தென்னையை பாதிக்கும் ரூகோஸ் வெள்ளை ஈ.. தடுப்பது எப்படி?

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் | How to Control Whitefly in Coconut Trees in Tamil

விவசாயம் தான் நமது நாட்டின் முதுகெலுப்பாக இருக்கிறது. இருப்பினும் விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் விவசாயத்தை பாதிக்கக்கூடிய நிறைய பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அவற்றில் ஒன்று தான் ரூகோஸ் வெள்ளை ஈக்கள். இந்த ரூகோஸ் வெள்ளை ஈக்கள் தென்னை மரங்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்பில் இருந்து தென்னை மரங்களை பாதுக்காக்க இயற்கை முறைகள் என்ன இருக்கிறது என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் எப்படி கட்டுப்படுத்தலாம்?

பொதுவாக இந்த பிரச்சனை அதிக வெப்பநிலை காரணமாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. அதேபோல் தொடர்ச்சியாக வறண்ட வெப்பநிலை அதிகரித்ததால் இந்த பூச்சியின் தாக்குதல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் மேலாண்மை தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.

ரூகோஸ் வெள்ளை ஈ தாக்கம்:

ரூகோஸ் வெள்ளை ஈ

வயதில் முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள், மஞ்சள் நிறமுள்ள நீள்வட்ட முட்டைகளை சுழல் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பகுதியில் இடும். மெழுகுப் பூச்சுடன் காணப்படும் முட்டைகளிலிருந்து வெளிப்படும் இளம் குஞ்சுகள் மற்றும் முதிர்ந்த ஈக்கள் ஓலைகளின் அடிப்பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சும்.

இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவம் கீழ்மட்ட ஓலைகளிலிருந்து படியும். அதன்மேல், கேப்னோடியம் என்ற கரும்பூசணம் படர்கிறது. இதனால், ஒளிச்சேர்க்கை தடைபடுகிறது. இப்பூச்சிகள் தென்னை மட்டுமில்லாமல், வாழை, பாக்கு, சப்போட்டா ஆகிய பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதாம்.

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தடுப்பு முறைகள்

ஒட்டும் பொறி (Sticky Traps):

sticky traps

இது போன்ற அறிகுறிகள் உங்கள் தென்னை மரங்களில் காணப்பட்டால் உடனடியாக மஞ்சள் நிறத்தில் உள்ள பாலீத்தின் தாளில் மணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை (Sticky Traps) 5 அடிக்கு ஒன்றரை அடி என்ற அளவில் ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில், 6 அடி உயரத்தில் தொங்கவிட்டு வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.

விளக்குப் பொறி (Light Traps):

Light Traps

அதேபோல் விளக்குப் பொறிகளை (Light Traps) ஏக்கருக்கு 2 வீதம் 6 முதல் 11 மணி வரையிலும் ஒளிர செய்தால் இத்தகைய பிரச்சனையை கட்டுப்படுத்தலாம். மேலும்  பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்க, ஓலைகளின் அடிப்புறத்தில் தண்ணீரை வேகமாகப் பீய்ச்சி அடித்துக் கட்டுப்படுத்தலாம்.

கரும்பூசண நோயை கட்டுப்படுத்த:

கரும்பூசண நோய் தென்பட்டால் அவற்றை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருடன் 25 கிராம் மைதா பசையினை கலந்து ஓலையின் மீது தெளிக்க வேண்டும். அவை வெயில் பட்டு காயும் பொழுது கரும்பூசணத்துடன் உதிர்ந்துவிடும்.

வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாகும் பொழுது பொறிவண்டுகள் போன்ற இரைவிழுங்குகிகள் இயற்கையாக உருவாகும். இதற்கு நீங்கள் மரத்தினைச் சுற்றி தட்டைப் பயறு போன்ற பயறு வகைகளை ஊடுபயிராகவும், மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட சாமந்தி, சூரியகாந்தி போன்றவற்றை வரப்புப் பயிராகவும் பயிரிடுவதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை கவரலாம்.

நன்மை செய்யும் பூச்சிகளை பூச்சிக்கொல்லி மருந்துகள்அழித்துவிடும் என்பதனால், பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இந்த முறைகளை கடைபிடித்தால் இந்த பிரச்சனையிலிருந்து தென்னை மரங்களை பாதுகாத்திடலாம்.

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம்