Natpu Thirukkural In Tamil..!
வாசிப்பாளர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் நட்பு பற்றிய திருக்குறள் விளக்கத்தை தான் பறக்கப்போகிறோம். நம் அனைவருக்கும் நெருங்கிய நண்பர்கள் என்று சிலர் இருப்பார்கள், அவர்களிடம் தான் நாம் நம் வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்வோம். நாம் நம் பெற்றோர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்துக்கு அடுத்த படியாக நம் நண்பர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். இத்தகைய நட்பை பற்றி திருக்குறளில் ஒரு அதிகாரமே இருக்கிறது.
திருக்குறள் நூல் தமிழ் நூல்களிலே சிறப்பு வாய்ந்த நூலாக திகழ்கிறது. இது மனிதர்களின் வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் விளக்கும் நூலாக இருக்கிறது. குறிப்பாக அறம், பொருள் , இன்பம் ஆகியவற்றை விளக்கும் நூல் ஆகும்.
திருக்குறள் உழவு அதிகாரம் குறள் விளக்கம்..!
நட்பு அதிகாரம்:
குறள் 1:
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
குறள் விளக்கம்:
மு. வரதராசன் உரை விளக்கம்: நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?
மு. கருணாநிதி உரை விளக்கம்: நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.
குறள் 2:
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
குறள் விளக்கம்:
மு. வரதராசன் உரை விளக்கம்: அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.
மு. கருணாநிதி உரை விளக்கம்: அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.
குறள் 3:
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
குறள் விளக்கம்:
மு. வரதராசன் உரை விளக்கம்: பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும்.
மு. கருணாநிதி உரை விளக்கம்: படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.
குறள் 4:
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
குறள் விளக்கம்:
மு. வரதராசன் உரை விளக்கம்: நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்.
மு. கருணாநிதி உரை விளக்கம்: நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.
குறள் 5:
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
குறள் விளக்கம்:
மு. வரதராசன் உரை விளக்கம்: நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.
மு. கருணாநிதி உரை விளக்கம்: இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை. இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.
குறள் 6:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
குறள் விளக்கம்:
மு. வரதராசன் உரை விளக்கம்: முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.
மு. கருணாநிதி உரை விளக்கம்: இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.
குறள் 7:
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
குறள் விளக்கம்:
மு. வரதராசன் உரை விளக்கம்: அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.
மு. கருணாநிதி உரை விளக்கம்: நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.
குறள் 8:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
குறள் விளக்கம்:
மு. வரதராசன் உரை விளக்கம்: உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.
மு. கருணாநிதி உரை விளக்கம்: அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்.
குறள் 9:
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
குறள் விளக்கம்:
மு. வரதராசன் உரை விளக்கம்: நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.
மு. கருணாநிதி உரை விளக்கம்: மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.
குறள் 10:
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
குறள் விளக்கம்:
மு. வரதராசன் உரை விளக்கம்: இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப் போய்விடும்.
மு. கருணாநிதி உரை விளக்கம்: நண்பர்கள் ஒருவருக்கொருவர் இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம் என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்.
திருக்குறள் அதிகாரங்கள் விளக்கம்.! | Ahirukkural Adhikaram in Tamil
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |














