அம்பேத்கர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை

Ambedkar Katturai in Tamil

அம்பேத்கர் பற்றிய கட்டுரை

`கற்பி, புரட்சி செய், ஒன்றுசேர்’ என்கிற தாரக மந்திரத்தை வார்த்தைகளாக அல்லாமல், வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்த அந்த மாமனிதன் டாக்டர் அம்பேத்கார். சாதிய ஒடுக்குமுறைகள், தீண்டாமை, உரிமை அடக்கு முறைகளை தன் கல்வியால் எதிர்த்து மக்களுக்காக போராடிய மிகச்சிறந்த புரட்சியாளர் தான் அண்ணல் அம்பேத்கர். சாதி ஒடுக்கு முறையை வெறுத்து “சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என்று கூறினார். இத்தகைய மாமனிதனை பற்றி சிறிய கட்டுரையாக இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

  • இயற்பெயர் – பீமாராவ் ராம்ஜி
  • மருவிய பெயர் – அம்பேத்கர்
  • பிறந்ததேதி மற்றும் ஆண்டு – 14.04. 1891
  • பெற்றோர் – ராம்ஜி மாலோஜி சக்பால் மற்றும் பீமாபாய்
  • பிறந்த இடம் – மாவ் [மத்திய பிரதேசம்]
  • இறந்த ஆண்டு – டிசம்பர் 6, 1956

பிறப்பு

‘பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்’ என அழைக்கப்படும் ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ அவர்கள், 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள், இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது) என்ற இடத்தில், ராம்ஜி மாலோஜி சக்பாலுக்கும், பீமாபாயிக்கும் பதினான்காவது குழந்தையாக, ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

அம்பேத்கர் அவர்களது ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:

“மகர்” என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் ராம்ஜி அவர்கள், ‘சாத்தாராவில்’ உள்ள ஒரு பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இளம் வயதில், தனி மண்பானையில் தண்ணிர் குடிப்பது, குதிரை வண்டியில் போகும்போது, தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்றதும் இறக்கிவிடப்பட்டது, பள்ளியில் படிக்கும்போது, ஒதுக்கிவிடப்பட்டது என பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தார். ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர், இவர்மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், தன்னுடைய குடும்ப பெயரான ‘பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர்’ என்ற பெயரை, ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என்று மாற்றிக்கொண்டார்.

1904 ஆம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. அங்கு “எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில்” சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும், கல்வியை விடாமல் தொடர்ந்த அவர், 1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், 1912-ல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைத் தலைவராகவும் பணியாற்றினார்.

அம்பேத்கர் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம்:

பரோடா மன்னர் ‘ஷாயாஜி ராவ்’ உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர் அவர்கள், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். 1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்” என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு” என்ற ஆய்வுக்கு,‘கொலம்பியா பல்கலைக்கழகம்’ அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது. மேலும், 1921 ஆம் ஆண்டு “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்” என்ற ஆய்வுக்கு ‘முது அறிவியல் பட்டமும்’, 1923 ஆம் ஆண்டு “ரூபாயின் பிரச்சனை” என்ற ஆய்வுக்கு ‘டி.எஸ்.சி பட்டமும்’ பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் ‘பாரிஸ்டர் பட்டமும்’ பெற்றார்.

சமூகப்பணிகள்

1923 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்தியாவிற்கு திரும்பிய அம்பேத்கர் அவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், சமூதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க போராட வேண்டும் என முடுவுசெய்தார். ஜூலை 1924-ல், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா” என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூதாய உரிமைக்காக போராடினார். 1930 ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்படும் முன் அவர் கூறியது,“என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காக போராடுவேன் என்றும், அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்றும் கூறினார்.”

இரண்டாவது வட்டமேசை மாநாடு:

இரண்டாவது வட்டமேச மாநாட்டில், பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும், விகிதாச்சார பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்தப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை” முறை தாழ்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த காந்திஜி, உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக, செப்டம்பர் 24, 1931 ஆம் ஆண்டு காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும் இடையே “பூனா ஒப்பந்தம்” ஏற்பட்டு, தாழ்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதிலாக, பொது வாக்கெடுப்பில் தனி தொகுதி என முடிவுசெய்யப்பட்டது.

தீண்டாமை மற்றும் சாதிப்பிரிவினை:

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் அவர்களது நிலைமை மாறவேண்டும் என்று நிறைய போராட்டங்களை செய்தார். தீண்டாமை மற்றும் சாதிப்பிரச்சனை இதை இரண்டையும் முற்றிலுமாக ஒழிக்க தாழ்த்தப்பட்ட மக்களிடையே தனது பேச்சுகள் மூலம் விழிப்புணவினை ஏற்படுத்தினார்.

விடுதலை இந்தியாவின் அரசியல் அமைப்பில் அம்பேத்காரின் பங்கு

ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு, இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவிஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அதன்பேரில், விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்தது. அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், இது ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்தை கொண்டுவருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், 1951 ஆம் ஆண்டு தன் பதவியைத் துறந்தார்.

அம்பேத்கர் பெளத்த சமயம் மீது பற்று:

தம்முடைய சமூகப் போராட்டதிற்கு, தாம் இந்து மதத்தில் இருப்பதே ஒரு பெரிய தடையாக கருதிய அவர், பௌத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடுகொண்டு, 1950 ஆம் ஆண்டுக்கு பிறகு பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை செலுத்தினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் கருத்தரங்கின் கலந்துக்கொண்ட அவர், உலக பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார். 1955 ஆம் ஆண்டு “பாரதீய பௌத்த மகாசபாவை” தோற்றுவித்தார். 1956-யில் “புத்தரும் அவரின் தம்மாவும்” என்ற புத்தகத்தை எழுதினார். பிறகு 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் பௌத்த சமயத்திற்கு முழுவதுமாக தன்னை மாற்றிக்கொண்டார்.

அம்பேத்கரின் இறப்பு:

தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்விற்காக தனது வாழ்நாள் முழுதும் போராடிய அவர்1955 ஆம் ஆண்டு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் நோயின் தாக்கம் தீவிரம் அடைய அவருடைய பார்வை முதலில் பறிபோனது. பின்னர் சில மாதங்கள் படுக்கையிலே இருந்தார். கடைசியாக 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் டெல்லியில் அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே இந்த உலகைவிட்டு மறைந்தார்.

அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு | Ambedkar History in Tamil

 

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tamil  Katturai