பொன்னாங்கண்ணி கீரை கூட்டு,பொரியல், சூப் செய்வது எப்படி? Ponnanganni Keerai Recipe..!

பொன்னாங்கண்ணி கீரை நன்மைகள்..! Ponnanganni Keerai..!

Ponnanganni Keerai Recipe: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம்-ல் பொன்னாங்கண்ணி கீரையில் என்னென்ன வகையான உணவுகளை சமைக்கலாம் என்பதை பற்றித்தான் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளப்போகிறோம். பொன்னாங்கண்ணி கீரையில் நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, இரும்புச் சத்து, கால்ஷியம், பாஸ்பரஸ், புரதம் , சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் ஏ, சி போன்ற ஏராளமான சத்துக்கள் இந்த கீரையில் அடங்கியுள்ளது. “கீரைகளின் ராணி” என்று அழைக்கப்படுவது இந்த பொன்னாங்கண்ணியே. கீரை வகைகளை நாம் வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் பொன்னாங்கண்ணி கீரையில் என்னென்ன விதமான சமையல் செய்யலாம் என்று படித்தறியலாம்..!

newமுளைக்கீரையில் இத்தனை பயன்களா???

பொன்னாங்கண்ணி கீரை ரெசிபி | Ponnanganni Keerai Recipe:

Ponnanganni Keerai Poriyal / பொன்னாங்கண்ணிக் கீரை பொரியல்:

Ponnanganni Keerai Poriyal

தேவையான பொருள்: பொன்னாங்கண்ணிக் கீரை – 1 கட்டு, பாசிப்பருப்பு – 25 கிராம், பூண்டு – 5 பல், பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், எண்ணெய்

செய்முறை:

பொன்னாங்கண்ணி கீரை பொரியல் செய்வதற்கு பாசிப்பருப்பு சிறிதளவு எடுத்து அரை வேக்காடு அளவிற்கு வேகவைத்து கொள்ளவும். அதன் பிறகு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளதை சேர்த்து கீரையினை அதில் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

அதன் பின் லேசாக வதங்கிய பிறகு தயாராக உள்ள பாசிப்பருப்பை சேர்த்து கிளறவும். அடுத்ததாக இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து, பொட்டுக்கடலை, பூண்டு, காய்ந்த மிளகாயை மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து பொரியலில் சேர்த்துவிடவும். பொன்னாங்கண்ணி கீரை பொரியல் ரெடி.

Ponnanganni Keerai Kootu/ பொன்னாங்கண்ணிக் கீரை கூட்டு எப்படி செய்வது:

Ponnanganni Keerai Kootu

தேவையான பொருள்: பொன்னாங்கண்ணிக் கீரை – 1 கட்டு, சிறுபருப்பு – 50 கிராம், பூண்டு பல் – 10, வெங்காயம் – 2, தக்காளி – 1, வர மிளகாய் – 5, கடுகு, உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன், தேங்காய் – அரை கப், சீரகம் – 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – சிறிதளவு, கருவேப்பிலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவிற்கு.

செய்முறை:

பொன்னாங்கண்ணி கீரையை கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்ததாக சிறு பருப்பை கழுவி 15 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும். அதன்பிறகு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சீரகம், வரமிளகாய் மூன்றனையும் ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

இப்போது கடாயில் குக்கர் வைத்து 15 நிமிடம் ஊற வைத்துள்ள சிறு பருப்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பூண்டு பல், மஞ்சள் தூள், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.

வேகவைத்த பிறகு அதனுடன் கீரையினை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும். கீரை நன்றாக கொதித்து வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவலை இப்போது சேர்க்கவேண்டும். தேங்காய் துருவல் சேர்த்த பிறகு 5 நிமிடம் நன்றாக கொதித்த பின்னர் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விட்டு, பின்னர் இரண்டு வரமிளகாய்களை கில்லி போடவும். லேசாக வறுபட்டதும் தாளித்து கொட்ட வேண்டும். அவ்ளோதாங்க சூப்பரான பொன்னாங்கண்ணி கீரை கூட்டு தயார்..!

Ponnanganni Keerai Soup/ பொன்னாங்கண்ணிக் கீரை சூப் செய்வது எப்படி:

Ponnanganni Keerai Soup

தேவையான பொருள்: பொன்னாங்கண்ணிக் கீரை – 1 கப், தனியா – 1 டீஸ்பூன், இஞ்சி – 1 துண்டு, மிளகு – 1/2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பொன்னாங்கண்ணி கீரை சூப் செய்வதற்கு முதலில் இஞ்சியை சுத்தமாக கழுவிய பிறகு இஞ்சியின் மேல் தோலினை சீவி துருவி எடுத்துக்கொள்ளவும். அதன் பிறகு மிளகினை ஒன்று இரண்டாக உடைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.

அடுத்ததாக பொன்னாங்கண்ணி கீரையினை சிறியதாக நறுக்கி கழுவி வைத்துக்கொள்ளவும். இப்போது சூப் தயார் செய்வதற்கு அடுப்பை ஆன் செய்து கடாயில் 1 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் துருவி வைத்துள்ள இஞ்சி, உடைத்து வைத்துள்ள மிளகு, தனியா, தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் கொதிக்கும்போதே நறுக்கி வைத்துள்ள கீரையினை சேர்த்து அடுப்பினை 2 நிமிடம் மூடி வைக்கவும். இப்போது அந்த கீரையின் சாறானது கொதிநீரில் இறங்கிவிடும். ஈஸியான பொன்னாங்கண்ணி சூப் தயாராகிவிட்டது.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal