ஊடுபயிர் விவசாயம் | எந்த பயிரில் என்ன ஊடுபயிர்? | Intercropping advantages

ஊடுபயிர் விவசாயம்

ஊடுபயிர் விவசாயம் | எந்த பயிரில் என்ன ஊடுபயிர்? | Intercropping advantages

Intercropping advantages:- விவசாயிகள் முன்பெல்லாம் லாபமோ நஷ்டமோ ஒரே பயிரை விளைவித்துவிட்டு விவசாயிகள் பேசாமல் இருந்தார்கள். இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி, ஊடுபயிர் விவசாயம் தற்போது உலகம் முழுவதும் பரவலாகி வருகிறது.

நடவுசெய்யும் முதன்மைப் பயிருக்கு ஏற்ற ஊடுபயிர்களை விளைப்பதன் மூலம் விவசாயிகள் நஷ்டத்தைத் தவிர்க்க முடிகிறது, பல நேரம் கூடுதல் பலனையும் பெற முடிகிறது. இதனால் ஒரு பயிரை நம்பி விவசாயம் மேற்கொண்ட நிலை மாறி, ஊடுபயிர் விவசாயம் மூலம் பல்வேறு பயிர்கள் பயிரிடும் முறைக்கு விவசாயிகள் மாறிவருகின்றனர்.

சரி இந்த பதிவில் ஊடுபயிர் விவசாயம் என்றால் என்ன? ஊடுபயிர் முறை, எந்த பயிரில் என்ன ஊடுபயிர சாகுபடி செய்யலாம் போன்ற விவரங்களை இங்கு படித்தறிவோம்.

சிறு குறு விவசாய கருவிகள் மானியம்

ஊடுபயிர் என்றால் என்ன?

Intercropping advantages

ஊடுபயிர் என்பது சாகுபடி செய்தலில் முதன்மைப் பயிரின் இடையேயுள்ள இடத்தில் குறுகிய காலப்பயிராக சாகுபடி செய்யும் முறைக்கு ஊடுபயிர் சாகுபடி என்று பெயர். ஊடுபயிர் சாகுபடி என்பது குறுக்கியகாலத்தில் வருமானம் எடுக்கின்ற ஒரு யுக்தி, ஊடுபயிர் பிரதானப் பயிருக்கு துணைபோகும் தவிர பிரதானப் பயிரின் விளைச்சலைக் கெடுக்காது. தனிப்பயிருக்குள் பயிரிடப்படும் பயிர்களை எல்லாம் ஊடுபயிர்கள் என்று அழைக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு: கடலைக்குள் துவரை, பருத்திக்குள் உளுந்து.

ஊடுபயிர் செய்வதினால் ஏற்படும் பயன்கள் / Intercropping advantages:

வறட்சி ஆள்பற்றாக்குறை, நோய்த் தாக்குதல், வேலையின்மை என்று பலவகையான காரணங்களினால் சவால்களை சந்தித்தபடி விவசாயம் செய்து வரும் விவசாயிகளை நம்பிக்கையோடு வைத்திருப்பதே இந்த ஊடுபயிர்கள் தான்.

இந்த முறையில் தனிப்பயிர் சாகுபடி விட குறிப்பிட்ட நிலத்தில், குறிப்பிட்ட காலத்தில் கூடுதல் வருவாய் பெறலாம்.

இதனால் களைச் செடிகளும் குறைகிறது. ஊடுபயிர் சாகுபடியானால் குறைந்த இடத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

ஊடுபயிர் வகைகள்:

ஊடுபயிர்களில் நான்கு வகைப்படும், அவை கலப்பு பயிர், வேலிப்பயிர், வரப்புப் பயிர் மற்றும் வாய்க்கால் பயிர்.

நவீன விவசாய கருவிகள் பெயர்கள்..!

எந்த பயிரில் என்ன ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்?

கரும்பில் ஊடுபயிர் சாகுபடி:

கரும்பில் தக்கை பூண்டு ஊடுபயிராக சாகுபடி செய்வதன் மூலம் கரும்பு தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம்.

கரும்பு பயிரில் சோயாபீன்ஸை ஊடுபயிராக சாகுபடி செய்வதால் இரண்டிலும் இரட்டிப்பு லாபத்தை பெறலாம்;

கரும்பு பயிரில் வெங்காயம் பயிரை சாகுபடி செய்து இடைக்கணுப் புழுதி தாக்குதலைக் குறைத்து விடலாம்.

மக்காசோளத்தில் ஊடுப்பயிர்கள்:

மக்காச் சோளத்தில் ஊடுபயிராக ஆமணக்கு சாகுபடி செய்வதன் மூலம் புரொடினியா புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும்;

மக்காச்சோளத்தில் ஊடுபயிராக சோளம் பயிரிடுவதன் மூலம் குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பானின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம்.

