நல்ல வருமானம் தரும் உளுந்து சாகுபடி முறை..!

உளுந்து சாகுபடி

உளுந்து சாகுபடி முறை..!(அ) உளுந்து பயிரிடும் முறை

உளுந்து சாகுபடி: இயற்கை விவசாயத்தில் இன்று அதிக வருமானம் தரும் உளுந்து சாகுபடி முறை, பருவகாலம், இரகங்கள், களை மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, நீர் நிர்வாகம் ஆகிய முழு விவரங்களையும் இப்போது நாம் காண்போம்.

பருவகாலம்:

ஆடி, மாசி ஆகிய பருவகாலங்கள் உளுந்து சாகுபடிக்கு ஏற்ற பருவகாலங்கள் ஆகும்.

தட்பவெப்பநிலை:

வெப்பம் மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் உளுந்து பயிர் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.

மண் வளம்:

நல்ல வடிகால் வசதி கொண்ட வளமான மண் உளுந்து சாகுபடிக்கு ஏற்றது. அதேபோல் உளுந்து எல்லா வகை மண்ணிலும் சாகுபடி செய்தாலும் வண்டல் மண், உளுந்து சாகுபடிக்கு மிகவும் சிறந்தது.

உளுந்து சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள்:

டிஎம்வி 1, டி 9 மற்றும் கோ 9 ஆகிய இரகங்கள் உளுந்து சாகுபடிக்கு மிகவும் ஏற்ற இரகங்கள் ஆகும்.

உளுந்து பயிரிடும் முறை – விதையளவு:

ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் உளுந்து சாகுபடிக்கு போதுமானது.

உளுந்து பயிரிடும் முறை – விதை நேர்த்தி:

ஆறிய அரிசி வடிகஞ்சியுடன் 200 கிராம் அளவு அடுப்பு சாம்பலை நன்றாக கலந்து இவற்றை 8 கிலோ விதைகளுடன் கலந்து கொள்ளனும்.

உயிர் உரவிதை, நேர்த்திசெய்ய ரைசோபியம் 200 கிராம், பாஸ்போபாக்டிரியா 200 கிராம் ஆகியவற்றை ஆறிய வடிகஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்து, நிழலில் உலர்த்தி விதை நேர்த்தி செய்யவேண்டும்.

உளுந்து பயிரிடும் முறை – நிலம் தயாரிக்கும் முறை:

இரண்டு முதல் மூன்று முறை நிலத்தை புழுதிப்பட உழுது நிலம் தயார் செய்ய வேண்டும்.

செடிக்குச் செடி ஒரு செ.மி இடைவெளியும், வரிசைக்கு வரிசை 10 செ.மி இடைவெளியும் விட வேண்டும்.

கொத்தமல்லி சாகுபடி செய்து 45 நாளில் 30 ஆயிரம் வரை லாபம் பெறலாம்..!

உளுந்து பயிரிடும் முறை – உரங்கள்:

உளுந்து சாகுபடி: விதைப்பதற்கு முன் அடியுரமாக மானாவாரிப் பயிராக இருந்தால் ஏக்கருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும். இறவைப் பயிராக இருந்தால் ஏக்கருக்கு 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 50 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும்.

மானாவாரி மற்றும் இறவைப் பயிர்களுக்கு டை அம்மோனியம் பாஸ்பேட் 2 சதவீதம் அல்லது யூரியா 2 சதவீதம் பூக்கும் தருணத்திலும் பின்பு 15 நாள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

உளுந்து பயிரிடும் முறை – அடியுரம்:

உயிர் உரமாக ரைசோபியம் 2 கிலோ, பாஸ்போபாக்டீரிய 2 கிலோ ஆகிய உயிர் உரத்துடன், 50 கிலோ ஈரப்பதம் உள்ள மக்கிய தொழு உரத்துடன் கலந்து அடியுரமாக இடவேண்டும்.

உளுந்து பயிரிடும் முறை – களை நிர்வாகம்:

நடவு செய்த 15-ம் நாள் ஒரு முறையும், பின்பு 30-ம் நாள் ஒரு முறையும் களை நிர்வாகம் கண்டிப்பாக செய்ய வேண்டும். பயிர் சாகுபடியில் சரியான தருணத்தில் களை நிர்வாகம் செய்யாமல் இருந்தால், கண்டிப்பாக பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து விடும். எனவே சரியான தருணத்தில் களை நிர்வாகம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

உளுந்து பயிரிடும் முறை – நீர் நிர்வாகம்:

விதை முளைக்கும் பருவம், பூ பூக்கும் பருவம், காய் வளர்ச்சி பருவம் ஆகிய பருவங்களில் கண்டிப்பாக பயிர்களுக்கு நீர் நிர்வாகம் செய்ய வேண்டியது அவசியம்.

உளுந்து பயிரிடும் முறை – அறுவடை

முதிர்ந்த காய்களைப் பறித்து உலர்த்த வேண்டும். அறுவடை செய்யும்போது பயிர்களை வேரோடு பிடுங்க வேண்டும். இல்லையெனில் முழு தாவரத்தையும் வெட்டி எடுக்க வேண்டும். பின்னர் குவித்து வைத்து உலர்த்தி பயிர்களை பிரிக்க வேண்டும்.

சொட்டு நீர் பாசனம் முறையில் பூசணி சாகுபடி..!

உளுந்து பயன்கள்:

  • கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்கள் உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.
  • உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
  • உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது.
  • சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.
  • நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
  • உளுந்து ஊற வைத்த நீரை மறுநாள் அதிகாலை அருந்தி வர சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.
  • 4 தேக்கரண்டி உளுந்து மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை தீரும்.
மாடித்தோட்டம் உருளை கிழங்கு சாகுபடி மற்றும் பயன்கள் !!!

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE