நெல்லையில் பாயும் நதி
நண்பர்களுக்கு வணக்கம்.. திருநெல்வேலி அல்லது நெல்லை என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். திருநெல்வேலி மாநகரம், தன்பொருனை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சரி இந்த நெல்லையில் பாயும் நதியின் பெயர் பற்றியும்.. அதேபோல் நெல்லையில் முக்கியமாக கருதப்படும் இடங்கள் மற்றும் அணைகள் பெயர்களை பற்றியும் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம்.
நெல்லையில் பாயும் நதி?
நெல்லையில் பாயும் புகழ்பெற்ற நதி தாமிரபரணி ஆறு ஆகும். இந்த தாமிரபரணி ஆறு அகத்தியமலையில் உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாபநாசத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் பல்வேறு திரைப்படப்பிடிப்புகள் நடந்துள்ளன.
மேலும் சில முக்கிய தகவல்கள்:
பாபநாசத்தில், புகழ் பெற்ற அகத்தியர் அருவி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் புகழ் பெற்ற குற்றால அருவித்தொடர் உள்ளது. இந்தக் குற்றால அருவி நெல்லையிலிருந்து 50கி.மீ. தொலைவில் உள்ளது.
தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள இங்கு மெயின் அருவி, ஐந்தருவி, தேனருவி, செண்பகாதேவி, புலிஅருவி, பழைய குற்றாலம் எனப் பல அருவிகள் உள்ளன. மெயின் அருவி மிகவும் பிரசித்தி பெற்றது. வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட இந்த அருவிக்கு மக்கள் வருகின்றனர்.
நெல்லையப்பர் கோவில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம் இந்த நகரில் அமைந்துள்ளது. ஸ்ரீ காந்திமதி-நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது.
அம்பாளுக்கும், சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று உள்ளது.
கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது. திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் வழி கருப்பூந்துறை ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை ஸ்ரீ அழியாபதி ஈஸ்வரர் திருக்கோயில் கோரக்க மகரிஷியால் வழிபட்ட தலம் ஆகும்.
தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் என்ன தெரியுமா?
திருநெல்வேலி அருகில் உள்ள முக்கிய அணைக்கட்டுகள்:
திருநெல்வேலி மாவட்டம் மற்றும் சுற்றுப்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பல்வேறு ஆறுகள் உற்பத்தியாகின்றன. அந்த ஆறுகளின் குறுக்கே பல்வேறு அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைப்பகுதிகள் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த வரப்பிரசாதமாக திகழ்கின்றன. இந்த அணைகள் மூலம் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இங்கு நாம் திருநெல்வேலி மாநகருக்கு அருகில் உள்ள சில முக்கிய அணைகளின் விவரங்கள் பற்றி காணலாம்.
அடவிநயினார் அணை:
- அணையின் உயரம் – 47.20 மீட்டர்
- அணையின் நீளம் – 670 மீட்டர்
- அணையின் கொள்ளளவு – 175 மில்லியன் கன அடி
- அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி – 15.54 சதுர கி.மீ.
- அதிகபட்ச வெள்ள நீர் வெளியேற்றம் – 12500 கியூசெக்ஸ்.
அமைவிடம் / செல்லும்வழி:
திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 68 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ள இந்த அணைக்கட்டிற்கு திருநெல்வேலி – தென்காசி – செங்கோட்டை – பண்பொழி வழியாக சென்றடையலாம்.
ராமநதி அணை:
- அணையின் சேமிப்பு உயரம் – 84 அடி
- அணையின் நீளம் – 839 மீட்டர்
- அணையின் கொள்ளளவு – 152 மில்லியன் கன அடி
- நீர் பரவல் பகுதி – 0.38 சதுர கி.மீ.
- நீர்ப்பிடிப்பு பகுதி – 6.40 சதுர மைல்கள்.
- அதிகபட்ச வெள்ள நீர் வெளியேற்றம் – 10450 கியூசெக்ஸ்.
அமைவிடம் / செல்லும்வழி:
திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது ராமநதி அணை. இதற்கு திருநெல்வேலியில் இருந்து முக்கூடல் – பாப்பான்குளம் – பொட்டல்புதூர் – கடையம் மார்க்கமாக சென்றடையலாம்.
கடனாநதி அணை:
- அணையின் உயரம் – 85 அடி.
- அணையின் நீளம் – 2645 மீட்டர்.
- அணையின் கொள்ளளவு – 428.52 மில்லியன் கன அடி.
- நீர்ப்பிடிப்பு பகுதி – 17.94 சதுர மைல்கள்.
- அதிகபட்ச வெள்ள நீர் வெளியேற்றம் – 26800 கியூசெக்ஸ்.
அமைவிடம் / செல்லும்வழி:
திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 52 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ள இந்த கடனா நதி அணைக்கு திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் – ஆழ்வார்குறிச்சி – சிவசைலம் வழியாக சென்றடையலாம்.
குண்டாறு அணை:
- அணையின் உயரம் – 36.10 மீட்டர்
- அணையின் நீளம் – 390.00 மீட்டர்
- அணையின் கொள்ளளவு – 25 மில்லியன் கன அடி
- நீர்ப்பிடிப்பு பகுதி – 35.30 ஏக்கர்
- அதிகபட்ச வெள்ள நீர் வெளியேற்றம் – 9347 கியூசெக்ஸ்
அமைவிடம் / செல்லும்வழி:
திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 62 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது குண்டாறு அணை. இதற்கு திருநெல்வேலியில் இருந்து தென்காசி – செங்கோட்டை – கண்ணுபுளிமெட்டு மார்க்கமாக சென்றடையலாம்.
கருப்பாநதி அணை:
- அணையின் உயரம் – 72 அடி.
- அணையின் நீளம் – 890 மீட்டர்.
- அணையின் கொள்ளளவு – 185 மில்லியன் கன அடி.
- அதிகபட்ச வெள்ள நீர் வெளியேற்றம் – 12600 கியூசெக்ஸ்.
அமைவிடம் / செல்லும்வழி:
திருநெல்வேலியில் இருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ள இந்த கருப்பாநதி அணைக்கு திருநெல்வேலியில் இருந்து தென்காசி – கடையநல்லூர் – கிருஷ்ணாபுரம் வழியாக சென்றடையலாம்.
நம்பியாறு அணை:
- அணையின் உயரம் – 10.84 அடி.
- அணையின் நீளம் – 2605 மீட்டர்.
- அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி – 72.58 சதுர கி.மீ.
- அணையின் கொள்ளளவு – 2.33 எம்.காம் / 82.17 மெக்ட்.
- அதிகபட்ச வெள்ள நீர் வெளியேற்றம் – 45000 கியூசெக்.
அமைவிடம் / செல்லும்வழி:
திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோட்டைக்கருங்குளம் என்னும் ஊரில் அமையப்பெற்றுள்ளது நம்பியாறு அணை. இதற்கு திருநெல்வேலியில் இருந்து நாங்குநேரி – வள்ளியூர் – சமூகரெங்கபுரம் – கோட்டைக்கருங்குளம் மார்க்கமாக சென்று வரலாம்.
கொடுமுடியாறு அணை:
- அணையின் உயரம் – 28 அடி.
- அணையின் நீளம் – 411 மீட்டர்.
- அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி – 24.86 சதுர கி.மீ.
- அணையின் கொள்ளளவு – 3.58 எம்.காம் / 126.53 மெக்ட்.
- அதிகபட்ச வெள்ள நீர் வெளியேற்ற திறன் – 17084 கியூசெக்.
அமைவிடம் / செல்லும்வழி:
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்குறுங்குடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமையப்பெற்றுள்ளது கொடுமுடியாறு அணைக்கட்டு. இதற்கு திருநெல்வேலியில் இருந்து நாங்குநேரி – ஏர்வாடி – திருக்குறுங்குடி மார்க்கமாகவும், திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி – களக்காடு மார்க்கமாகவும் சென்று வரலாம்.
வடக்கு பச்சையாறு அணை:
- அணையின் உயரம் – 20.2 அடி.
- அணையின் நீளம் – 3110 மீட்டர்.
- அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி – 35.09 சதுர கி.மீ.
- அணையின் கொள்ளளவு – 12.506 எம்.காம் / 442 மெக்ட்.
- அதிகபட்ச வெள்ள நீர் வெளியேற்ற திறன் – 17066 கியூசெக்.
அமைவிடம் / செல்லும்வழி:
திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 42 கிலோமீட்டர் தொலைவில் களக்காடு அருகில் உள்ள பத்தை என்னும் கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது வடக்கு பச்சையாறு அணை. இதற்கு திருநெல்வேலி மாநகரில் இருந்து நாங்குநேரி – களக்காடு – கருவேலங்குளம் வழியாகவும், திருநெல்வேலி மாநகரில் இருந்து பத்தமடை – சேரன்மகாதேவி – கருவேலங்குளம் வழியாகவும் சென்று வரலாம்.
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 2022 |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |