புடலங்காய் சாகுபடி செய்யும் முறை..!

Advertisement

புடலங்காய் சாகுபடி 

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் புடலங்காய் சாகுபடி செய்யும் முறை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் ஓன்று புடலங்காய். இது கொடி வகையை சேர்ந்த காய்கறி ஆகும். புடலங்களை பூசணி வகை குடும்பத்தை சேர்ந்தது. புடலங்காய் வேகமாக வளரக்கூடிய பயிர் ஆகும்.

இது வெப்ப மண்டல பயிர் என்றும் சொல்லப்படுகிறது. இது வணிக ரீதியாகவும் வீட்டு தோட்டங்களிலும் வளர்ப்பதற்கு ஏற்ற தாவரமாக இருக்கிறது. அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் புடலங்காய் சாகுபடி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இயற்கையான முறையில் கத்தரிக்காய் சாகுபடி செய்வது எப்படி..?

புடலங்காய் சாகுபடி செய்வது எப்படி..? 

 pudalangai sagupadi in tamil

புடலங்காய் இந்தியாவில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்த புடலங்காயின் விஞ்ஞான பெயர் Trichosanthene Angina என்று சொல்லப்படுகிறது. இது நீண்ட பச்சையான தொங்கும் காய்களை கொண்டது. இந்த புடலங்காயில் பன்றிப்புடல், பேய்ப்புடல், கொத்துப்புடல், நாய்ப்புடல் என பலவகைகள் உள்ளன. இப்போது புடலங்காய் சாகுபடி பற்றி பார்ப்போம்.

புடலங்காய் பயிரிடும் காலம்:

புடலங்காய் ஜூன் மாதம் முதல் ஜுலை மாதம் வரை பயிரிடலாம். அதேபோல, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதமும் புடலங்காய் சாகுபடி செய்ய ஏற்ற மாதமாகும்.

பயிரிட ஏற்ற மண்:

புடலங்காய் ஒரு வெப்ப மண்டலப் பயிர் என்பதால் சாகுபடிக்கு 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படும். இது பயிரிடுவதற்கு மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 7.5 என்ற அளவில் இருக்க வேண்டும். 

இதை இருமண், பாங்கான மண் மற்றும் மணற்சாரி வண்டல் மண் போன்ற மண் வகைகளில் சாகுபடி செய்யலாம். அதுபோல மித வெப்ப மண்டல பகுதியிலும் புடலங்காய் சாகுபடி செய்யலாம். இதனால் நல்ல மகசூல் கிடைக்கும்.

இதையும் பாருங்கள் 👉 மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் முறை..!

நிலம் தயாரிக்கும் முறை:

சாகுபடி செய்யும் நிலத்தை 3 முதல் 4 முறை நன்றாக உளவு செய்ய வேண்டும்.

அதுபோல கடைசியாக உளவு செய்யும் போது 20 டன் மக்கிய தொழுஉரத்தை போட்டு உழவு செய்து நிலத்தை சமம் செய்து, 2 மீட்டர் இடைவெளியில் 80 செ.மீ அகலத்தில் வாய்க்கால் எடுத்து நிலத்தை தயார் செய்ய வேண்டும்.

அடுத்து, வாய்க்காலில் 1.5 மீட்டர் இடைவெளியில் 30 செ.மீ அளவில் நீளம், அகலம், ஆழம் என்று சமமான அளவு குழிகள் எடுக்க வேண்டும்.

விதை விதைக்கும் முறை:

1 ஏக்கருக்கு 2 கிலோ விதை தேவைப்படும். அந்த விதைகளை மாட்டு சாணம் மற்றும் கோமியத்தில் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

பின் ஒரு குழிக்கு 5 விதைகள் என்று ஊன்ற வேண்டும். அந்த விதைகள் 8 நாட்களிலிருந்து 10 நாட்களுக்குள் முளைக்க தொடங்கும்.

நீர் பாய்ச்சும் முறை: 

விதை ஊன்றிய உடன் குடம் அல்லது பூவாளி வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவேண்டும்.

விதைகள் நன்றாக வளர்ந்த உடன் வாய்க்கால் மூலம் வாரம் 1 முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இதற்கு சொட்டுநீர்பாசனம் ஏற்ற முறையாக இருக்கும்.

களை எடுக்கும் முறை: 

ஒரு குழியில் நன்கு வளர்ந்த 3 செடிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற நாற்றுகளை எல்லாம் களைத்து விட வேண்டும். அதுபோல செடிகள் நன்றாக வளரும் வரை களை இல்லாமல் இருக்க வேண்டும்.

விதைகள் நன்றாக வளர்ந்து படருவதற்கு இரும்பு கம்பிகளை வைத்து பந்தல் அமைக்க வேண்டும். விதைகள் முளைத்து கொடி வரும் போது மூங்கில் குச்சியோ அல்லது மற்ற குச்சிகளை வைத்து ஊன்று கொடுத்து பந்தலில் படர விட வேண்டும்.

மாடித்தோட்டம் புடலங்காய் பயிரிடும் முறை மற்றும் பயன்கள்..!

தேவையான உரங்கள்: 

1 ஏக்கருக்கு அடி உரமாக தழைச்சத்து 20 முதல் 30 கிலோ வரை போட வேண்டும். அதேபோல மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து 30 முதல் 50 கிலோ வரை நிலத்தில் இட வேண்டும்.

அடுத்து மேல் உரமாக தழைச்சத்தை பூ பூக்கும் பருவத்தில் 20 முதல் 30 கிலோ வரை போட வேண்டும். இதனால் பூக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகும். 

பயிர் பாதுகாப்பு முறை: 

புடலை செடியில் பூசணி வண்டின் தாக்குதல் அதிகளவில் காணப்படும். அதை  கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீரில் 2 கிராம் செவின் அல்லது கார்பரில் மருந்தை கலந்து தெளிக்க வேண்டும்.

அதுபோல பழ ஈயின் தாக்குதலைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 1 சதவீதம் தெளிக்க வேண்டும்.

புடலை மகசூல்:

புடலை விதை ஊன்றிய 80 நாட்களுக்கு பிறகு முதல் அறுவடை செய்ய தொடங்கலாம். பின்னர் 1 வார இடை வெளியில் 6 முதல் 8 முறை அறுவடை செய்யலாம்.

மேற்கண்ட முறைகளை பின் பற்றி வந்தால் 1 ஏக்கருக்கு 20 முதல் 25 டன் வரை மகசூல் கிடைக்கும்.

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம்
Advertisement