கோவில் ஸ்டைல் புளியோதரை செய்வது எப்படி | kovil puliyodharai sadam eppadi seivathu

kovil puliyodharai sadam eppadi seivathu

புளி சாதம் செய்வது எப்படி | puli sadam seivathu eppadi

என்னதான் பக்குவமாக செய்தாலும் கோவிலில் கொடுக்கும் ஒரு தொன்னை புளி சாதத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. கோவில் புளி சாதத்திற்கு எப்போதும் ஒரு தனி மகிமை உண்டு. சிலர் கோவிலில் கொடுக்கும் அந்த புளி சாதத்திற்காகவே கடவுளை தரிசனம் செய்ய செல்வார்கள்😅. நம்முடைய வீட்டில் சாதம் குழம்பை கூட சுலபமாக செய்து விட முடியும். ஆனால், பக்குவமான முறையில் புளி சாதம் செய்வது என்றால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். கோவிலில் கொடுக்கும் அதே புளி சாதம் டேஸ்டிற்கு நம்முடைய வீட்டிலும் நாமே ஈசியாக செய்யலாம். வாங்க அதை எப்படினு பார்க்கலாம்.

மாங்காய் சாதம் மிக சுவையாக செய்வது எப்படி..!

தேவையான பொருள்:

  1. புளி – எலுமிச்சம்பழம் அளவு
  2. சாதம் – தேவையான அளவு 
  3. மிளகு – 2 ஸ்பூன்
  4. எள்ளு – 2 ஸ்பூன்
  5. கடுகு – 2 ஸ்பூன்,
  6. வெந்தயம் – 1/2ஸ்பூன்
  7. கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
  8. உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன்
  9. நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
  10. காய்ந்த மிளகாய் – 6
  11. வறுத்த வேர்க்கடலை – 1 கைப்பிடி
  12. முந்திரி பருப்பு – 10
  13. கருவேப்பிலை – 1 கொத்து
  14. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  15. மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
  16. உப்பு தேவையான அளவு
  17. பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்
  18. நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி 

செய்முறை விளக்கம்:

ஸ்டேப் 1: முதலில் ஒரு பெரிய எலுமிச்சம் பழம் அளவு புளியை தண்ணீரில் போட்டு ஊற வைத்து நன்றாக கரைத்து அதன் புளிக்கரைசலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஸ்டேப் 2: தங்களுக்கு தேவையான அளவிற்கு சாதத்தினை குழைவாக இல்லாமல்  உதிர் உதிராக வடித்து ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

ஸ்டேப் 3: அடுத்து மிளகு – 2 ஸ்பூன், எள்ளு – 2 ஸ்பூன், கடுகு – 2 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன், இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக தனி தனியாக கடாயில் போட்டு பக்குவமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.  எண்ணெய் ஊற்றாமல் டிரை ரோஸ்ட் தான் செய்ய வேண்டும்.

ஸ்டேப் 4: எந்த பொருளும் கருக விடக்கூடாது. அதேசமயம் வறுக்காமலும் இருக்கக் கூடாது. குறிப்பாக வெந்தயம் பிரவுன் கலரில் வறுபட்டு இருக்க வேண்டும். எல்லாப் பொருட்களையும் ஒரு ஸ்பூன் அளவிற்கு அளந்து எடுத்துக்கொள்ளுங்கள். (எல்லா பொருட்களையும் மொத்தமாக போட்டு வறுக்கக் கூடாது. அது சரியான பக்குவத்தில் வருபடாது. புளியோதரைக்கு சுவை தராது.)

ஸ்டேப் 5: வறுத்து வைத்துள்ள எல்லாப் பொருட்களையும் நன்றாக ஆற வைத்து அதன் பிறகு மிக்ஸியில் போட்டு பொடி தயார் செய்யவும். இந்தப் பொடி புளியோதரைக்கு போடப்போகும் பொடி. இதை மொத்தமாக நாம் அப்படியே புளியோதரையில் சேர்க்கப் போவதில்லை. தேவையான அளவு மட்டும் சேர்த்துக் கொண்டால் போதும். மீதியை பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம்.

ருசியான கேரட் குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி?

 

ஸ்டேப் 6: அடுத்ததாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். கடாயில் இப்போது புளிக்கரைசலை தாளிக்க வேண்டும். அதற்கு நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன் இந்த பொருட்கள் அனைத்தும் பொன்னிறத்திற்கு வரும்வரை வறுத்து எடுக்கவும். வறுபட்டதும் வறுத்த வேர்க்கடலை – 1 கைப்பிடி, முந்திரி பருப்பு – 10, கருவேப்பிலை – 1 கொத்து, இந்த 3 பொருட்களை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து முந்திரி பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டேப் 7: அடுத்து தனியாக கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை கடாயில் ஊற்றிக்கொள்ளவும். புளி கரைசலுடன் மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பை சிம்மில் வைத்து புளியின் பச்சை வாடை நீங்கும் வரை, புளி நன்றாக சுண்டி ஊற்றிய எண்ணெய் மிதந்து வரும் வரை புளியை காய்ச்ச வேண்டும். புளி தொக்கு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அனைத்து விடலாம்.

ஸ்டேப் 8: எல்லா புளிக் கரைசலையும் நாம் உடனே பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. நன்றாக ஆறிய பிறகு ஒரு பாட்டிலில் சேகரித்து பிரிட்ஜில் வைத்துக் கொண்டால் 15 நாட்களுக்கு கூட புளிக்கரைசல் வீணாகாமல் இருக்கும். இப்போது நமக்கு புளிக்கரைசல் தயாராகிவிட்டது. புளி சாதத்திற்கு தேவையான பொடியும் ரெடியாக இருக்கிறது.

ஸ்டேப் 9: வடித்து தனியாக வைத்துள்ள சாதத்தை ஒரு அகலமான பேசனில் போட்டு கொள்ளுங்கள். சாதத்திற்கு தேவையான புளிக்கரைசல், சாதத்துக்கு தேவையான புளியோதரை பொடி, இந்த இரண்டு பொருட்களையும் சாதத்தோடு சேர்த்து பக்குவமாக கலந்து, அதன் பிறகு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழைகளைத் மேலே தூவி, 5 நிமிடங்கள் அப்படியே தம் போட்டு வைக்கவும்.

ஸ்டேப் 10: சிறிது நேரம் கழித்து அனைவருக்கும் பரிமாறலாம். சுவையான கோவில் ஸ்டைல் புளியோதரை ரெடி. கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நீங்களும் உங்களுடைய வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்