பதினெண் கீழ்க்கணக்கு அற நூல்கள் எத்தனை?
Ara Noolgal – நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான அறநூல்கள் பற்றிய சில பொது அறிவு குறித்த விடயங்களை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம்.
இது கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும், அதேபோல் TNPSC பொது தேர்வுகளுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க அறநூல்கள் குறித்த தகவல்களை இப்பொழுது நாம் நமது தலத்தில் படித்தறியலாம்.
அறநூல்கள் யாவை?
சங்க இலக்கியங்களிலேயே ஆங்காங்கு உரிய அறக் கருத்துகளைக் கூறுவதற்குப் புலவர்கள் தவறவில்லை. சமூகப் போக்கில் மாறுதல்கள் விளைய வேண்டும் என விரும்பிய சான்றோர்கள் அவ்வப்போது அறநூல்களை வரைந்தனர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பதினொரு நூல்கள் அறநூல்கள். இவை அக்காலப் பண்பாட்டை உருவாக்கப் பெரிதும் காரணமாயிருந்தன. அவையாவன:
அறநூல்கள் பெயர்கள் – Ara Noolgal
- திருக்குறள்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
- திரிகடுகம்
- ஆசாரக் கோவை
- பழமொழி
- சிறுபஞ்சமூலம்
- முதுமொழிக்காஞ்சி
- ஏலாதி
மேற்கூறிய பதினொரு நூல்கள் தமிழரின் அறவாழ்வைக் காட்டுவன. இவை தவிர, பிற்காலத்தில் ஒளவையார், குமரகுருபரர், அதிவீரராம பாண்டியர், சுப்பிரமணிய பாரதியார் போன்ற புலவர் பெருமக்கள் நீதிநூல்களை இயற்றியுள்ளனர்.
சிறுவர்க்கெனவே ஆத்திசூடி, மூதுரை, நல்வழி, கொன்றைவேந்தன் (இயற்றியவர்: ஒளவையார்), வெற்றிவேற்கை (இயற்றியவர்: அதிவீரராம பாண்டியன்), நன்னெறி (இயற்றியவர்: சிவப்பிரகாசர்) போன்ற நீதிநூல்கள் எழுதப்பட்டன. சதகம் எனப்படும் நூறு பாடல்கள் கொண்ட நீதி நெறித் தொகுப்புகளும் தோன்றின.
மேற்கூறிய 11 அறநூல்கள் பற்றிய சிறுகுறிப்பு:
1. திருக்குறள்
தமிழின் சிறந்த அற இலக்கியம்
ஆசிரியர் – திருவள்ளுவர்.
பெற்றோர் – ஆதி பகவன்
காலம் – பொ.ஆ.மு. 1ஆம் நூற்றாண்டு
வேறு பெயர்கள் – உலகப்பொதுமறை, முப்பால், உத்திரவேதம், தெய்வநூல், வாயுறை வாழ்த்து, பொய்யாமொழி எனத் திருக்குறளுக்கு வேறு பெயர்கள் உண்டு.
அமைப்பு – (குறள்) வெண்பாவால் ஆன நூல், 1330 குறட்பாக்கள்,
அறத்துப்பால் (38 அதிகாரங்கள் – 4 இயல்கள் – பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்)
பொருட்பால் (70 அதிகாரங்கள் – 7 இயல்கள் – அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல்)
இன்பத்துப்பால் (25 அதிகாரங்கள் – 2 இயல்கள் – களவியல், கற்பியல்)
2. நாலடியார்
திருக்குறளுக்கு அடுத்த நிலையில் பாராட்டத்தக்கது.
ஆசிரியர்கள் – சமண முனிவர்கள்
தொகுத்தவர் – பதுமனார்
காலம் – பொ.ஆ.பி. 2ஆம் நூற்றாண்டு
வேறு பெயர்கள் – நாலடி நானூறு, வேளாண் வேதம்
அமைப்பு – வெண்பாவால் ஆன நூல், 400 பாடல்கள், அறத்துப்பால் (13 அதிகாரங்கள் 130 பாடல்கள்), பொருட்பால் (26 அதிகாரங்கள் 260 பாடல்கள்), இன்பத்துப்பால் (1 அதிகாரம் 10 பாடல்கள்)
3. நான்மணிக்கடிகை
ஒவ்வொரு பாடலிலும் மணி போன்ற நான்கு கருத்துகள் உள்ளன.
ஆசிரியர் – விளம்பிநாகனார்
காலம் – பொ.ஆ. பி.2ஆம் நூற்றாண்டு
அமைப்பு – வெண்பாவால் ஆன நூல். 104+2 (கடவுள் வாழ்த்து) பாடல்களைக் கொண்டது.
4. இன்னா நாற்பது
ஒவ்வொரு பாடலிலும் மக்களுக்குத் துன்பம் தரும் ‘இன்னா’தவை நான்கு இடம் பெற்றுள்ளன.
ஆசிரியர் – கபிலர் (சங்கப் புலவரா? பிற்காலத்தவரா? என்ற ஐயம் உண்டு)
காலம் – பொ.ஆ. 2ஆம் நூற்றாண்டு
அமைப்பு – வெண்பாவால் ஆன நூல். 40+1 (கடவுள் வாழ்த்து) பாடல்களைக் கொண்டது.
5. இனியவை நாற்பது
இன்னா நாற்பது கூறும் கருத்துகளுக்கு எதிரான ‘இனிய’ மற்றும் மக்கள் நன்னெறியில் வாழக் கடைப்பிடிக்க வேண்டிய கருத்துகள் உள்ளன
ஆசிரியர் – பூதஞ்சேந்தனார்
காலம் – பொ.ஆ.பி. 2ஆம் நூற்றாண்டு
அமைப்பு – வெண்பாவால் ஆன நூல். 40+1 (கடவுள் வாழ்த்து) பாடல்களைக் கொண்டது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒட்டக்கூத்தர் எழுதிய நூல்கள் யாவை..?
6. திரிகடுகம்
சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருள்களால் ஆன மருந்துப்பொருள் திரிகடுகம். இது உடல் நோயைப் போக்குவதுபோல், இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் உள்ள மூன்று கருத்துகள் மனநோயைப் போக்கும். ஆதலால் திரிகடுகம் என்பது காரணப் பெயராக அமைந்துள்ளது.
ஆசிரியர் – நல்லாதனார்
காலம் – பொ.ஆ.பி. 2ஆம் நூற்றாண்டு
அமைப்பு – வெண்பாவால் ஆனது. 100+1 (கடவுள் வாழ்த்து) பாடல்களைக் கொண்டது.
7. ஆசாரக் கோவை
ஆசாராம் என்பது ஒழுக்கம், தூய்மை, நன்மை, முறைமை, நன்னடத்தை, வழிபாடு, கட்டளை, வழக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
ஆசிரியர் – பெருவாயில் முள்ளியார்
காலம் – பொ.ஆ. பி. 3ஆம் நூற்றாண்டு
அமைப்பு – வெண்பாவால் ஆன நூல். 100 + 1 (கடவுள் வாழ்த்து) பாடல்களைக் கொண்டது.
8. பழமொழி
பழமையான மொழி. அனுபவசாலிகள் கூறும் மொழி.
ஆசிரியர் – முன்றுறையரையனார்.
காலம் – பொ.ஆ.பி.3ஆம் நூற்றாண்டு
அமைப்பு – வெண்பாவால் ஆன நூல். 400 + 1 (தற்சிறப்புப் பாயிரம்) – முதல் இரண்டு அடிகளில் ஆசிரியர் தாம் கருதிய பொருளையும், மூன்றாம் அடி பெரும்பான்மை ஆண்மக்களையும் சிறுபான்மை பெண்மக்களையும் விளிக்கும், நான்காம் அடியில் பழமொழி இடம் பெற்றிருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நேரு அவர்கள் எழுதிய நூல்கள்
9. சிறுபஞ்சமூலம்
கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்களால் ஆன மருந்துப் பொருள் சிறுபஞ்சமூலம். இம்மருந்துப் பொருள் உடல் நோயைத் தீர்க்கும். அதுபோல் இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் உள்ள ஐந்து கருத்துகள் மன நோயைப் போக்கும். எனவே இந்நூலுக்கு சிறுபஞ்சமூலம் என்பது காரணப் பெயராயிற்று.
ஆசிரியர் – காரியாசான். இவர் ஏலாதி ஆசிரியரான கணிமேதாவியாருடன் பயின்றவர்.
காலம் – பொ.ஆ.பி. 5ஆம் நூற்றாண்டு.
அமைப்பு – வெண்பாவால் ஆன நூல் , 100 + 2 (கடவுள் வாழ்த்து + பாயிரம்) பாடல்கள்
10. ஏலாதி
ஏலம் + ஆதி = ஏலாதி. ஏலக்காயுடன் 1 பங்கு ஏலக்காய் + 2 பங்கு இலவங்கம் பட்டை + 3 பங்கு நாககேசுரம் + 4 பங்கு மிளகு + 5 பங்கு திப்பிலி + 6 பங்கு சுக்கு என்ற விகிதத்தில் சேர்த்து செய்யப்பட்டக் கூட்டு மருந்துதான் ஏலாதி ஆகும். இம்மருந்து உடல் நோயை நீக்கி, உடலுக்கு வலிமை சேர்ப்பதுபோல் இதன் கருத்துகள் அறியாமையை நீக்கி மெய்யுணர்வைத் தரும்.
ஆசிரியர் – கணிமேதாவியார். இவர் மற்றொரு பதினெண் கீழ்க்கணக்கு நூலான திணைமாலை நூற்றைம்பது என்ற நூலையும் எழுதியுள்ளார்
அமைப்பு – வெண்பாவால் ஆன நூல், 80 + 2 (கடவுள் வாழ்த்து, சிறப்புப் பாயிரம்) பாடல்கள்.
11. முதுமொழிக் காஞ்சி
சான்றோர்களின் அனுபவத் தொகுப்பாக, மனித வாழ்வின் நிலையாமையைக் கூறும் நூல்.
ஆசிரியர் – மதுரை கூடலூர் கிழார்.
அமைப்பு – வெண்செந்துறை என்னும் பாவகையால் ஆன நூல், 100 பாடல்கள். ஒவ்வொரு பாடலும் இரண்டு அடிகள் கொண்டது, முதல் அடி ‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்’ என்று தொடங்கும், சிறந்தபத்து, அறிவுப்பத்து, பழியாப்பத்து, துவ்வாப்பத்து, அல்லப்பத்து, இல்லைப்பத்து, பொய்ப்பத்து, எளியப்பத்து, நல்கூர்ந்தபத்து, தண்டாப்பத்து எனப் 10 பிரிவுகளும், ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 10 பாடல்கள் வீதம் உள்ளன.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |