ஆட்டு குட்டி நோய்கள் | Goat Diseases and Treatment in Tamil

Advertisement

ஆடுகளுக்கு ஏற்படும் நோய்கள்

இன்றைய சூழலில் கால்நடை வளர்ப்பு தொழிலில் எல்லோரையும் கவர்ந்து இருக்கக்கூடிய தொழில் என்றால் ஆடு வளர்ப்பு தான். ஏனென்றால் ஆடு வளர்ப்பு தொழில் என்பது அதிக லாபத்தை கொடுக்கக்கூடியது. நாம் உயிரினங்களை எந்த அளவிற்கு பாதுகாப்பாக வளர்க்கிறோமோ அந்த அளவிற்கு உயிரினங்கள் நெடுநாள் வாழும். மனிதர்களை நோய்கள் தாக்குவது போன்றே ஆடு, மாடு, கோழி இனங்களையும் நோய்கள் எளிதாக தாக்கும். அப்படி இந்த பதிவில் ஆடுகளை எளிமையாக தாக்கக்கூடிய நோய்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

கால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை

லெப்டோ ஸ்பைரோஸிஸ்:

லெப்டோ ஸ்பைரோஸிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு காய்ச்சல், இரத்த சோகை, மஞ்சள் காமாலை, இரத்தம் கலந்த சிறுநீர் இது மாதிரியான அறிகுறிகள் தென்படும். சிறுநீர் வழியே வெளியேற்றம் ஆகிற நோய்க்கிருமிகள் நீர்நிலைகளிலும், சதுப்பு நிலங்களிலும் ரொம்ப நாட்களுக்குத் தங்கியிருக்கும்.

இதன் மூலமாக பிற ஆடுகளுக்கும், மனிதர்களுக்கும் கூட இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் சதுப்பு நிலங்களில் ஆடுகளை மேய்க்காமல் இருப்பது நல்லது. இந்த நோய்க்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை செய்து சரி செய்யலாம்.

ஜோனிஸ்:

இந்த ஜோனிஸ் நோயானது மைக்கோ பாக்டீரியம் பேரா ட்யூபர்குளோசிஸ் என்ற நுண்கிருமியால் ஏற்படுகிறது. இந்த நோய் குட்டி ஆடுகளின் உடம்பில் இணைந்து பெரிதாக ஆடு வளர்ச்சி அடைந்தவுடன் இந்த நோய் தாக்கும். குறிப்பாக இந்த நோய் பாதிப்படைந்த ஆடுகள் மூலம் மனிதர்களையும் தாக்கலாம்.

ஆடுகளின் குடல் பகுதியைத் தாக்கி நோய் உண்டாகுவதால், தொடர்ந்து துர்நாற்றம் ஏற்பட்டு வயிற்றுப்போக்கு பிரச்சனை இருக்கும். இதனால் ஆடுகளின் உடலானது மெலிந்துகொண்டே போகும். சில சமயங்களில் ஆட்டின் உடலில் அதிகமாக வீக்கம் இருக்கும். இந்த நிலையிலே இருந்து கடைசியில் ஆடு இறந்துவிடும். இதை ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தடுக்கலாம்.

குளம்பு அழுகல்:

குளம்பு அழுகல் நோயானது “ப்யூசிபார்மிஸ் நோடோசஸ்” என்ற நுண்கிருமியால் ஏற்படுகிறது. ஆடுகளின் கொட்டகை பகுதியில் சகதி இருந்தால் கிருமிகள் ஆங்காங்கே பரவி ஆடுகளின் குளம்பு பகுதியை தாக்கி புண்களை ஏற்படுத்திவிடும். அந்த புண்களில் ஈக்கள் முட்டை வைப்பதினால் புழுக்கள் உண்டாகும். இதனால் ஆடுகள் நிற்க முடியாமல் வயல் பகுதிகளில் மண்டியிட்டு மேய்ச்சல் செய்யும். இதனாலையே ஆடுகள் உடல் இளைத்து இறந்துவிடும்.

ஆடுகளின் கொட்டகை பகுதியை சகதி இல்லாமல் காய்ந்த நிலையில் வைத்து பராமரிக்க வேண்டும். ஆடுகளின் குளம்பு அழுகல் பகுதியில் புழுக்கள் இருந்தால் அதை நீக்கி ‘டர்பன்டைன்’ எண்ணெயை பஞ்சில் நினைத்து கட்டுப் போட வேண்டும். கால்களைச் சுத்தமாகக் கழுவி, கிருமிநாசினியைத் தடவி வர வேண்டும். துத்தநாகக் கலவையை 5-10% தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட கால்களை நனைக்க வேண்டும்.

ரண ஜன்னி:

டெட்டனஸ் எனப்படும் ரண ஜன்னி நோய் “கிளாஸ்டிரீடியம் டெட்டனி” என்ற நுண்கிருமி நோயினால் ஆடுகளுக்கு ஏற்படுகிறது. நில பகுதிகளில் இருக்கும் கிருமிகள் காயங்கள் மூலமாக உடலில் சேர்ந்து நஞ்சையை ஏற்படுத்தும். இந்த நஞ்சானது இரத்தத்தில் கலந்தவுடன் சில நோயின் அறிகுறிகள் தென்படும்.

நோயின் அறிகுறிகளாக முதலில் கால் பகுதிகள் விரைத்து போய் காணப்படும். தசைகளில் நடுக்கத்தை ஏற்படுத்தும். தலை பகுதியானது ஒரு புறமாக திரும்பி தாடைகள் இறுகிவிடும். ஆடுகளுக்கு வாய் பகுதி திறக்க முடியாது. வாயிலிருந்து உமிழ்நீர் வடிந்துகொண்டே இருக்கும். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். மலச்சிக்கல் இருக்கும். சிறுநீர் விடாது. நோய் அறிந்த மூன்று முதல் நான்கு நாட்களிலே ஆடு இறந்துவிடும்.

இந்த நோயைக் கட்டுப்படுத்த ஆடுகளுக்கு முடிவெட்டும் போது காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். காயங்கள் ஏற்பட்டால் ‘டெட்டனஸ் டாக்ஸாய்டு’ என்ற தடுப்பூசி போட வேண்டும். காயத்தை சுத்தம் செய்துவிட்டு அதன் பிறகு மருந்து போட வேண்டும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement