Vaikasi Visakam Valipadu in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக வைகாசி விசாகம் வழிபாட்டு முறைகள் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக வைகாசி விசாகம் என்றால் என்ன என்று நம் அனைவருக்குமே தெரியும். தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு விசேஷமான நாளாக வைகாசி விசாகம் இருக்கிறது. ஆகவே இந்த வைகாசி விசாகத்தன்று முருக பெருமானை வழிபடுவதால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
அப்படி சகல நன்மைகளை தரும் வைகாசி விசாகம் இந்த 2024 ஆண்டு தமிழ் தேதியான வைகாசி மாதம் வைகாசி 09 ஆம் தேதி வருகிறது. அதுவே ஆங்கில தேதி என்று பார்த்தால், மே 22 ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. ஆகவே இந்த தினத்தில் அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷமாக இருக்கும். எனவே நாம் இந்த பதிவின் வாயிலாக வைகாசி விசாகம் வழிபாட்டு முறைகள் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வைகாசி விசாகம் எப்போது 2024 தேதி மற்றும் நேரம்
வைகாசி விசாகம் வழிபாடு:
பொதுவாக வைகாசி விசாகத்தன்று முருக பெருமானை வழிபட்டால் சகல வெற்றிகள் வந்து சேரும் என்பது ஐதீகம். இவ்வுலகில் நடக்கும் தீமைகளை அழிப்பதற்காக சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் தான் முருக பெருமான்.
இந்த அவதாரம் நிகழ்ந்தது வைகாசி விசாக நாளில் தான். ஆகவே எப்படி பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் வருவது போல, தை மாதத்தில் தைப்பூசம் வருவது போல, கார்த்திகை மாதத்தில் கார்த்திகை வருவது போல, வைகாசி மாதத்தில் வரும் இந்த வைகாசி விசாகமும் முருக பெருமானுக்கு உகந்த நாளாக இருக்கிறது.
- எனவே இந்த நன்னாளில் அதிகாலையில் எழுந்து குளிக்க வேண்டும்.
- வீடு மற்றும் பூஜை அறைகளை சுத்தம் செய்து, கோலமிடவேண்டும்.
- விளக்கு போன்ற பூஜை பொருட்களுக்கு சந்தனம் குங்குமமிட்டு விளக்கேற்ற வேண்டும்.
- முருகப் பெருமானுக்கு செந்நிற பூக்கள் உகந்தவை. ஆகவே அரளி, செம்பருத்தி முதலான மலர்களைக் கொண்டு முருக பெருமானை அலங்கரிக்க வேண்டும்.
- கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம்.
- இந்த வைகாசி விசாகத்தன்று முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு, பின் அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வரலாம்.
- முருக பெருமானின் ஆலயங்களுக்கு சென்று அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் அற்புதப் பலன்கள் கிடைக்கும்.
- வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமான் படத்தை வைத்து வழிபடலாம்.
- இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். சகல செல்வங்கள் சேரும்.
வைகாசி விசாகம் சிறப்புகள்:
- வைகாசி விசாகம் என்பது முருக பெருமான் அவதரித்த நன்னாளாகும்.
- விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்கள் என்று சொல்லப்படுகிறது. ஆகவே இந்த விசாகத்தன்று ஆறு முகங்களுடன் முருக பெருமான் தோன்றியதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
- இந்த வைகாசி விசாகத்தன்று தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- முருகன் கோவில்களில் அலங்காரம் செய்து, கொடிமரங்கள் வண்ண மலர்களால் அலங்கரித்து வழிபடுவார்கள்.
- அனைவரும் கோவில்களுக்கு சென்று முருக பெருமானை வழிபடுவார்கள்.
- அனைத்து முருகன் கோவில்களிலும் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், பூஜைகள் நடைபெறும்.
- இந்த நன்னாளில் பல பக்தர்கள் திருச்செந்தூர், பழனி என்று பாதயாத்திரை சென்று முருக பெருமானை வழிபடுவார்கள்.
- கோவில்களில் முருகன் பக்தி பாடல்கள், நடனங்கள் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும்.
- முருகன் கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
ஆகவே இந்த நன்னாளில் முருக பெருமானை மனதார வழிபட்டு விரதம் இருந்தால், நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |