மாசி மகம் அன்று எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்.?
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மாசி மகம் அன்று எந்த தெய்வத்தை வழிபடுவது மிகவும் சிறப்பு என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். பொதுவாக, இந்துக்கள் பண்டிகைகளில் வரக்கூடிய ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு கடவுளை வணங்குவதற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அதாவது. சிவராத்திரி என்றால் சிவனை வழிபடுவதற்குரிய நாள், தைப்பூசம், சஷ்டி, கிருத்திகை என்றால் முருகருக்கு உகந்தது. நவராத்திரி என்றால் அம்மனுக்கு உகந்த நாள். சங்கடசதுர்த்தி என்றால் விநாயகரை வழிபட உகந்த நாள், ஏகாதசி என்றால் பெருமாளுக்கு உகந்த நாள். இப்படி ஒவ்வொரு தெய்வத்தையும் வழிப்படுவதற்கென்று ஒரு நாள் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கிறது.
இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால், நம்மில் பலருக்கும் மாசி மகம் எந்த தெய்வத்திற்கு உரியது என்று இன்னும் தெரியாமலே இருக்கிறது. மாசி மகத்தில் எந்த கடவுளை வழிபட வேண்டும் என்ற கேள்வி அனைவரது மனதிலும் இருக்கதான் செய்கிறது. ஆகையால், இந்த பதிவின் வாயிலாக மாசி மகத்தில் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்பதை படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
மாசி மகம் வரலாறு பற்றி தெரியுமா.?
Which Deity Should be Worshipped on Masi Magam.?
மாசி மகம் என்பது, மாசி மாத பௌர்ணமியுடன் மக நட்சத்திரம் கூடிவரும் நாளாகும். இந்நாள் பல வகையிலும் சிறப்பு பெற்றது. குறிப்பாக மாசி மாத மகம் நட்சத்திரத்தில் தான் புனித நதிகள், தங்களின் பாவங்களை போக்கி, தங்களை புதுப்பித்து கொள்கிறது. அதனால் தான் இந்நாளில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
புராணங்களில், தட்சனின் மகளாக பார்வதி தேவி தாட்சாயினியாக அவதரித்தாள் என்று கூறப்படுகிறது. வருண பகவான், சிவபெருமானை வேண்டி தோஷ நிவர்த்தி பெற்ற நாள் என்றும் கூறப்படுகிறது. மேலும், முருகபெருமான் தன்னுடைய தந்தையான சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது. இப்படி பல சிறப்புகளை பெற்ற மாசி மகத்தில் அனைத்து கடவுள்களையும் வழிபடலாம். ஆனால், பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள தெய்வங்களை கட்டாயம் வழிபட வேண்டும்.

குல தெய்வம்:
மாசி மகம் அன்று அனைத்து தெய்வங்களையும் வழிபட்டாலும் முதலாவதாக குலதெய்வத்தை வழிபட வேண்டும். குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடிந்தவர்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்யலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
முன்னோர்கள் வழிபாடு:
மகம் நட்சத்திரத்தை பித்ருதேவா நட்சத்திரம் என்று கூறுவார்கள். மாசி மகம் நாளில் நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள் போன்ற இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் நல்லது.
சிவபெருமான்:
மாசி மகம் நாளில் சிவபெருமான் வருண பகவானுக்கு, சாப விமோசனம் அளித்தார். எனவே, மாசி மகத்தில் சிவன் கோவிலுக்கு சென்று, சிவனை வழிபடுவது சிறப்பு.
முருகன் வழிபாடு:
முருகன், தன் தந்தையான சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை கூறி உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் முருகப்பெருமானை மாசி மகம் அன்று வழிபட்டால் நல்ல பலன்களை பெறலாம்.
அம்மன் வழிபாடு:
மாசி மகத்தில் தான் தட்சனின் மகளாக பார்வதி தேவி தாட்சாயினியாக அவதரித்தாள். அதனால் இந்நாளில் பெண்கள் அம்மனுக்கு விரதம் இருந்து அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பு.
பெருமாள் வழிபாடு:
மாசி மகத்தன்று பெருமாள், பாதாளத்தில் இருந்த பூமியை வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்தார். எனவே, மாசி மகத்தன்று பெருமாளை வழிப்படுவதும் சிறப்பு.
நவக்கிரகம் – கேது பகவான்:
மாசி மகம் நாளில் நவகிரகங்களில் கேது பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பு. கேது பகவான் ஞானமும், முக்தியும் அளிபபவர். இவர் மகம் நட்சத்திற்கு அதிபதி. எனவே, இந்நாளில் கேதுபகவானை வழிபட்டால் அறிவாற்றல் பெருகும். ஆக மொத்தத்தில் மாசி மகம் அன்று அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு அவர்களின் அருளையும் ஆசியையும் பெறலாம்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |













