனை பொருந்திய தாமரை விரிய, அவ்விடத்தில் பொருந் திய கூட்டமாகவும் வரிசையாகவும் விளங்குகின்ற வண்டுகள் இசை பாடுகின்றன. இவற்றைத் திருவுள்ளம் பற்றுக! பள்ளி எழுந்தருள்வாயாக.
பாடல் -3
கூவின பூங்குயில்;கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ! நற் செறிகழற் றாளிணை காட்டாய்; திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய்; எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
பாடல் விளக்கம்:
தேவனே! திருப்பெருந்துறை உறை சிவபெரு மானே! யாவரும் அறிதற்கு அரியவனே! எங்களுக்கு எளியவனே! எம் தலைவனே! அழகிய குயில்கள் கூவின; கோழிகள் கூவின; பறவைகள் ஒலித்தன; சங்குகள் முழங்கின; நட்சத்திரங்களின் ஒளி மங்கியது. உதய காலத்து வெளிச்சம் தோன்றுகிறது. எமக்கு அன்புடன் சிறந்த நெருங்கிய வீரக்கழலை அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டுவாயாக! பள்ளி எழுந்தருள்வாயாக.
பாடல் -4
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்! இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்; திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே !
பாடல் விளக்கம்:
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! அடியேனையும் அடிமை கொண்டு, இனிய அருளைச் செய்கின்ற எம் தலைவனே! இனிய ஓசையையுடைய வீணையை யுடையவரும் யாழினையுடையவரும் ஒரு பக்கத்தில், வேதங்களோடு தோத்திரம் இயம்பினர் ஒருபக்கத்தில்; நெருங்கிய தொடுக்கப்பட்ட மலர்களாகிய மாலைகளை ஏந்திய கையை உடையவர் ஒரு பக்கத்தில்; வணங்குதலை உடையவரும், அழுகை உடையவரும், துவளுதலை உடையவரும் சூழ்ந்து ஒரு பக்கத்தில்; தலையின் மீது, இருகைகளையும் குவித்துக் கும்பிடுபவர் ஒரு பக்கத்தில் உள்ளார். அவர்களுக் கெல்லாம் அருள்புரிய பள்ளி எழுந்தருள்வாயாக.
பாடல் -5
“பூதங்கள் தோறும் நின்றாய்! “எனின் அல்லால் “போக்கிலன் வரவிலன்” என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீத்ங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும் அரியாய்!எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
பாடல் விளக்கம்:
குளிர்ச்சியைக் கொண்ட, வயல் சூழ்ந்த திருப் பெருந்துறைக்கு அரசனே! நினைத்தற்கும் அருமையானவனே! எங்கள் எதிரில் எழுந்தருளி வந்து, குற்றங்களைப் போக்கி எங்களை ஆட்கொண்டருளுகின்ற எம் பெருமானே! உன்னை, எல்லாப் பூதங்களிலும் நின்றாய் என்று பலரும் சொல்வதும், போதலும் வருதலும் இல்லாதவன் என்று அறிவுடையோர் இசைப்பாடல்களைப் பாடுவதும்; ஆனந்தக் கூத்தாடுவதும் தவிர உன்னை நேரே பார்த்தறிந் தவர்களை நாங்கள் கேட்டு அறிந்ததும் இல்லை. ஆயினும், நாங்கள் நேரே காணும்படி பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.
பாடல் -6
பப்பற வீட்டிருந் துணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா!
செப்புறு கமலம் கண் மலருந்தண்வயல் சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
பாடல் விளக்கம்:
உமையம்மைக்கு மணவாளனே! கிண்ணம் போன்ற தாமரை மலர்கள் விரியப்பெற்ற குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! இந்தப் பிறவியை நீக்கி எங்களை ஆட்கொண்டு அருள் செய்கின்ற எம் பெருமானே! மனவிரிவு ஒடுங்க பற்றற்று இருந்து உணருகின்ற உன் அன்பர்கள் உன்பால் அடைந்து பிறவித்தளையை அறுத்தவராய் உள்ளவர்களும் மை பொருந்திய கண்களையுடைய பெண்களும் மனித இயல்பில் நின்றே உன்னை வணங்கி நிற்கின்றார்கள்; பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.
பாடல் -7
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் ;
இதுஅவன் திருவுரு,இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச மங்கையுள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப் பணிகொள்ளும் ஆறு?அது கேட்போம்; எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
பாடல் விளக்கம்:
பழம் பொருளானது கனியின் சுவைபோன்றது எனவும், அமுதத்தை ஒத்தது எனவும் அறிவதற்கு அருமையானது எனவும், அறிதற்கு எளிமையானது எனவும் வாதிட்டு, தேவரும் உண்மையை அறியாத நிலையில் எம்பெருமான் இருப்பார்; இதுவே அப்பரமனது திருவடிவம்; திருவுருக்கொண்டு வந்த சிவனே அப்பெருமான், என்று நாங்கள் தெளிவாகச் சொல்லும் படியாகவே, இவ்வுலகத்தில் எழுந்தருளுகின்ற, தேன் பெருகுகின்ற சோலை சூழ்ந்த திருவுத்தரகோசமங்கையில் எழுந்தருளி இருப்பவனே! திருப் பெருந்துறைக்கு அரசனே! எம் பெருமானே! எம்மைப் பணி கொளும் விதம் யாது? அதனைக் கேட்டு அதன்படி நடப்போம். பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.
பாடல் -8
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்! மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்?
பந்தணை விரலியும் நீயும் நின் அடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித் திருப்பெருந்துறை யுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்! ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
பாடல் விளக்கம்:
அருமையான அமுதமே! எப்பொருளுக்கும் முற்பட்ட முதலும், நடுவும் முடிவும் ஆனவனே! மும்மூர்த்திகளும் உன்னை அறியமாட்டார்; வேறு யாவர் அறியக்கூடியவர். பந்தை ஏந்திய விரல்களை உடைய உமையம்மையும் நீயுமாக உன்னுடைய அடியார்களுடைய பழைய சிறு வீடுதோறும் எழுந்தருளின மேலானவனே! சிவந்த நெருப்பை ஒத்த வடிவத்தையும் காட்டித் திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற திருக்கோயிலையும் காட்டி, அழகிய தண்ணிய அருளாளன் ஆதலையும் காட்டி வந்து ஆட்கொண்டவனே! பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.
பாடல் -9
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உனதொழுப் படியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே வண்திருப் பெருந்துறையாய் வழி அடியோம்
கண்ணகதே நின்று களிதரு தேனே! கடலமுதே!கரும்பே!விரும்படியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
பாடல் விளக்கம்:
விண்ணில் வாழும் தேவர்களும், அணுகவும் முடியாத, மேலான பொருளாயுள்ளவனே! உன்னுடைய தொண் டினைச் செய்கின்ற அடியார்களாகிய எங்களை மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே! பரம்பரை அடியாராகிய எங்களுடைய கண்ணில் களிப்பைத் தருகின்ற தேன் போன்றவனே! கரும்பு போன்றவனே! அன்பு செய்கின்ற அடியவரது எண்ணத்தில் இருப்பவனே! உலகம் அனைத்துக்கும் உயிரானவனே! பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.
பாடல் -10
“புவனியிற் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று” நோக்கித் திருப்பெருந் துறையுறைவாய்!திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்! ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!
பாடல் விளக்கம்:
திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே! திருமாலாகிய அவன், பூமியில் சென்று பிறவாமையினால் யாம் வீணாகவே நாளைக் கழிக்கின்றோம்; இந்தப் பூமியானது சிவபெருமான் நாம் உய்யும்படி அடிமை கொள்கின்ற இடமென்று பார்த்து விருப்பத்தை அடையவும், பிரமன் ஆசைப்படவும் அர்ச்சிக்கவும் உனது பரந்த உண்மையான திருவருட்சத்தியும், நீயுமாகப் பூமியில் எழுந்தருளி வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே! அருமையான அமுதம் போன்றவனே! திருப்பள்ளி யினின்றும் எழுந்தருள்வாயாக.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |