பாரதியார் சுதந்திர பாடல்கள் | Bharathiyar Suthanthira Padalgal
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பாரதியார் சுதந்திர பாடல்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். மகாகவி பாரதியார் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது தேசபக்தியை தூண்டும் வகையில் பல பாடல்களை இயற்றியுள்ளார். மேலும், பெண் விடுதலைக்காகவும், சாதி மறுப்பு மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராகவும் போராடினார்.
பாரதியார் பல்வேறு பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றில் ஒன்று தான் சுதந்திர பாடல்கள். சுதந்திரம் பற்றி அவர் பல்வேறு பாடல்களை இயற்றியுள்ளார். எனவே, அப்பாடல்களை எல்லாம் தொகுத்து இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். எனவே, நீங்கள் பாரதியின் சுதந்திரம் பற்றிய பாடல்களை தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பாரதியார் சுதந்திர பாடல்கள் – 1:
1.அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
2. கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பாரதியார் சுதந்திர பாடல்கள் – 2: (சுதந்திரப் பெருமை)
வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ? – என்றும்
ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவா ரோ? (வீர) 1
புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும்
பொய்யென்று கண்டாரேல் – அவர்
இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு
இச்சையுற் றிருப்பா ரோ? (வீர) 2
பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்
பெற்றியை அறிந்தாரேல் – மானம்
துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகமென்று மதிப்பா ரோ? (வீர) 3
மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்
வாய்மையை உணர்ந்தாரேல் – அவர்
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
உடன்படு மாறுளதோ? (வீர) 4
விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்
மின்மினி கொள்வாரோ?
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கை கட்டிப் பிழைப்பாரோ? (வீர) 5
மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியா ரோ? (வீர) 6
வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்கு வாரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ? (வீர) 7
பாரதியார் சுதந்திர பாடல்கள் – 3: (விடுதலை வேண்டும்)
வேண்டுமடி எப்போதும் விடுதலை, அம்மா;
- தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல்
சூழ நின்ற தீவிலங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழ ராகி எம்மோ டமுதமுண்டு குலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடு மின்பம்
அனைத்தும் உதவ (வேண்டுமடி)
2. விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே,
விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே
பொருத்த முறநல் வேத மோர்ந்து பொய்ம்மை தீர, மெய்ம்மை நேர
வருத்த மழிய வறுமை யொழிய வையம் முழுதும்
வண்மை பொழிய (வேண்டுமடி)
3. பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே,
நண்ணி யமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள
வண்ண மினிய தேவ மகளிர் மருவ நாமும்
உவகைதுள்ள. (வேண்டுமடி)
பாரதியார் சுதந்திர பாடல்கள் -4:(விடுதலை-சிட்டுக்குருவி)
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே
- எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)
2. பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு)
3. முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)
பாரதியார் சுதந்திர பாடல்கள் -5:(சுதந்திர தாகம்)
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே!
ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!
வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ?
மெய்யடி யோம்இன்னும் வாடுதல் நன்றோ? 1
பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கை விடலாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
அஞ்சலென் றருள் செயுங் கடமை யில்லாயோ?
ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ?
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே!
வீர சிகாமணி! ஆரியர் கோனே! 2
பாரதியார் சுதந்திர பாடல்கள் -6:( விடுதலை)
விடுதலை! விடுதலை! விடுதலை!
பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை) 1
ஏழை யென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே;
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே! (விடுதலை) 2
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்;
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையி னும்ந மக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை) 3
பாரதியார் சுதந்திர பாடல்கள் -7: (சுதந்திரப் பள்ளு)
ஆடுவோமே – பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று (ஆடு)
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே – வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே – பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே – நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு) 1
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே – இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே. (ஆடு) 2
எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே – பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே – இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே – கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே. (ஆடு) 3
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம் – வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம். (ஆடு) 4
நாமிருக்கும் நாடு நமதென்ப தறிந்தோம் – இது
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் – இந்தப்
பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் – பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு) 5
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |














