திருக்குறள் அதிகாரம்..! Thirukkural in Tamil..! திருக்குறள் அர்த்தங்கள்

திருக்குறள் விளக்கம்..! Thirukkural With Meaning in Tamil..! திருக்குறள் அதன் அர்த்தம்

Thirukkural in Tamil/ திருக்குறள் அதிகாரங்கள் விளக்கம்: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் உலக புகழ்ப்பெற்ற திருக்குறள் நூலின் சிறப்பையும், 133 அதிகாரங்களாக (adhikaram in tamil) பிரிக்கப்பட்டுள்ள 1330 குறள்களின் விளக்கத்தையும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை பல பெயர்களால் அழைத்து வருகின்றனர். திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் போன்ற பல சிறப்பு பெயர்கள் உண்டு. திருக்குறளில் உள்ள 1330 குறள்களும் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவினால் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புமிக்க நூலின் குறள்களையும் அவற்றின் தெளிவான விளக்கங்களையும் (thirukural athigarangal in tamil) இப்போது படித்தறியலாம் வாங்க..!

திருக்குறள் பற்றிய வினா விடை

திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரம் | திருக்குறள் அதிகாரங்கள் விளக்கம் | Thirukkural Adhikaram

Thirukkural in Tamil

குறள் 1:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

குறள் விளக்கம்:

கலைஞர் மு.கருணாநிதி உரை விளக்கம்: அகரம் எழுத்துகளுக்கு முதன்மை; ஆதிபகவன் உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் முதன்மை
மு.வரதராசனார் உரை விளக்கம்: திருக்குறளில் உள்ள எழுத்துகள் அனைத்தும் அகரத்தினை அடிப்படையாக கொண்டே அமைந்துள்ளது; அதேபோன்று உலகம் முழுவதும் கடவுளையே அடிப்படையாக கொண்டுள்ளது.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: எழுத்துக்கள் யாவும் அகரத்தில் தொடங்குகின்றன; அது போன்று உலகம் இறைவனால் தொடங்குகிறது.

 


குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

குறள் விளக்கம்:

கலைஞர் மு.கருணாநிதி உரை விளக்கம்: தன்னை விட அறிவில் மூத்த நபர்களின் முன்பு அவர்களை வணங்கி நிற்கும் குணம் இல்லையென்றால் எவ்வளவு கல்வி கற்றிருந்தாலும் ஒரு பயனும் இல்லை.
மு.வரதராசனார் உரை விளக்கம்: தூய அறிவு வடிவாக விளங்கும் கடவுளுடைய திருப்பாதத்தினை வணங்காதவர்கள் பயின்று வந்த கல்வியால் பயன் என்ன?
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: தூய அறிவுமிக்க இறைவனின் திருவடிகளை வணங்கவில்லை என்றால் படித்த கல்வியினால் என்ன பயன்?

 


குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

குறள் விளக்கம்:

கலைஞர் மு.கருணாநிதி உரை விளக்கம்: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
மு.வரதராசனார் உரை விளக்கம்: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் இறைவனுடைய பாதத்தினை நினைகின்றவர் இன்ப உலகத்தில் நிலைத்து வாழ்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: மணமுள்ள மலர் மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் திருவடிகளை எப்போதும் மனதில் நினைத்து கொண்டிருப்பவர்கள் இந்த உலகத்தில் நீண்ட நாள் வாழ்வார்கள்.

 


குறள் 4:

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

குறள் விளக்கம்:

கலைஞர் மு.கருணாநிதி உரை விளக்கம்: விருப்பு வெறுப்பு இல்லாத தன்னலம் இன்றி செயல்படுபவர்களை பின்பற்றி வந்தால் எப்போதும் வாழ்க்கையில் துன்பம் என்ற ஒன்று நேராது.
மு.வரதராசனார் உரை விளக்கம்: விருப்பு வெறுப்பு குணம் இல்லாத இறைவனின் பாதத்தினை எப்போதும் நினைப்பவர்களுக்கு எந்த இடத்திலும் துன்பம் இருக்காது.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளுடைய திருவடிகளை எப்போதும் மனதில் நினைத்து கொண்டு இருந்தால் உங்களுக்கு ஒருபோதும் துன்பம் இருக்காது.

 


குறள் 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

குறள் விளக்கம்:

கலைஞர் மு.கருணாநிதி உரை விளக்கம்: கடவுள் என்பதற்குரிய பொருளை அறிந்துக்கொண்டு புகழ் பெற விரும்புபவர்கள் நன்மை மற்றும் தீமைகளை ஒரே அளவில் எதிர்கொண்டு நடப்பார்கள்.
மு.வரதராசனார் உரை விளக்கம்: இறைவனின் உண்மை புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் ஏற்படும் இருவகை வினைகளும் சேர்வதில்லை.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: இறைவனின் மெய் புகழையே விரும்புபவரிடம் அறியாத குணத்தினால் வரும் நல்வினை மற்றும் தீவினை இரண்டுமே சேருவதில்லை.

குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

குறள் விளக்கம்:

கலைஞர் மு.கருணாநிதி உரை விளக்கம்: ஐம்பொறிகளான மெய், வாய், மூக்கு, கண், செவி போன்றவைகளை கட்டுப்படுத்திய தூயவனின்  உண்மை மற்றும் ஒழுக்கமுடைய நெறிகளை பின்பற்றி இருப்பவர்களின் புகழ்வாழ்வு எப்போதும் நிலையானதாக இருக்கும்.
மு.வரதராசனார் உரை விளக்கம்: ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலையுள்ள நல்ல வாழ்க்கையினை வாழ்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியில் எப்போதும் நிற்பவர் நீண்ட நாள் வாழ்வார்கள்.

 


குறள் 7:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

குறள் விளக்கம்:

கலைஞர் மு.கருணாநிதி உரை விளக்கம்: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, அடுத்தவர்களுடைய மனதில் உள்ள கவலை தீருவதற்கு வழிகள் ஏதுமில்லை.
மு.வரதராசனார் உரை விளக்கம்: தனக்கு ஒப்புதல் இல்லாத தலைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, அடுத்தவர்களுக்கு  மனதில் உள்ள கவலையை நீக்குவது மிகவும் கடினம்.

 


குறள் 8:

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

குறள் விளக்கம்:

கலைஞர் மு.கருணாநிதி உரை விளக்கம்: அந்தணன் என்பதற்கு பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, அடுத்தவர்களுக்கு பிற துன்பக் கடல்களைக் கடந்து செல்வது என்பது மிகவும் எளிதான விஷயமல்ல.
மு.வரதராசனார் உரை விளக்கம்: அறக்கடலாக விளங்கும் இறைவனின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.

 


குறள் 9:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

குறள் விளக்கம்:

கலைஞர் மு.கருணாநிதி உரை விளக்கம்: ஐம்பொறிகளான மெய், வாய், மூக்கு, கண், செவி  என ஐம்பொறிகளும் இருந்தும் அவை செயல்படாவிட்டால் என்ன நிலையோ அதே நிலைத்தான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டு மதித்து நடக்காதவனின் நிலையும் ஆகும்.
மு.வரதராசனார் உரை விளக்கம்: கேட்கும் திறன் இன்றி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவையாகும்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: எண்ணும் நல்குணங்கள் அனைத்திற்கும் அமைவிடமான இறைவனுடைய திருப்பாதத்தினை  வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள் போல இருந்தும் ஒரு பயனுமில்லை.

 


குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

குறள் விளக்கம்:

கலைஞர் மு.கருணாநிதி உரை விளக்கம்: வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
மு.வரதராசனார் உரை விளக்கம்: கடவுளுடைய பாதத்தினை  பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலையும் கடந்து செல்ல முடியும். மற்றவர்கள் யாரும் கடலை கடக்க இயலாது.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடக்க கூடியவர்களாக இருப்பார்கள்; மற்ற யாரும் நீந்தவும் மாட்டார்கள்.

 



திருக்குறள் வான் சிறப்பு அதிகாரம் | திருக்குறள் வான் சிறப்பு விளக்கம் | திருக்குறள் அதிகாரங்கள்

குறள் 11:

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

குறள் விளக்கம்:

கலைஞர் மு.கருணாநிதி உரை விளக்கம்: உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் வாழ வைப்பது மழையாக இருப்பதால் அதுவே அமிழ்தம் என்று அழைக்கப்படுகிறது.
மு.வரதராசனார் உரை விளக்கம்: மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால் தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்

 


குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை

குறள் விளக்கம்:

கலைஞர் மு.கருணாநிதி உரை விளக்கம்: யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத் தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் உண்ணும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது
மு.வரதராசனார் உரை விளக்கம்: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

 


குறள் 13:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி

குறள் விளக்கம்:

கலைஞர் மு.கருணாநிதி உரை விளக்கம்: கடல்நீர் கொண்ட உலகமாக இருந்தாலும், மழைநீர் இல்லா விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்
மு.வரதராசனார் உரை விளக்கம்: மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

 


குறள் 14:

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

குறள் விளக்கம்:

கலைஞர் மு.கருணாநிதி உரை விளக்கம்: மழை என்னும் வருவாய் வளம் குறைந்து விட்டால், உழவுத் தொழில் இல்லாமல் போய்விடும்.
மு.வரதராசனார் உரை விளக்கம்: மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், (உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்

 


குறள் 15:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

குறள் விளக்கம்:

கலைஞர் மு.கருணாநிதி உரை விளக்கம்: பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்
மு.வரதராசனார் உரை விளக்கம்: பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்

 


குறள் 16:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது

குறள் விளக்கம்:

கலைஞர் மு.கருணாநிதி உரை விளக்கம்: விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்
மு.வரதராசனார் உரை விளக்கம்: வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: மேகத்திலிருந்து மழைத்துளி விழாமல் போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்

 


குறள் 17:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

குறள் விளக்கம்:

கலைஞர் மு.கருணாநிதி உரை விளக்கம்: ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால் தான் கடல் கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால் தான் அந்தச் சமுதாயம் வாழும்
மு.வரதராசனார் உரை விளக்கம்: மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் மழை பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிவிடும்

 


குறள் 18:

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

குறள் விளக்கம்:

கலைஞர் மு.கருணாநிதி உரை விளக்கம்: வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?
மு.வரதராசனார் உரை விளக்கம்: மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் இருக்காது
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது

 


குறள் 19:

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்

குறள் விளக்கம்:

கலைஞர் மு.கருணாநிதி உரை விளக்கம்: இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்
மு.வரதராசனார் உரை விளக்கம்: மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

 


குறள் 20:

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு

குறள் விளக்கம்:

கலைஞர் மு.கருணாநிதி உரை விளக்கம்: உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்
மு.வரதராசனார் உரை விளக்கம்: எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil