பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் குறள் விளக்கம்

Advertisement

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பொருள் | Pirapokkum Ella Uyirkkum Thirukkural Meaning in Tamil

உலக பொதுமறை நூலாக சிறந்து விளங்குவது திருக்குறள். திருக்குறளில் மொத்தம் 1330 குறட்பாக்களும் 133 அதிகாரங்களும் அடங்கியுள்ளது. திருவள்ளுவர் நமது வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துக்களையம் குறள் மூலம் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். அவர் இயற்றிய ஒவ்வொரு குறளிலுமே அற்புதமான கருத்துக்கள் ஒளிந்திருக்கிறது. திருவள்ளுவரை ஒரு பெயரால் மட்டும் அழைக்காமல் பல சிறப்பு பெயர்களால் அழைத்து வருகிறார்கள்.

1330 குறள்களுக்கும் அர்த்தம் தெரியுமா என்று கேட்டால் நிச்சயம் தெரியாது. நம்முடைய பதிவில் குறள்களுக்கான அர்த்தங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருக்குறள் (Pirapokkum Ella Uyirkkum Thirukkural) பொருளை பார்ப்போம்  வாங்க..

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் திருக்குறள் பொருள்

குறள் 972: | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Meaning in Tamil

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

 

பல அறிஞர்கள் விளக்கம்

மு.வ விளக்க உரை:

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

சாலமன் பாப்பையா உரை:

எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.

கலைஞர் விளக்க உரை:

பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்

புலியூர்க் கேசிகன் உரை:

எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே; தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒரு போதும் ஒத்திருப்பதில்லை

மு. வரதராசன் உரை:

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

பரிமேலழகர் உரை:

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் – எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் – பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான். (வேறுபாடு – நல்லனவும், தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய அளவறிந்த பாகுபாடுகள். வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் ‘பிறப்பு ஒக்கும்’ என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், ‘சிறப்பு ஒவ்வா’ என்றும் கூறினார்.

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:

எல்லா மனிதர்களும் பிறப்பினால் ஒரே மாதிரியானவர்களே. ஆனால் அவரவர்கள் காரியம் செய்யும் திறமை வேறுபடுவதனால் சிறப்புக்கள் ஒரே மாதிரியாக அடைய முடியாது.

குறள் விளக்கம்:

இந்த குறளின் விளக்கமானது பிறப்பால் அனைவரும் சமமே. ஆனால் நம்முடைய வாழ்வில் செய்கின்ற செயல்களினாலே அவற்றை செய்யும் விதத்தாலே அவற்றை செய்யும் நேர்மை, உழைப்பு, தொழில் நேர்த்தி, தரம் ஆகியவற்றால் நமது சிறப்பும், பெருமையும் மாற்றம் அடையும். நமது மதிப்பு நாம் செய்யும் தொழிலில் உள்ள நேர்மையில், உழைப்பில், நேர்த்தியில், செயல் தரத்தில் அடங்கியுள்ளது.

நாம் அடுத்தவர்களை பாகுபாடின்றி சமமாக நடத்த வேண்டும். நம்முடைய மனித பண்புகள் அதில்தான் அடங்கியுள்ளது. ஒருவர் செய்கின்ற தொழில் மற்றும் குலத்தினால் அவர் மாறுபட மாட்டார். அவரின் நேர்மை, தொழிலின் நேர்த்தி அவரை வேறுபடுத்தும்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement