கோடை உழவு நன்மைகள் ..!
சம்பா முடிந்ததும் அவசியம் கோடை உழவு செய்ய வேண்டும். தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வடகிழக்கு பருவக்காற்று மழைபெய்யும் மானாவாரி நிலங்களில் பயிர்சாகுபடி நடைமுறையில் உள்ளது.
முதற்பயிர் சாகுபடி ஆனி-ஆடி மாதங்களில் துவங்கி, இரண்டாவது பயிர் தை மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
இடைப்பட்ட காலமான மாசி-வைகாசி வரை நிலம் உழவின்றி பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகும் நிலையில் தரிசாக உள்ளது. அப்பொழுது நம் வயலை உழுது புழுதிக்காலாக செய்யவேண்டும்.
இதையும் படியுங்கள் –> | ஆடு மற்றும் மாடுகளுக்கு இந்த சத்தான மசால் உருண்டை கொடுங்க..! |
கோடை உழவின் அவசியம்:
- தைமாத அறுவடையின் போது, சாகுபடி செய்த பயிரிலிருந்து கொட்டிய இலைச்சருகுகள் நிலத்தின் மேல் போர்வையாக இருக்கும்.
2. அறுவடைக்குப்பின் வேரின் அடிக்கட்டைகள் மக்குவதற்கு அதிக வாய்ப்பின்றி இருக்கும்.
3. மேல்மண் இறுக்கமாக காணப்படும். இதனால் மழை நீர் பூமிக்குள் இறங்காமல் மேல் மண்ணுடன் மழை நீர் வெளியேறும்.
4. நிலத்தோடு மக்க வேண்டிய பயிர்கள், சருகுகள் காற்றுவீசும் போது வேறு இடங்களுக்கு எடுத்து செல்லப்படும்.
5. முந்தைய பயிரின் தூர்கள் கரையானின் தாக்குதலுக்குட்பட்டு பயனின்றி விரயமாகும்.
கோடை உழவு செய்தல்:
- பயிர் அறுவடையான உடன் உழவு செய்தல் வேண்டும்.
2. ஒவ்வொரு மழைக்குபின் உழவு அவசியம்.
3. நிலச்சரிவில் குறுக்காகவும், மணற்பாங்கான நிலத்தில் மேலாகவும் உழவு வேண்டும்.
4. 2-3 வருடத்திற்கு ஒருமுறை சட்டிக் கலப்பை கொண்டு உழவு செய்யவேண்டும்.
கோடை உழவு செய்வதால் கிடைக்கும் பயன்கள்:
- மண் மிருதுவாகி மழை நீரை ஈர்க்கும் திறன் அதிகமாகிறது.
2. மண் அரிமானம் கட்டுப்படுத்தப்பட்டு சத்துக்கள் விரையமாவது தடுக்கப்படுகிறது.
3. முதற்பயிரின் தூர்கள் மக்கி களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
4. சிகப்பு கம்பளிப்புழு அழிக்கப்படுகிறது.
கோடை உழவு நன்மைகள்
கோடை உழவு கோடி நன்மை என்ற பழமொழிக்கேற்ப இதன் பயன்கள் பலவாகும், ஆண்டுக்கொருமுறை வரும் ஓரிரு மாத கோடை கால இடைவெளியில் அதாவது (ஏப்ரல்-மே மாதங்களில்) சாகுபடி நிலத்தை தரிசாக விடாமல் சட்டி கலப்பைக்கொண்டு உழுவதையே கோடை உழவு என்கிறோம்.
இதையும் படியுங்கள் –> | சொட்டு நீர் பாசனம் – முழு விளக்கம்..! |
கோடை உழவு நன்மைகள் – மண் வளம்:
இந்த கோடை உழவில் ஆழமாக உழுது மேல்மண்ணை கீழாகவும் கீழ்மண்ணை மேலாகவும் புரட்டிவிடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண் இலகுவாகிறது. இதனால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணின் நீர்பிடிப்புத்தன்மை அதிகரிக்கிறது.
கோடை உழவு நன்மைகள் – களைக்கட்டுப்பாடு:
ஓராண்டு மற்றும் பல்லாண்டுக் களைகள் அதிக செலவின்றி அழிக்கப்படுவதோடு, அவையே மக்கி பயிர்களுக்கு உரமாகி நிலத்திற்கு வளம் சேர்க்கிறது.
மேற்கண்ட செயல்களால் சாகுபடி பயிர்களின் வேர் வளர்ச்சி அதிகரித்து பயிர்கள் நன்றாக ஊன்றி நிற்கவும், அதனால் அதிக கிளைகள் / அதிக தூர்கள், அதிக பூக்கள், அதிக மற்றும் தரமான விளைச்சலுக்கு வழிவகையாகிறது. மேலும் கோடைக்கு பின் பருவ மழையினால் மண் அரிமானம் ஏற்படுவது தடைசெய்யப்படுகிறது.
கோடை உழவு நன்மைகள் – ஊட்டச்சத்து நிலைநிறுத்தம்:
இந்த கோடை உழவு செய்வதினால் ஏற்கனவே மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களும், நம்மால் இடப்பட்ட ஊட்டச்சத்துக்களும் வேறு இடங்களுக்கு அரித்து சென்று வீணாவது தடைசெய்யப்படுகிறது.
கோடை உழவு நன்மைகள் – பூச்சித்தாக்குதல்களை கட்டுப்படுத்த:
பயிர்களை சேதப்படுத்தும், மண்ணில் மறைந்து வாழும் பூச்சியினங்கள் மற்றும் கூண்டுப்புழுகள் செலவின்றி அழிக்கப்படுகிறது. இவைகள் பெரும்பாலும் இரசாயனங்களால் முழுமையாக கட்டுப்படுவதில்லை.
பூச்சிகளின் ஊண்வழங்கிகள் / உணவளிப்பான்கள் அழிக்கப்படுவதால் அவைகளின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும் பயிர்களைத்தாக்கும் பூச்சிகள், கூண்டுப்புழுக்கள், புழுக்களின் பல்வேறு பருவங்கள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள்யாவும் பெருமளவில் கோடை வெப்பத்தாலும், பல்வேறு பறவைகளாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.
கோடை உழவு நன்மைகள் – நோய் கட்டுப்பாடுகள்:
இந்த கோடை உழவினால் மண்ணில் வாழும் பயிர்களில் பல்வேறு நோய்கள் உருவாகுவதற்கு காரணமான பூசணங்களும், பூசண வித்துக்களும் (பித்தியம்,பைட்டோப்தோரா) செலவின்றி அழிக்கப்படுகின்றன.
கோடை உழவு நன்மைகள் – கோடை உழவு சுற்றுசூழல் பாதுகாப்பு:
மேற்கண்ட பயிர் பாதுகாப்பு நடைமுறைகளான களைக்கட்டுப்பாடு, பூச்சிக்கட்டுப்பாடு மற்றும் நோய்க்கட்டுப்பாடுயாவும் செலவின்றி, செயற்கை இரசாயணங்களின்றி கட்டுப்படுத்தப்படுவதால் இரசாயண பின் விளைவுகளான காற்று மாசுபடுவது, தண்ணீர் மாசுபாடு, வேளாண் நிலங்கள் மாசுபடுவது மற்றும் பிற உயிரினங்கள் பாதிக்கப்படுவது பெருமளவில் குறைக்கப்படுகிறது.
உழவுக்கும் உழவனுக்கும் உறுதுணையாய் நின்று ” கோடை உழவு ” போன்ற இன்னும் பிற வேளாண் தொழில் நுட்பங்களை பின்பற்ற பழக்கிடுவோம். உழவுக்கு தோள் கொடுத்து உலகை காப்போம்.
இதையும் படியுங்கள் –> | கறவை மாடுகளுக்கான அனைத்து நோய்க்கும் மூலிகை மருத்துவம்..! |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |