தேசிய கீதம் பாடல் அர்த்தம் | Desiya Geetham Song Meaning in Tamil
தேசிய கீதமானது இந்திய நாட்டுப்பண் ஆகும். இந்த தேசிய கீதத்தை பாடுவதற்கு மொத்தம் 52 வினாடிகள் ஆகும். தேசிய கீதம் பாடல் முதன் முதலில் கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரசு மாநாடு நடக்கும்போது 1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார். ஜனவரி 24, 1950 ஆம் ஆண்டு தான் “ஜன கன மண’ இந்தியாவின் தேசிய கீதமாகவும், “வந்தே மாதரம்’ தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது. தேசிய கீதத்தை பாடும்போது ஆடாமல் நேராக நின்று மரியாதையுடன் பாட வேண்டும். தேசிய கீதத்தை ஒரு நிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது. இந்திய நாட்டில் பிறந்த அனைவருமே தேசிய கீதம் பாடலின் வரிகளை தெரிந்திருக்காமல் இருக்கமாட்டோம். ஆனால் அந்த பாடலின் ஒவ்வொரு வரிகளுக்கும் அர்த்தம் தெரியுமா என்று கேட்டால் பலரிடமும் பதில் இல்லை. வாங்க இந்திய நாட்டின் தேசிய கீதம் பாடலையும் அவற்றிற்கான அர்தத்தினையும் படித்து தெரிந்துக்கொள்ளலாம்..
தமிழ்த்தாய் வாழ்த்து முழு பாடல் வரிகள் |
தேசிய கீதம் தமிழ் பாடல் வரிகள்:
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத மராத்தா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ சுப நாமே ஜாகே,
தவ சுப ஆஷிஷ மாகே,
ஜாஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.
தேசிய கீதம் பாடல் அர்த்தம்:
ஜன கண மன அதிநாயக ஜய ஹே: மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே!
பாரத பாக்ய விதாதா: இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.
பஞ்சாப சிந்து குஜராத மராத்தா: ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் – பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.
புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் – சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.
பகவான் கிருஷ்ணனின் ராஜ்ஜியம், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறப்பிடம் – குஜராத் மாநிலம் உன்னுடையது .
வீர சிவாஜியின் பிறப்பிடம், தற்கால இந்தியாவின் தலைவாசல் – மராட்டிய மாநிலம் உன்னுடையது.
திராவிட உத்கல வங்கா: பழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் – திராவிட பீடபூமி உன்னுடையது.
பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற சிறந்த கலைச்செல்வங்களாகிய கோவில்கள் இருக்கும் இடம், பழங்காலத்து கலிங்க தேசம் – உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம் உன்னுடையது.
இந்திய விடுதலையின் பிறப்பிடம், நூதன இந்தியாவின் மூளை, பெரும் ஞானிகள் பிறந்த தேசம் – பழம்பெருமை மிக்க வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது.
விந்திய இமாசல யமுனா கங்கா: வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் நடுவே அமைந்த இயற்கை எல்லை, மிகப் பெரியது என்றும் கடக்க முடியாதது என்றும் ஒரு காலத்தில் எண்ணப்பட்ட மலை, பல புராணக் கதைகளின் இருப்பிடம் – விந்திய மலை உன்னுடையது.
மாபெரும் மலைத்தொடர், அசலம் (அசையாதது) என்னும் சொல்லுக்கு ஒரு மாபெரும் உதாரணம், இந்தியத் தேசத்தின் இயற்கை எல்லை, மகரிஷிகளும் சாதுக்களும் வாழும் இறையாலயம், புராணக்கதைகளின் நாயகன், உலகின் மிகப் பெரிய சிகரத்தைக் கொண்ட மலைத்தொடர் – இமய மலை உன்னுடையது.
இந்தியத் திருநாட்டின் மாபெரும் சமவெளியை தழைத்தோங்கச் செய்யும் இரு நதிகள், இந்தியர்களின் ஆன்மத் தாயார்கள் – கங்கையும் யமுனையும் உன்னுடையவை.
உச்சல ஜலதி தரங்கா: மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன.
தவ சுப நாமே ஜாகே: உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.
தவ சுப ஆஷிஷ மாஹே: உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.
காஹே தவ ஜய காதா: உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்.
ஜன கண மங்கல தாயக ஜய ஹே: இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
பாரத பாக்ய விதாதா: இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.
ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே!: வெற்றி உனக்கே! வெற்றி உனது நல்வழி செல்லும் மக்களுக்கே! வெற்றி உன் மங்கலகரமான கொள்கைகளுக்கே! வெற்றி உன் ஈடு இணையற்ற தத்துவச் செல்வங்களுக்கே! வெற்றி உன் பன்மைத் தன்மைக்கே! வெற்றி உன் அமைதியை விரும்பும் குணத்திற்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |