அணியிலக்கணம்
கொடியொன்று நேராக இருப்பதை விட, வளைந்து காணப்பட்டாள் பார்க்க அழகாக இருக்கிறது. நேராக நிற்கின்ற பெண்ணை விட, வளைந்து வளைந்து நாட்டியம் ஆடும் பொழுது பெண் அழகாக இருக்கின்றாள். பலர் அதைக் கண்டு களிக்கின்றனர். மங்கையொருத்தி நன்கு உடை உடுத்திப் பலவகையான அணிகலன்களால் தன்னை ஒப்பனை செய்து கொண்டால் அவளுடைய தோற்றம் அழகாக பொலிவாகக் காணப்படுகின்றது. அழகான விதைகளும் இதைப்போன்றதே. பாடுகின்ற கவிஞர் உள்ளதை உள்ளவாறு பாடாமல்
படிகின்றவர் உள்ளம் விழையுமாறு சிலவற்றைச் சேர்த்து அலங்காரப்படுத்திக் கற்பனையாகப்பாடுவர், சுவையை உண்டாக்குவர்.
அணிகலன்:
மங்கைக்கு அணிகலன்களால் அழகை உண்டாக்குவர். அதைப் போன்று கவிதை என்னும் கன்னிக்குச் சில அலங்காரங்களை அமைப்பர். அதற்கு “அணிகலன்” என்று பெயர்.
அணி
மக்களுக்கு அழகு செய்வது கைத்திறத்தால் செய்யப்பெற்ற அணிகலன்களாகும். அதைப்போன்று கற்பனைத்திறத்தால் செய்யுளுக்கு அழகு செய்து சுவையை உண்டாக்குவதற்கும் “”அணி” என்று பெயர்.
அணி வகைகள் pdf
அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருளாகும். செய்யுளைச் சொல்லாலும் பொருளாலும் அழகுபெறச் செய்வதே அணியென்று சொல்லப்படும். புலவர் தம் கற்பனைத்திறத்தாலும் மொழிப்புலமையாலும் சொல்லழகும் பொருளழகும் தோன்றப் பாடிய செய்யுள்களில் காணப்படும் அழகினை விளக்கி கூறுவது “அணியிலக்கணம்” எனப்படும். இவ்வணி பலவகைப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
சொல்லணி
சொல்லால் அழகு பெறச்செய்வது சொல்லணியாகும். சொல்லனி எழுத்துத் தொடர்பாகவும் சொல் தொடர்பாகவும் கையாளப்படும் அணியாகும். அது,
- எதுகை
- மோனை
- மடக்கு
- சிலேடை
- பின்வரு நிலை எனப் பல வகைப்படும்.
பொருளணி
பொருளால் அழகு பெறச் செய்வது பொருளணியாகும். அது,
- உவமை
- உருவகம்
- தன்மை நவற்சி
- உயர்வு நவற்சி
- தற்குறிப்பேற்றம்
- 6. எடுத்துக்காட்டு உவமை
- இல்பொருள் உவமை
- ஐயமுவமை
- ஏகதேச உருவக அணி
- வேற்றுமை அணி
- பிறிது மொழிதல் அணி
- நிரல் நிறை அணி
- இரட்டை மொழிதல் அணி
- வேற்றுப்பொருள் வைப்பணி
- வேற்றுமைப் பொருள் வைப்பணி
- வஞ்சப்புகழ்ச்சி அணி
- சுவை அணி
- முரண் அணி
- நுட்ப அணி
எனப் பலவகைப்படும்.
சொல்லணி:
01. எதுகை அணி
செய்யுள்களிலே வரும் சீர்களின் இரண்டாவது எழுத்து ஒத்த ஒலி தரும் வகையில் அமைக்கப்படுதும் உரைநடையிலே வாக்கியச் சொற்களின் இரண்டாவது எழுத்து ஒத்த ஒலி தரும் வகையில் அமைக்கப்படுவதுமான அணி எதுகை அணியாகும்.
| செய்யுட் சீர்களிலோ உரைநடைச் சொற்களிலோ இரண்டாவது எழுத்து ஒன்றிவரத்தொடுப்பது எதுகை எனப்படும். |
உதாரணம் :
1. ஆலமுண்ட நீல கண்டன்
2. பாலை வனம் சோலை வனம் ஆக வேண்டும்.
3. சூதும் வாதும் வேதனை செய்யும்
4. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு….
5. விட்ட குதிரையை எட்டிப்பிடித்துக் கட்டி கடத்தித் திட்டத்தினத்தை மட்டுப் படுத்திய பட்டத் தலைவனை இட்ட முடனே ஏந்தி நின்றனரே.
02. மோனை அணி
செய்யுள்களிலே வரும் சீர்களின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பதும் (ஒத்த ஒலி தரும் வகையில் அமைக்கப்படுவதும்) உரைநடையிலே வாக்கிய சொற்களின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பதும் (ஒத்த ஒலி தரும் வகையில் அமைக்கப்படுவதும்) “மோனை” ஆகும்.
| செய்யுட் சீர்களிலோ உரைநடைச் சொற்களிலோ முதலாவது எழுத்து ஒன்றிவரத்தொடுப்பது மோனை எனப்படும் |
உதாரணம் :
1. சிடு சிடுப்பும் சினமும் சினேகிதத்திற்கு பங்கம்.
2. அவன் அணு அணுவாய்ச் செய்தான்
3. நயினை நாகபூக்ஷணியை நன்கு வணங்குவோம்.
4. உனை உணும் உணர்வை நல்காய் – ஒற்றியூரானே
5. கமழக் கமழக் தமிழிசை பாடினாள்.
03. மடக்கணி
ஒரே தொடர் மடங்கி வந்து இருவேறு பொருளைத் தந்தால் அது “மடக்கணி” எனப்படும். அதாவது ஒரு பாடலில் வந்த சொல்லோ சீரோ பொருள் வேறுபடும் வகையில் மீண்டும் மீண்டும் (மடங்கி) வருவது மடக்கணி ஆகும்.
| ஒரு செய்யுளில் ஒரு தடைவ வந்த சொல்லோ தொடரோ மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தருமாயின் அது மடக்கணி எனப்படும். இதையே யமகம் என்றும் அழைப்பர் |
உதாரணம் :
1. ஆவலுடன் பாவலருடன் ஆறுகால் வண்டினமும்
காவலரைச் சூழும் கலைசையே – மேவும்
அரிவையம் பாகத்தான் அரனொடு மூன்றெய்தோன்
அரிவையம் பாகத்தான் ஆகும்.
இப்பாடலில் “அரிவையம் பாகத்தான்” என்ற தொடர் இருமறை மடங்கி வந்துள்ளது. முதல் அடியில் உள்ளதை அரி + வை + அம்பு + ஆக – திருமால் கூர்மையான அம்பாக விளங்க எனவும்.
அரிவை ஸ்ரீ அம் + பாகத்தான் – பார்வதியை அழகிய ஒரு பாகத்தில் உடையவன் எனவும் இருவேறு வகையில் பதம் பிரித்த பொருள் கொள்ளலாம்.
2. ஓடுமா தங்கமே உருளுமா தங்கமே
வீடுமா தங்கமே வீழுமா தங்கமே.
ஓடும் மாதங்கம் – அஞ்சி ஓடும் யானை
உருளும் மாதங்கம் – அரச மரம் அடிசாய்ந்து உருளல்
வீடும் மா நாகம் – இறக்கும் பெரிய நாகப் பாம்புகள்
வீழும் மா நாகம் – விழுகின்ற பெரிய புன்னை மரங்கள்
04. சிலேடை அணி
செய்யுள்களிலோ உரைநடைகளிலோ ஒரு சொல்லோ சொற்றொடரோ, பல பொருள்பட வருவது “சிலேடை” அணியாகும்.
உதாரணம் : “செய்கரங்களால் இரவு தீர்க்கும்”
- இங்கு சூரியன் சிவந்த கரங்களால் இருளை இல்லாதொழித்தலும்
- அரசன் ஈகையால் சிவந்த தனது கரங்களால் வறுமையை ஒழித்தலும் சிலேடையாக
உணர்த்தப்பட்டுள்ளது. - இங்கு இரவு என்பது இராத்திரி, இரத்தல் எனும் இருள்பொருள்களில் இடம் பெற்றுள்ளது.
05. பின்வருநிலை அணி
ஒரு செய்யுளில் முன்னால் வந்த சொல்லானது பொருளானது பின்னர் பல இடங்களிலும் வருமாயின், அது “பின்வருநிலை” அணி ஆகும். இப்பின்வருநிலை அணி மூன்று வகைப்படும்.
1. சொல் பின்வரு நிலை அணி
2. பொருள் பின்வரு நிலை அணி
3. சொற்பொருள் பின்வமுநிலை அணி – எனப்படும்.
1. சொல் பின்வரு நிலை அணி
ஒரு செய்யுளில் முன்னர் வந்த ஒரு சொல் பின்னர் பல இடத்தும் வந்து வெவ்வேறு பொருளைத்
தருமாயின் அது சொல் பின்வருநிலை அணி எனப்படும்.
உதாரணம்:
“மால்கரி காத்தளித்த மாலுடைய மாலைசூழ்
மால் வரைத்தோன் ஆதரித்த மாலையார் -மாலழருள்சூழ்
மாலையின் மால்கடல் ஆர்ப்ப மதன்தொடுக்கும்
மாலையின் வாளி மலர்”
மால்கரி – மதமயக்கம் உள்ள யானை
மாலுடைய – திருமாலுடை
மால்வரைத்தோள் – பெரிய மலையை ஒத்த தோள்
மாலிருள் – மயங்கிய இருள்
மால்கடல் – அச்சமான கடல்
இதில் “மால்” என்ற சொல் பல இடங்களில் வந்து பல பொருள்களைத் தருவதால் இது சொல் பின்வருநிலை அணி எனப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
10 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்
2. பொருள் பின்வருநிலை அணி
ஒரு செய்யுளில் முன்னால் கூறப்பெற்ற பொருளை பின்வரும் பல இடங்களில் வெவ்வேறு சொற்களால் உணர்தத்ப்படுமானால் அது பொருள் பின்வருநிலை அணி எனப்படும்.
உதாரணம்:
“அவிழ்ந்தன தோன்றி: அலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்மகை முல்லை”
இதில் அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன என்ற மூன்று வெவ்வேறு சொற்களாயினும் “மலர்ந்தன” என்னும் ஒரு பொருள் உடையன.
3. சொல் பொருள் பின்வருநிலை அணி
செய்யுளுள் முன்னர் வந்த ஒரு சொல்லே பின்வரும் பல இடங்களில் வந்து முன்னர் உணர்த்திய பொருளையே உணர்த்துமாயின் அது சொல் பொருள் பின்வருநிலை அணி எனப்படும்.
உதாரணம்:
“துப்பார்க்குத்துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை”
இதில் ‘துப்பு’ என்னும் சொல் பின்னரும் பல இடங்களில் வந்து உணவுபொருள் என முன்னர்
உணர்த்திய பொருளையே பின்னர் வந்த சொற்களுக்கும் உணர்த்துகின்றது.
பொருளணி
1. உவமை அணி
- ஒருவர் தான் எடுத்துக் கொண்ட பொருளை விளக்குவதற்கு வேறொரு பொருளை ஒப்பிட்டுக் காட்டுவது உவமை அணியாகும்.
- இது இரண்டு பொருள்களுக்குமான ஒப்புவமையை விளக்குது.
- உவமானம், உவமேயம், பொதுத்தன்மை, உவமை உருபு என்பன இதன் பகுதிகளாகும்.
- வினை, பயன் மெய், உரு எனும் நான்கின் காரணமாக ஒரு பொருளை அதன் தன்மையை கொண்ட மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறப்படுகிறது.
- தெரியாத ஒன்றைத் தெரிந்த ஒன்றின் மூலம் விளக்குவதே இதன் அடிப்படைப் பண்பாகும்.
- உவமையிலிருந்தே ஏனைய அணிகள் தோற்றம் பெற்றதால் இது அணிகளுக்கெல்லாம் தாய் அணி எனச் சிறப்பிக்கப்படுகின்றது.
உவமையின் கூறுகள்
உவமானம் – எவர்க்கும் தெரிந்த பொதுவான சிறப்புப் பொருளைக் குறிக்கும் (உவமிக்கும் பொருள்)
உவமேயம் – நாம் விளக்க எடுத்துக்கொண்ட பொருள் (உவமிக்கப்படும் பொருள்)
பொதுத்தன்மை – உவமானத்துக்கும் உவமேயத்திற்கும் இடையேயான ஒற்றுமை (இரண்டுக்கும் உள்ள பொதுப்பண்பு)
உவமை உருபு – ஒப்புவமைகளைக் காட்டப் பயன்படும் சொற்கள் உருபுகள் எனப்படும் (போல, போன்ற, ஒபப், புரைய, அன்ன, நேர, நிகர….)
2. உருவக அணி:
உவமைக் குறிப்பை உள்வாங்கி, ஒரு பொருளை மற்றொன்றாகக் கூறுவது உருவக அணியாகும். அது போன்று இது என்பது உவமை, அதுவே இது என்பது உருவகம் என்பதால் இதவை செறிந்த உவமை எனச்சொல்லலாம்.
உதாரணம் :
தாமரை போன்ற விழி – உவமை அணி
விழித்தாமரை – உருவக அணி
மதிப் போன்ற வதனம் – உவமை அணி
வதனமதி – உருவக அணி
“எல்லையில்லாததோர் வானக்கடலிடை வெண்ணிலாவே” இங்கு பாரதியார் வானக்கடல் என வானத்தை உருவகித்துள்ளார்.
இங்கு கடலும் வானமும் பேதமை தோன்றா வகையில் ஒன்றென ஒப்பிடப்படுவதை அறியலாம். இங்கு,
கடல் – உவமானம்
வானம் – உவமேயம்
ஆனால் அதனை அவ்வாறு காட்டாமல் வானத்தைக்கடல் என்றே பாரதியார் உருவகித்துள்ளார்.
- உவமையில் உவமானம் முன்னும் உவமேயம் பின்னும் அமைந்திருக்கும். உருவகத்தில் உவமேயம் முன்னும் உவமேயம் பின்னும் அமைந்திருக்கும். உவமையில் போல என்பது
உருபாக வருவது போன்று உருவகத்தில் “ஆகிய” என்னும் பண்பு உருபு
மறைந்து நிற்கும்
மேலதிகம்…
1.கைம்மலர், 2.தமிழ்த்தேன், 3. முகமலர் 4. துன்பக்கடல் 5. மேகத்திரை
3. இயல்பு நவிற்சி அணி (தன்மை நவிற்சி அணி)
ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்தியும், உயர்வாகவும், கூறாமல் உள்தை உள்ளவாறு இயற்கை தன்மைமாறாத வகையில் அழகுறக்கூறுவது “இயல்பு நவற்சி அணி” எனப்படும். இதனை தன்மை நவிற்சி அணி எனவும் கூறுவர்.
உதாரணம்:
1. “உலகெலாம் உணர்நது ஓதற்க அரியவன்
நிலவுலாவிய நீர்மல வேணியன்
அலகு இல் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.”
இப்பாடலில் உலக மக்கள் யாவரும் உணர்ந்து அறிவதற்கு அறியவனாய் உள்ளவன், நிலாப்பிறையையும் கங்கை நதியையும் தன் சடைமுடியில் அணிந்தவன். அளவறந்ற பேரொளி வடிவானவன் தில்லையம்பலத்தில் மகிழ்ந்து ஆடுபவன் என்று சேக்கிழார் சிவபெருமானின் தோற்றத்தை உள்ளத்தை உள்ளவாறு அழகுபடக்கூறியுள்ளார்.
2. எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தங்கன்
விழுமம் துடைத்தவர் நட்பு”
ஒரு காலத்தில் தம்முடைய துன்பத்தைப் போக்கியவர் நட்பை, எழு பிறப்பிலும் பெரியோர் நினைத்துக் கொண்டே இருப்பர் என்று இக்குறளில் உயர் பண்பை வள்ளுவர் இயல்பாக கூறியுள்ளார்.
4. உயர்வு நவற்சி அணி
ஒன்றை எடுத்துக்கூறும்பொழுது உள்ளதை உள்ளவாறு கூறாமல் கேட்போர் மகிழும் வண்ணம் அழகுப்பட பன்மடங்கு உயர்வாகப்போக்கிக் கூறாது “உயர்வு நவற்சி அணி” எனப்படும். (ஒரு பொருளின் தன்மையை மிதமிஞ்சி உயர்த்திக் கூறுவது)
உதாரணம்:
1. விண் தடவு கோபுரம்
கேபுரத்தின் உயரத்தை உள்ளவாறு கூறாமல் விண்ணைத் தொட்டுக்கொண்டிருப்பதாகப் பன்மடங்காக உயர்திக் கூறப்பட்டுள்ளது.
2. அணி கொண்ட குரங்கினங்கள்
அலை கடலுக் கப்பாலை
மணலொன்று காணாமல்
வரையெடுத்து மயங்கினவே
இராமன் இலங்கை மீது படை நடத்திச் செல்வதற்காக வானரங்கள் கடலில் அணைக்கட்டின. வானரங்கள் மலைகளையும் பெயர்த்து வந்து கடலில் போட்டன. அதனால் மிகுதியும் வருந்தின. இவ்வாறு ஏன் வருத்தப்பட வேண்டும்? இப்பாலைவனத்தின் ஒரு மணலை எடுத்து வந்து கடலில் போட்டிருந்தால் கடல் முழுவதுமே வற்றியிருக்குமே குரங்குகளுக்கு இது தெரியவில்லையே என்று இரங்குவது போல அமைகிறது பாடல். இவ்வாறு கூறுவது மூலம் இப்பாலைவனத்தின் வெம்மைக் கொடுமையை உணர்த்துகிறார் புலவர்.
பாலைவனத்தின் ஒரு மணலே கடல் நீர் முழுவதையும் வற்றவைத்து என்பதை உய்த்துணர வைக்கின்றார் புலவர்.
3. உழுந்திட இடமில்லை உலகம் எங்கனும்
அழுந்திய உயிர்ககெலாம் அருட்கொம் பாயினாள்
எழுந்தியன் எழுந்திடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மதிலைக் கூஎற்றே.
இங்கே தசரதச் சக்கரவர்த்தியின் சேனைப் பெருக்கத்தின் மிகுதியைச் செய்யுள் கூறி நிற்கிறது. தனது சேனையெல்லாம் முன் செல்லத் தான் பின் செல்ல வேண்டுமென எண்ணி தசரதன் இன்னும் இருப்பிடத்திலிருந்து எழும்பவில்லை. ஆனால் அயோத்தியில் இருந்து ஆரம்பித்த சேனையின் முன்னணி மிதிலையை அடைந்து விடுகிறது. எனச் சேனைப்பெருக்கத்தினை மிகைப்படக் கூறுகின்றார் புலவர்.
உலகம் எங்கனும் உழுந்திட இடமில்லை என்பார். அதாவது அயோத்திக்கும் மிதிலைக்கும் இடைப்பட்ட மிகப்பெரும் நிலப்பரப்பில் ஒரு உழுந்து மணியானது வைக்க இடமில்லை எனத் தசரதனது சேனைப் பெருக்கத்தை மிகைப்படக் கூறுகிறார்.
4. பளிங்கு மாளிகைத் தலந்தோறும் இடந்தொறும்
பசுந்தேன் துளிக்கும் கற்பகத் தண்ணறுஞ்
சோலைகன் தோறும் அளிக்குந் தேறலுண்டாடுநர் பாடுநர் ஆகிக்
களிக்கண் நாரலாற் கவல்கின்றார் ஒருவரை காணேன்.
கம்பராமாயணப்பாடல் இது. சீதையைத் தேடி இலங்கையை அடைகின்றான் அனுமன். தான் கண்டவற்றை அனுமன் கூறுவதாக அமையும் பாடல்களில் இதுவும் ஒன்று. பளிங்கு மாளிகைகள் ஏனைய இடங்கள், தேன் துளிக்கும் கற்பக மரம் நிறைந்த குளிர்ச்சியான சோலைகள் ஆகிய இடங்களில் உள்ள மக்கள் தேன் உண்டு, ஆடிப்பாடி மகிழ்கின்றனர். ஒருவர் கூடக் கவலைப்பட்டதைக் காணவில்லை. இதுவே இப்பாடலில் பொழிப்பு.
இங்கு இலங்கை வாழ் மக்கள் இன்புற்று ஆடுவதும் பாடுவதுமாய் இருக்கின்றார்களேயன்றி கவலைப்படுபவர் ஒருவர் கூட இல்லை என அனுமன் வாயிலாக்க கம்பர் உயர்வாக கூறுகின்றார
5. தற்குறிப்பேற்ற அணி
இயற்கையாக நிகழும் நிகழ்ச்சியின் மேல் புலவன் தன்னுடைய குறிப்பை ஏற்றிச் சுவைப்படக் கற்பனையாகக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி ஆகும்.
தன் + குறிப்பு + ஏற்றம் – தற்குறிப்பேற்றம்
உதாரணம்:
1. நிலவுலகத்தை தருகின்ற பெரிய தோள்களினையுடைய கிள்ளிவளவனுடைய மதயானை
பகையரசருடைய வெண்கொற்றக்குடையைப் பிடுங்கித் தேய்த்தெறிந்து சீற்றத்தினால் ஆகாயத்திலே பாய்ந்து வந்து நம்மேலும் பாய்ந்து விடுங் கொல்லோ என்று நினைத்துத் தெளிந்த ஆகாயத்திலே நின்ற குளிர்மதி நடுங்கத் தொடங்கியது.
பொருள் விரிவு:
கிள்ளிவளவனின் வீரச்சிறப்பை ஆசிரியர் சுவைப்படக் கூறுகின்றார். ஒருவனின் வீரத்திற்கு அறிகுறியானது அவனின் தோள்களாகும். கிள்ளிவளவனின் தோளானது நிலவுலகைத் தாங்குகின்றமையால் அவன் நிகரற்ற பெரு வீரனாவான். அத்தகையன் மதயானை மீதேறி போரிடுகையில் அவனின் யானை பகையரசர்களின் குடைகளைப் பிடுங்கியெறிவதைக் கண்ட சந்திரன் தன்மீதும் பாயுமோ என்றெண்ணி அஞ்சுவதாக கிள்ளிவளவனின் வீரச்சிறப்பு குறப்பட்டுள்ளது.
அணிச்சிறப்பு :
அவனின் யானை ஆகாயத்திலே பாய்ந்து விடுமோ என குளிர்மதி நடுங்கத்தொடங்கியது என்பது தற்குறிப்பேற்ற அணியாகும். பகை அரசனுடைய வெண்கொற்றக் குடையைப்போலச் சந்திரன் இருப்பதனால் தன்னையும் பகைவனாகக் கருதி யானை தாக்கிவிடுமோ எனச் சந்திரன் நினைப்பதாப் புலவர் தன் குறிப்பை இயற்றை நிகழ்ச்சியொன்றிலே ஏற்றிக் கூறுவதனால் இது தற்குறிப்பேற்ற அணியாகும்.
2. கன்னியாக்குமரியில் கடல் ஓரத்தில் கடலுக்குள் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரச்சிலை ஏன் கடல் ஓரத்தில் நிறுவப்பட்டது. சிலை திறப்பு விழாவையொட்டி நடந்த கவியரங்கில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து கூறிய காரணம்
“முத்தமிழ் அறிஞனே முதல்வனே !
வள்ளுவர்க்கு நீ தந்த
உயரத்திற்கென் வணக்கம்
ஏனிந்த உயரம்?
இங்கிருந்தே
இமயத்தின் உயரத்தைக்
குமரித் தமிழன்
எட்டித்தொடச் செய்யும்
ஏற்பாடுதானே
அதைக் கடலுக்குள் அமைத்த
உன் குறும்புக்கு என் வணக்கம்
கடலுக்குள் ஏனமைத்தாய் ?
இந்த கடல்தானே
கொஞ்சு தமிழை குடித்த கடல்?
இந்த கடல்தானே
குமரிக்கோடு அழித்த கடல்
வா கடலே!
உன் பாவம் தீர
பாவலன் வள்ளுவனின்
பாதம் கழுவென்றுதானே
கடலுக்குள் சிலை வைத்தாய்!”
3. தீய வக்கொடிய காண கத்தசை
திறந்த வாய்தொறும் நுழைந்துதன்
சாலை புக்கவழி யாதெ னப்பரிதி
தன்க ரங்கொடு தினைக்குமே.
பொருள்:
சூரியனது கடிய கொடிய வெம்மையால் நிலம் பாளம்பாளமாக வெடித்துப் பிளந்திருந்தது. இது தற்குறிப்பேற்ற அணி. அவ்வணியானது புலவர் இயற்கை நிகழ்வின் மேல் தன் குறிப்பை எண்ணத்தை ஏற்றிச் சொல்வது. இங்கு சூரிய வெம்மையால் பாலை நிலம் வெடித்து பிளந்து இருத்தலும், அவ்வெடிப்பினூடாக சூரியகதிர் உள்நுழைந்து மேலும் வெப்பமுண்டாக்கலும் இயற்கை நிகழ்ச்சி இந்நிகழ்ச்சியின் மீது புலவர் தன் எண்ணத்தை குறிப்பை ஏற்றிக் காண்கிறான். சூரியன் தனது மனைவியான சாயை என்பாள் நிலத்தில் ஒளிந்திருக்கும் இடத்தை காண்பதற்காக நிலத்தில் வெடித்த பிளவுகள்தோறும் கையைவிட்டு இடைவிடாது தேடுகிறான். இவ்வணியின் வாயிலாகப் புலவனின் கற்பனை வளத்தை அறிய முடிகின்றது.
4. காலையிலே தாமரை மலர்கள் மலர்வது இயல்பான செயல் ஆகும். அத்தாமரை மலர்கள்
காலைத்தென்றல் காற்றிலே ஆடுவதும் உண்டு. இச் செயலை புலவர் ஒருவர்.
“காலையில் மலர்ந்த தாமரை மலர்கள்
அணியினை அழைத்து அசைந்து ஆடினவே. எனக் கூறுகிறார்.
காலையிலே மலர்ந்த தாமரை மலர்கள் வண்டினை வரவழைப்பதற்காக அசைந்து ஆடின. என்ற புலவர் புலவர் கூறியிருப்து தன் கருத்தைக் குறிப்பிட்ட நிகழ்ச்சியிலே சேர்த்துச் சொல்லியிருப்பதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு.
5. கம்பரும் இராமாயணத்திலே தற்குறிப்பேற்ற அணியைக் கையாண்டார். என்பதற்கு பின்வரும் அடிகள் சான்று பகிரும்.
“செமு மணிக்கொடி எனும் கைகளை நீட்டியந்தக் கடிநகர் கமலச்செங்கன் ஐயனை ஒல்லைவா வென்றழைப்பது போன்றதம்மா”
இவ்வரிகளில் மிதிலை நகரிலே கட்டப்பட்ட கொடிகள் காற்றில் அசைந்தாடுபவை கம்பர் தம் கருத்தை ஏற்றி அந்நகரம் கொடிகளாகிய கைகளை நீட்டி இராமனை ஆவலோடு விரைவாக வருவாயாக என்று அழைப் பதாக கூறியுள்ளார்.
6. “போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்ொடி
வாரல் என் பனபோல் மறித்துக் கைகாட்ட”
பாண்டியனின் அரண்மனை மீது கட்டப்பெற்றுள்ள மீன்க்கொடி காற்றில் இயற்கையாக அசைந்து பறந்து கொண்டிருக்கின்றது. இயற்கையாக நிகழும் இக்கொடியின் அசைவு மதுரை நகருள் நுழைய இருக்கும் கோவலனையும் கண்ணகியையும் பார்த்து “நீவிர் இங்கு வராதீர்” என்று கையசைத்துக் கூறுவதைப் போன்றிருந்தது எனப் புலவன் தன்னுடைய கருத்தினை ஏற்றிக் கூறுகின்றான்.
7. “மண்ணக மடந்தையை மயக்கொளிப் பளள்போல்
தண்ணீர் தெளித்துத் தன் கையாற் றடவி”
வாழைக்குறித்து இலையைப் பரப்பி, கோவலனுக்கு உணவு படைப்பதற்காகக் கண்ணகி நிலத்தைத் தண்ணீர் கொண்டு மெழுகித் தன் கையால் தடவியது. உறக்க மயக்கத்தில் இருக்கும் நில மடந்தையைத் தண்ணீர் தெளித்துத் தன் கையால் தொட்டு எழும்புவதைப் போன்றிருந்ததாம் தங்களுடைய மகிழ்ச்சியான வாழ்க்கையை நிலமடந்தை காணுமாறு அழைப்பது போன்றிருந்ததாம்.
8. “தையல் துயர்க்குத் தரியாது தஞ்சிறகாம்
கையான் வயிறலைத்துக் காரிருள்வாய் – வெய்யோனை
வாவுபரித் தெரெறிவாவென் றழைப்பனபோற் கூவினவே கோழிக்குலம்.”
தமயந்தியின் துயர்துடைப்பதற்காக சூரியனை உடனே அழைப்பதற்காகச் சேவல்கள் சிறகுகளாகிய கைகளைத்தம் வயிற்றிலடித்துக் கூவுவதாகப் புலவர் கூறுகிறார்.
அதிகாலையில் சேவல்கள் சிறகடித்துக் கூவுவது இயற்கை நிகழ்ச்சி இவ்வியற்கை நிகழ்ச்சியைப் புலவர் தனது மதிநுட்பத்தால் சந்தர்ப்பத்திற்கேற்ப தன் குறிப்பை ஏற்றி பாடியுள்ளார்.
6. எடுத்துக்காட்டு உவமை அணி
உவமானத்திற்கும் உவமேயத்திற்கும் இடையே “போல” என்ற பொருள் தரும் உவமை உருபு தொக்கு (மறைந்து) வருவது எடுத்துக்காட்டு உவமையணியாகும்.
உதாரணம் :
“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி, மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊ}றும் அறிவு” – குறள்- 396
| உவமானம் | உவமை உருபு | உவமேயம் |
| தோன்றிய ஆழத்திற்கேற்ப கேணியில் நீர் ஊறும் |
(அது, போல) | மக்களுக்கு தான் கற்ற அளவுக்கு ஏற்ப அறிவு பெருகும் |
7. இல்பொருள் உவமை அணி இயற்கையில் இல்லாத ஒன்றை இருப்பது போலக் கற்பனை செய்து அக்கற்பனைப்பொருளை உவமையாகக் கூறுவது இல்பொருள் உவமை அணியாகும்.
உதாரணம் :
1. “வானத்தாமரை போல”
விண்ணில் மலர் ந்த தாமரைபோல் என்பது இதன்பொருள் விண்ணில் எங்கேணும் தாமரை மலருமா? மலராது அப்படி மலர்ந்தாற்போல் எனக் கூறியதால் இது இல்பொருள் உவமையணி.
2. “பொன்றினவன் எழுந்தாற்போல் புடைபெயர்ந்தாங் கெழுந்திருந்தான்”
கும்பகரணன் துயிலினின்றும் எழுவது இறந்தவன் மீண்டும் உயிர்பெற்று எழுவதைப்போல் இருந்தது. இறந்தவன் எங்கேயேனும் மீண்டும் உயிர்பெற்று எழுவது உண்டா? எழமாட்டான். அவ்வாறு எழுந்தது போல் எனக்கூறியதால் இது இல் பொருள் உவமையணியாகும்.
3. “அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றன் மரம் தளிர்த்தற்று”
வெம்மை நிறைந்த பாலை நிலத்தில் பட்டுப்போன மரம் தளிர்ந்தது உவமை. மனதில் அன்பு இல்லாதவர் உயிர் வாழ்தல் உவமேயம். அற்று – உவமை உருபு பாலைவனத்தில் நீரின்றிவற்றிப்போன மரம் மீண்டும் தளிர்த்தல் என்பது இயலாத (நிகழாத) ஒன்று உள்ளத்தில்
அன்பற்ற உயிருக்கு இது உவமையாக்கப்பட்டிருக்கின்றது. எனவே இது இல்பொருள் உவமையணி ஆகும்.
4. “இருகை யானை அனைய வீரன்”
வீரனுடைய ஆற்றலுக்கு உவமையாக யானையைக் கூறலாம்.
ஆனால் யானைக்குத் துதிக்கை என்னும் ஒரு கை மட்டும் உள்ளது. வீரனுக்கு இரண்டு கைகள் உள்ளன. ஆகையால் இரண்டு கைகளையுடைய வீரனுக்கு உவமையாக இரண்டு துதிக்ககைகளை உடைய யானை என்பது உலகில் இல்லை. இதில் அமைந்துள்ள உவமை உலகில் இல்லாத பொருள் ஆகும்.
இருவகை யானை – இல்பொருள் உவமை
வீரன் – உவமேயம்
அனைய – உவமை உருபு
5. “செந்நெருப் பினைத் தகடு செய்து பார் ஒக்கும் அச் செந்தரைப்பரப்பு…” – கலிங்கத்துப்பரணி
போர் நடந்த களத்தின் தன்மை பற்றிக் கூறவந்த கவிஞர், சிவந்த நெருப்பைத் தகடாகச் செய்தது போன்றது என்கின்றார். நெருப்பைத் தகடு செய்வது உலகில் இல்லாத ஒன்று.
8. ஐயவுவமை அணி
உவமையையும் பொருளையும் ஐயுற்று உரைப்பது ஐயவுவமையாகும். தொல்காப்பியர் இதனைத் தடுமாறுவமை என்கின்றார்.
உதாரணம்
“தா(து) அளவி வண்டு தடுமாறும் தாமரைகொல்
மாதர் வழியுலவு வான்முகங்கொல்”
இதில் தலைவியின் முகத்தைப் பார்த்து அது தாமரையா? அல்லது முகமா எனத் தலைவன் தடுமாறுகின்றானாம், ஐயம் கொள்கின்றானாம். தாமரையாகிய உவமையும் முகமாகிய பொருளும், வண்டாகிய உவமையும் விழியாகிய பொருளும் உறுதியாகத் தெரியாது ஐயமுற்று உரைத்ததால் இது ஐயவுவமையாயிற்று.
9. ஏகதேச உருவக அணி
செய்யுளில் புலவன் ஒரு பொருளை உருவகம் செய்து விட்டு அதற்குத் தொடர்புடைய மற்றப்பொருட்களை அதற்கேற்ப உருவகம் செய்யாமல் விட்டு விடுவான். இவ்வாறு ஒன்றை உருவகம் செய்துவிட்டு மற்றவற்றை விடடுவிடுவதற்கு “ஏகதேச உருவக அணி” என்று பெயர்.