மக்காச்சோளத்துடன் உளுந்து, பச்சைப் பயிறு தட்டைப்பயிறு, சோயாமொச்சை போன்ற பயிறுவகை பயிர்களை ஊடுபயிராக மானாவாரி நிலத்திலும் சாகுபடி செய்யலாம்.

புகையிலையில் ஊடுபயிர் சாகுபடி:

புகையிலை பயிரில் ஊடுபயிராக ஆமணக்கு சாகுபடி செய்வதன் மூலம், புகையிலை வெட்டு புழுக்களின் சேதம் கட்டுப்படுத்தப்படுகின்றன.

பயிரில் பூச்சி நோய் விரட்டிக் தாக்கும் வேம்பு, சீதா, நக்ஸ்வாமிகா போன்ற மரங்களை வரப்பில் நடலாம்.

செவ்வந்திப் பூ, கடுகு, ஆமணக்கு போன்றவற்றை பயிர்களை சுற்றிலும் வளர்த்துப் பூச்சிகளை விரட்டலாம்.

கரையான்களை கட்டுப்படுத்திட வெட்டிவேர், திருகுகள்ளி, எருக்கு, காட்டாமணக்கு ஆகிய செடிகளை வயலிலேயே ஆங்காங்கே  வளர விடலாம்.

மேலும் ஊடுபயிர்களாக கொத்தமல்லி, வெங்காயம், பீட்ருட் ஆகியவை பயிரிடலாம். இந்த முறையில் இரட்டிப்பு லாபம் பெறலாம்.

வெங்காயத்தில் ஊடுபயிர் சாகுபடி:

வெங்காயத்தை தாக்கும் வெட்டுப்புழுக்களை கட்டுப்படுத்த வரப்பு ஓரங்களில் ஆமணக்கை வளர்ச்சிப் பயிராக பயிரிட்டு அதில் காணப்படும் முட்டைக் குவியல்களையும் இளம் புழுக்களையும் சேகரித்து அழிக்கலாம்.

வெங்காயமானது பார்களில் கரை உச்சிகளில் 2 அல்லது 3 வரிசையாக நடவு செய்யப்படுகிறது. இதன் வரப்பைச் சுற்றிலும் சூரியகாந்தி பயிரை சாகுபடி செய்யலாம்.

நெல்லில் ஊடுபயிர்கள்:

வயல் மட்டத்திருந்து வரப்பின் ஓரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் தட்டை பயறு விதைக்க வேண்டும். இந்த தட்டை அசுவினிகள் உற்பத்தியாகும். இதனால் ஏராளமான பொறிவண்டுகள் கவரப்படும். இந்த பொறிவண்டுகள் நெற்பயிரை தாக்கும் பலவிதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுபடுத்துகின்றன.

நெல் பயிரில் ஊடுபயிராக மணிலா, அகத்தி, பயறு வகைகள், வெண்டை, கிளைரிசிடியா போன்றவற்றையும் பயிரிட்டு லாபம் பெறலாம்.

நிலக்கடலையில் ஊடுபயிர்கள்:

நிலக்கடலையில் ஆமணக்கு செடிகளை வயல் ஓரங்களில் 2 மீட்டருக்கு ஒரு செடி வீதம் நடவு செய்தால் புரோடீனியா புழுக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.

நிலக்கடலையோடு 250 கிராம் கம்பு சேர்த்து கலப்பு பயிராக விதைத்து நிலக்கடலையை தாக்கும் சுருள்பூச்சி, இலைப்பேன் மற்றும் அந்துப்பூச்சியின் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம்.

10 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை என்ற அளவில் ஊடு பயிராக செய்து பொறிவண்டுகளின் பெருக்கத்தை அதிகரிக்கலாம்.

சிவப்பு கம்பளிப்புழு தாக்குதல் காணப்படும் பகுதிகளில் 5 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை தட்டை பயிரை  ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

துவரையில் ஊடுபயிர்கள்:

துவரை, பாசிப்பயறு ஆகியவற்றுடன் சோளம் ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் அத்துப்பூச்சி மற்றும் காய்ப்புழுக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்.

சோளத்தில் ஊடுபயிர்கள்:

சோளத்துடன் அவரையை 4:1 என்ற விகிதத்தில் விதைத்து சோளத்தண்டு புழுவின் சேதத்தையும், நிலக்கடலையுடன் கம்புப்பயிரை 6:1 என்ற விகிதத்தில் விதைப்பதன் மூலம் சுருள் பூச்சியின் சேதத்தையும் குறைக்கலாம்.

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> pasumai vivasayam in tamil