செய்ந்நன்றி அறிதல் திருக்குறள் பொருள்
திருக்குறள் அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் ஆகும். மனிதர்கள் தம் அகவாழ்விலும் சுமூகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் நூல் திருக்குறள் என்று சொல்லலாம். இதில் 133 அதிகாரங்களும். 1330 குறட்பாக்களையும் உடையது. ஓவ்வொரு குறளும் ஒவ்வொரு கருத்தை தனக்குள் கொண்டுள்ளது. தினமும் ஒரு திருக்குறள் மற்றும் அதற்கான அர்த்தத்தை படிக்கும் மாணவர்கள் அறிந்து கொள்வது அவசியமானது. அந்த வகையில் இன்றைய பதிவில் செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தில் உள்ள குறள் மற்றும் அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.
Poraiyudaimai Thirukkural In Tamil
செய்ந்நன்றி அறிதல் விளக்கம்:
உதவுகிறோம் என்ற நினைப்பு இல்லாமல் உதவுவதே சந்தோசம். இவை வானத்தையும், பூமியையும் விட மிகப் பெரியது. பிறர் நமக்கு செய்த துன்பத்தைவிட நன்மை சிறிது செய்திருந்தாலும் அதை எண்ணிப் பார்ப்பதே சிறந்தது. பிறர் செய்த உதவியை மறந்தவர், வாழ்வில் உயர் இடத்திற்கு செல்ல முடியாது.
செய்ந்நன்றி அறிதல் அதிகாரம்:
குறள் 1:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
குறள் விளக்கம்:
மு. வரதராசன் உரை விளக்கம்: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.
மு. கருணாநிதி உரை விளக்கம்: வாராது வந்த மாமணி” என்பதுபோல், “செய்யாமற் செய்த உதவி” என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.
குறள் 2:
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
குறள் விளக்கம்:
மு. வரதராசன் உரை விளக்கம்: உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.
மு. கருணாநிதி உரை விளக்கம்: தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.
குறள் 3:
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
குறள் விளக்கம்:
மு. வரதராசன் உரை விளக்கம்: இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.
மு. கருணாநிதி உரை விளக்கம்: என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.
குறள் 4:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
குறள் விளக்கம்:
மு. வரதராசன் உரை விளக்கம்: ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.
மு. கருணாநிதி உரை விளக்கம்: ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.
குறள் 5:
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
குறள் விளக்கம்:
மு. வரதராசன் உரை விளக்கம்: கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.
மு. கருணாநிதி உரை விளக்கம்: உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.
குறள் 6:
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
குறள் விளக்கம்:
மு. வரதராசன் உரை விளக்கம்: குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.
மு. கருணாநிதி உரை விளக்கம்: மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.
குறள் 7:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
குறள் விளக்கம்:
மு. வரதராசன் உரை விளக்கம்: தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்.
மு. கருணாநிதி உரை விளக்கம்: ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.
குறள் 8:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
குறள் விளக்கம்:
மு. வரதராசன் உரை விளக்கம்: ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்.
மு. கருணாநிதி உரை விளக்கம்: ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.
குறள் 9:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
குறள் விளக்கம்:
மு. வரதராசன் உரை விளக்கம்: முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.
மு. கருணாநிதி உரை விளக்கம்: ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.
குறள் 10:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
குறள் விளக்கம்:
மு. வரதராசன் உரை விளக்கம்: எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.
மு. கருணாநிதி உரை விளக்கம்: எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.
Sei Nandri Arithal Thirukkural Pdf Download
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |














