மஞ்சள் சாகுபடி முறை..!

Advertisement

மஞ்சள் சாகுபடி – இரகங்கள்:

கோ 1, பிஎஸ்ஆர் 1,2 (பவானிசாகர் 1,2), ஸ்வெர்ணா, சுதர்ஷனா, ரங்கா, ராஷ்மி, சுகந்தம், சுரோமா, ஆலப்புழா, விரலி மஞ்சள், ஐஐஎஸ்ஆர் பிரதீபா, ஐஐஎஸ்ஆர் அலப்பி சுப்ரீம் மற்றும் ஐஐஎஸ்ஆர் கெடாரம் ஆகிய இரகங்கள் உள்ளன. இதில் கோ 1, பிஎஸ்ஆர் 1, 2 ஆகியவை தமிழ் நாட்டு இரகங்கள் ஆகும்.

மஞ்சள் சாகுபடி வகைகள்:

ஈரோடு மற்றும் சேலம் மஞ்சள், முக்கிய நாட்டு வகைகள் ஆகும்.

மஞ்சள் சாகுபடி – பருவ காலம்:

இந்த மஞ்சள் சாகுபடிக்கு ஏற்ற பருவ காலம் வைகாசி முதல் ஆனி வரை சிறந்த பருவ காலமாகும்.

சொட்டு நீர் பாசனம் – முழு விளக்கம்..!

மஞ்சள் சாகுபடி – மண்:

நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் நிலம் மஞ்சள் சாகுபடிக்கு ஏற்றது.

மஞ்சள் சாகுபடி – நிலம் தயாரித்தல்:

நிலத்தை 3 அல்லது 4 முறை உழுது பண்படுத்த வேண்டும்.

கடைசி உழவின் போது 10 டன் மக்கிய தொழு உரத்தை மண்ணுடன் நன்கு கலந்து விட வேண்டும்.

பின்பு நிலத்தை சமன்படுத்தி 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.

மஞ்சள் சாகுபடி – விதையளவு:

ஏக்கருக்கு 1500 -2000 கிலோ மஞ்சள் விதைகள் விதைப்பதற்கு விரலி மற்றும் கிழங்கு (குண்டு) மஞ்சளை பயன்படுத்தலாம்.

விதைத்தல்:

விதைப்பதற்கு முன் விதை கிழங்குகளை எமிசான் மருந்து கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.

ஒரு கிராம் எமிசான் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, அதில் விதை மஞ்சளை 10 நிமிடம் ஊறவைத்து, பின் நிழலில் உலர்த்தி விதைக்கவேண்டும். இதனால் கிழங்கு அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

நடவு முறை:

நிலத்திற்கு நீர் பாய்ச்சி விதை மஞ்சளைப் பார்களின் ஓரத்தில் 15 முதல் 20 செ.மீ இடைவெளியில் 4 செ.மீ ஆழத்தில் நடவேண்டும்.

நீர் நிர்வாகம்:

மஞ்சள் நடவுக்கு முன்பு, நடவு செய்த மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்சவேண்டும். பின்பு மண்ணின் தன்மைக்கேற்ப வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

ஊட்டச்சத்து நிர்வாகம்:

200 கிலோ வேப்பம் (அ) கடலை புண்ணாக்கு, 25:60:108 கிலோ NPK, 30 கிலோ பெரஸ் சல்பேட் மற்றும் 15 கிலோ ஜிங்க் சல்பேட், 10 கிலோ அசோஸ்பைரில்லம், 10 கிலோ பாஸ்போபாக்டீரியா போன்றவற்றை நடவின் போது இட வேண்டும்.

மல்லிகை பூ சாகுபடி முறைகள்..!

மஞ்சள் சாகுபடி உரம்:

மேலுரமாக எக்டருக்கு 25:108 கிலோ தழை மற்றும் சாம்பல் சத்தினை,பயிர் நட்ட 30, 60, 120 மற்றும் 150வது நாளில் இட வேண்டும்.

நுண்ணூட்டச்சத்து இடுதல்:

நுண்ணூட்டச் சத்து கலவையை இலை வழி தெளிக்கவேண்டும். அதற்கு சூப்பர் பாஸ்பேட் 15 கிலோவை 25 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு நாள் இரவு ஊறவைக்க வேண்டும்.

மறுநாள் காலை அந்நீரில் இரும்பு சல்பேட் 375 கிராம், துத்தநாக சல்பேட் 375 கிராம், போராக்ஸ் 375 கிராம், யூரியா 375 கிராம் சேர்த்து 250 லிட்டர் தண்ணீர் ஊற்றி, இலைகளின் மேல் தெளிக்கவேண்டும்.

களை கட்டுப்பாடு மற்றும் ஊடுபயிர் நேர்த்தி:

மஞ்சள் சாகுபடி – களை நிர்வாகம்:

நட்ட மூன்றாவது நாளில் பேஸலின் களை கொல்லியை 2 லிட்டர் அளவில் தெளிக்க வேண்டும்.
நடவு செய்த 30 நாளில் முதல் களையும், பின்பு 50, 120 மற்றும் 150 நாட்களிலும் களை எடுக்க வேண்டும்.

ஊடுபயிர்:

மஞ்சளை தென்னை தோப்புகளில் ஊடுபயிராக பயிரிடலாம்.

மஞ்சள் தோட்டத்தில் கொத்தமல்லி, வெந்தயம், மிளகாய் பயறுவகைகள் போன்ற பயிர்களை அகன்ற இடைவெளியில் பயிருக்கு தக்கவாறு ஊடுபயிராக பயிரிடலாம்.

மஞ்சளை சிறிதளவு நிழலிலும் சாகுபடி செய்யலாம்.

மண் அணைத்தல்:

இரண்டாவது மேலுரம் மற்றும் நான்காவது மேலுரம் இடும்போது மண் அணைக்க வேண்டும்.

மஞ்சள் சாகுபடி – ஒருங்கிணைத்த பயிர் பாதுகாப்பு:

செதில் பூச்சி:

இவை மஞ்சளின் கிழங்கு பகுதியினைத் தாக்கி சேதத்தை விளைவிக்கும். இதனால் கிழங்குகள் சுருங்கி காய்ந்து விடும்.

இதுவே இவற்றை கட்டுப்படுத்த பாசலோன் 1.5 மில்லி, ஒரு லிட்டர் தண்ணீர் கரைசலில் 5 கிழங்குகளை ஊறவைத்து, பின்பு கிழங்குகளை நடவு செய்ய வேண்டும்.

தண்டுத் துளைப்பான்:

இவை தண்டு, கிழங்கு பகுதியை துளைத்து செல்வதால் நடுக்குருத்து காய்ந்து விடும். எனவே இவற்றை கட்டுப்படுத்த எண்டோசல்பான் 0.1% தெளிக்க வேண்டும்.

இலை பேன்:

இலைகளில் உள்ள சாறை உறிஞ்சி பயிர்களை வாடா செய்கிறது. மெட்டாசிஸ்டாக்ஸ் மற்றும் டைமெத்ரா 750 மில்லி தெளிப்பதன் மூலம் இலை பேன் பூச்சியை கட்டுப்படுத்தலாம்.

அறுவடை நேரம்:

பயிர், மஞ்சள் நிறமாக மாறுதல், சாய்தல், உலர்ந்துவிடுதல் போன்றவை அறுவடைக்கான அறிகுறியாகும். கிழங்குகளை மண்வெட்டி அல்லது குழிதோண்டும் கருவி கொண்டு தோண்டி எடுக்க வேண்டும்.

மஞ்சள் சாகுபடி – மகசூல்:

ஒரு ஏக்கருக்கு பதப்படுத்தப்படாத கிழங்குகள் 25-30 டன்கள் கிடைக்கும். பதப்படுத்தப்பட்ட கிழங்குகள் 5-6 டன்கள் வரை கிடைக்கும்.

தர்பூசணி சாகுபடி முறைகள் – தர்பூசணி விவசாயம்..!
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்..
Advertisement