“பிறவி பெருங்கடல் நீந்துவர்:நீந்தார்
இறைவன் டிசேரா தார்”
இக்குறட்பாவில் பிறவி என்பது பெரிய கடலாக உருவகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிறவியைக் கடப்பதற்குத் துணையாகும் இறைவன் திருவடிகள், கடலைக்கடப்பதற்கத் துணையாகும் மரக்கலாமாக உருவகம் செய்யப்பெறவில்லை இது ஏகதே உருவகம் எனப்படும்.
10. வேற்றுமை அணி
ஏதேனும் ஓர் ஒற்றுமையுடைய இரு பொருள்களுக்கிடையே வேற்றுமை கற்பித்துக் கூறல் வேற்றுமை அணியாகும்.
உதாரணம் :
1. தீயினால் சுட்ட புன் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
தீ உடலை சுடும். தீச் சொல் உள்ளத்தை சுடும். சுடுதலால் தீயும் தீச்சொல்லும் ஒற்றுமையுடையன. ஆனால் தீப்புண் ஆறிவிடும். தீய சொல்லால் உண்டான மனத்துன்பம் நீங்காது. தழும்பு போல நிலைத்திருக்கும். ஆகையால் தீயை விட தீச்சொல் கொடுமையானது. இவ்வாறு ஒற்றுமையைக் கூறி வேறுப்படுத்துவது வேற்றுமை அணியாகும்.
2. மோப் பக் குழையும் அனிச்சம் – முகத்திரிந்து நோக்கக் குழையும் விருந்து
அனிச்சம் மென்மலர் – மோந்து பார்க்கும் வெப்பமும் ஆற்றாது வாடிவிடும். விருந்தினர் மென்மையான தன்மை வாய்ந்தவர். வருத்தம் பெறாதவர். இவை அனிச்சத்திற்கும் விருந்தினருக்கும் உள்ள ஒற்றுமை. மோந்தால்தான் அனிச்சம் வாடும். ஆனால் மாறுமுகம் கொண்டு பார்த்தாலே போதும், விருந்தினர் வருத்தமடைவர். இவை அனிச்சத்திற்கும் விருந்தினருக்கும் உள்ள வேற்றுமை எனவே இது வேற்றுமை அணி.
11. பிறிது மொழிதல் அணி (ஒட்டணி)
புலவர் தாம் கூறக்கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல் அதனோடு வேறொன்றைக் கூறி அதிலிருந்து தாம் கூறக்கருதியப் பொருளை பெறவைத்தல் பிறிது மொழிதல் அணி எனப்படும். இதனை ஒட்டணி என்றும் கூறுவர்.
உதாரணம் :
1. “பீலிபெய் சாகாரும் அச்சிறும் அப் ண்டம்
சால மிகுத்துப் பெயின்”
- மென்மையாக இருக்கும் மயிலிறகையும் அளவாக வண்டியில் ஏற்ற வேண்டும் விஞ்சினால் வண்டியின் அச்சு முறியும் – இது கூறப்பட்ட கருத்து
- எச்செயலையும் அளவாகச் செய்ய வேண்டும். அளவுக்கு மீறினால் அழிவு நேரிடும். – இது விளக்க வந்த கருத்து
2. “நுனிக்கொம்பர் ஏறிகார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
- மரத்தின் நுணியை அடைந்தவர் தம் முயற்சியால் இன்னும் ஏறிவிடலாம் என ஏறின் இறுதியில் உயிர் இழப்பர். – இது கூறப்பட்ட கருத்து
- தம் முயற்சியால் குறிப்பிட்ட அளவு சென்றவர் அதனோடு நிற்காது மேலும் செல்ல
முனைவாராயின் இறுதியில் மடிவர். – இது விளக்க வந்த கருத்து
3. இளைதாக முள்மரம் சொல்க: களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து
- முள் மரத்தை அது இளையதாக இருக்கும் போதே களைய வேண்டும். முற்றியபின் அது
களையும் கையைத் துன்புறுத்தும் – இது கூறப்பட்ட கருத்து - பகையை அது வலிமையற்றிருக்கும் போதே அழித்துவிட வேண்டும் – இது விளக்க வந்த கருத்து
12. நிரல் நிறை அணி
புலவர் ஒரு செய்யுளில் முதலில் சில சொற்களை வரிசையாகக் கூறி பின்னர் அச்சொற்களுக்கு ஏற்ற பொருளமைந்த சொற்களை அதே வரிசையாகக் கூறுவது நிரல்நிறை அணி எனப்படும். (நிரல் – வரிசை, நிறை – நிறுத்தம்)
உதாரணம் :
“அன்புப் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
இல்வாழ்க்கையின் பண்பு அன்பு. இல் வாழ்க்கையின் பண்பு என்று கூறவந்த திருவள்ளுவர் அன்பு, அறன் என்னும் சொற்களை முதலடியில் கூறினார். அன்பு, அறம் என்னும் சொற்களோடு முறையாகப் பொருந்தும்படி பண்பு பயன் என்னும் சொற்களை இரண்டாம் அடியில் கூறினார். இவ்வாறு சொற்களை ஒரு வரிசைப்படி கூறி அவற்றுக்கு ஏற்ற சொற்களைப் பின்னர் அதே வரிசைப்படி அமைப்பது நிரல்நிறை எனப்படும்.
13. இரட்டுற மொழிதல் அணி
(இரண்டு + உற + மொழிதல் + இரண்டு பொருள் வருமாறு கூறுதல்)
உதாரணம் :
ஓடும் இருக்கும் உள்வாய் வெளுத்து இருக்கம்
இத்தொடர் தேங்காய்க்கும் நாய்க்கும் பொருந்துவதாக உள்ளது.
ஓடும் இருக்கும்
1. தேங்காயில் ஓடும் இருக்கும்
2. நாய் வேகமாக ஓடும், ஒரே இடத்தில் படுத்திருக்கம்
உள்வாய் வெளுத்திருக்கும்
1. தேங்காய் உள்ளே வெண்மையாக இருக்கும்.
2. நாய் வாயின் உட்பகுதி வெண்மையாக இருக்கும்
புலவர் ஒரு செய்யுளில் ஒரு சொல் அல்லது தொடர் இரண்டு பொருள் தரும்படி கூறுவது “இரட்டுற மொழிதல் அணி” எனப்படும். இதனை சிலேடை என்றும் கூறுவர்.
14. வேற்றுப்பொருள் வைப்பணி
கவிஞர் தான் கூற விரும்பும் ஒரு சிறப்பான பொருளைக் கூறத் தொடங்கி அதனை வலியுறுத்தி முடிக்க உலகம் அறிந்த வேறொரு பொதுவான உண்மையை அதனோடு தொடர்புபடுத்தி கூறுவது வேற்றுப் பொருள் வைப்பணியாகும்.
உதாரணம் :
1. வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள்
தாழ் விளையது வரச்சீரை சாத்தினான்
சூழ்வினை நான்முகத் தொருவன் சூழினும்
ஊழ்வினை ஒருவரால் ஒழிகக்ற் பாலதோ”
இராமன் மரவுரி உடுத்தான் என்ற சிறப்புப் பொருளை எவ்வளவு உயர்ந்தவராயினம் ஊழ்வினை உறுத்து வந்து சேருமாயின் அது யாருக்கு; தடுக்கக்கூடியதன்று என்னும் பொதுப்பொருளோடு தொடர்புப்படுத்திக் கூறியமையின் வேற்றுப் பொருள்
வைப்பணியாகும்
.2. “சிறந்த ஒளிவளர்க்குந் தேரோன் – மறைந்தான்
இறவாது வாழ்கின்றார் யார்?
சிறந்த ஒளியைக் கொடுத்துக் கொண்டிருந்த கதிரவனே மறைந்து விட்டான். இவ்வுலகில் இறவாமல் யார் வாழ்கின்றார் என்பது இதன்பொருள்.
- இறவாது வாழ்கின்றார் யார்? – சிறப்புப்பொருள்
- சிறந்த ஒளி வளர்க்கும் தேரோன் மறைந்தான் – பொதுப்பொருள்
15. வேற்றுமைப்பொருள் வைப்பு அணி
சிறப்புப் பொருளைச் சாதிப்பதற்குப் பொதுபொருளையம் பொதுப் பொருளைச் சாதிப்பதற்கு சிறப் புப் பொருளையும் அமைத்துக் கூறுவது வேற்றுமைப் பொருள் வைப்பு அணியாகும்.
உதாரணம்:
“தொழுதான் சுவையின் உமுதூன் இனிது”
அடுத்தவர் பாதம் போற்றியும் வணங்கியும் உண்பதை விட உழுது (பயிர் செய்து) உண்ணும் உணவே சுவையானது.
16. வஞ்சகப்புகழ்ச்சி அணி
ஒன்றைப் புகழ்வதைப் போல புகழ்ந்து பழிப்பதும் பழிப்பதைப் போலப் பழித்துப் புகழ்வதும் வஞ்சகப்புகழ்ச்சி அணியாகும்.
உதாரணம் :
“கல்லா தவரும் நனிநல்லர் கற்றார் முன்
சொல்லா திருக்கப் பெறின்
திருவள்ளுவர் கற்றார் முன் கல்லாதார் ஒன்றும் சொல்லாதிருந்தால் அவரும் நல்லவரே என்று கூறுகின்றார். இங்ஙனம் கல்லாதவரை நல்லவர் என்று புகழ்ந்து கூறுவதன் மூலம் பழித்துரைக்கின்றார்.
17. சுவை அணி
ஒரு பொருளைப் பற்றி அழுகை, இழிவரல் (வெறுப்பு) மருட்கை (மயக்கம்) அச்சம், பெருமிதம், வெகுளி (கோபம்) உவகை போன்ற சுவை தோன்றச் கூறுவது சுவையணியாகும்.
18. முரண் அணி
சொல்லும் பொருளேனும் முரண்படக் கூறுவது முரண் அணியாகும்.
உதாரணம் :
“திண்தோள் வயவேந்தர் செந்தாமரை முகம் போய் வெண்டாமரையாய் வெளுத்ததுவே…” (நளவெண்பா)
திண்ணிய தோள்களையுடைய கம்பீரமான வேந்தர்களின் செந்தாமரை போன்றிருந்த முகங்கள் வெண்டாமரை போல் வெளுத்து விட்டன என்பது இதன் பொருளாகும். இதில் செந்தாமரைக்கு முரனானது வெண்டாமரை சோபையிழந்து கவலை தோய்ந்த முகத்திற்குறியது இதில் சொல் பொருள் முரண் காணப்படுகிறது.
19. நுட்ப அணி
ஒன்றனை வெளிப்படையாகக் கூறாமல், கேட்பவர் புரிந்து கொள்ளும்படி நுட்பமாகக் கூறுவது, தெரிவிப்பது ‘நுட்ப அணியாகும்’
“பாடல் பயிலும் பணிமொழி தன்பணைத்தோள்
கூடல் அவாவாற் குறிப்புணர்த்தும் – ஆடவற்கு
மென்றீந் தொடையாழியின் மெல்லவே தைவந்தாள்
இன்றீங் குறிஞ்சி யிசை”
தலைவனைத் தழுவ வேண்டும் என்னும் அவாவால், அவன் தெரிந்து கொள்ளும் வண்ணம் யாழிலே, குறிஞ்சிப் பண்ணை தலைவி இசைத்தாள்.
குறிஞ்சி – மலையும் மலைசார்ந்த இடம்
காலம் – நடு இரவு (யாமம்)
அந்தநேரத்தில் தலைவி தலைவனைச் சந்தித்து அவனைத் தழுவ விழைகின்றாள். அவளுடைய ஆசையை யாழ் மூலம் குறிப்பாக அவனுக்கு தெரிவிக்கின்றாள்.
| இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |














