Neerindri Amayathu Ulagu Katturai in Tamil
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, `நீரின்றி அமையாது உலகு’ என்று தண்ணீரின் முக்கியத்துவத்தை ஒரே வரியில் விளக்கியுள்ளார் திருவள்ளுவர். தற்போதைய சூழல் தண்ணீரின் முக்கியத்துவத்தை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியில் 79% தண்ணீர்தான் உள்ளது. ஆனால், இதில் 97.50% கடல்நீர்தான். மீதமுள்ள 2.5% நன்னீராகவும், மூன்றில் ஒரு பங்கு, பனிக்கட்டிகளாகவும் உள்ளன. எனவே, மிக குறைந்த அளவிலான தண்ணீரே நமக்கு கிடைக்கிறது. இதனால், பெரும்பாலும் மழையை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெருகி வரும் மக்கள் தொகை, அதி வேகமாய் வளரும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல காரணங்களால் தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும், மழைப்பொழிவு குறைவால் குறைந்த அளவு தண்ணீரே கிடைக்கிறது. நிலத்தடி நீர்மட்டமும் வறண்டு, பல பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. எனவே தான், தண்ணீர் சிக்கனமும், சேமிப்பும் மிக மிக அவசியமானதாகியுள்ளது. நீரே மனித வாழ்வின் அடித்தளம் என்பதால் நீரை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும். சரி இந்த பதிவில் நீரின்றி அமையாது உலகு பற்றிய கட்டுரையை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
மழைநீர் சேகரிப்பு கட்டுரை |
நீரின்றி அமையாது உலகு கட்டுரை
- முன்னுரை
- நீரின் சிறப்பு
- நீரின் பயன்
- நீர் மாசடைதல்
- நீர் பாதுகாப்பு
- முடிவுரை
முன்னுரை:
“நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு” நீரின் பெருமையை இவ்வாறு குறிப்பிடுகின்றார் வள்ளுவர். அதாவது நீர் இல்லாமல் இந்த உலகத்தில் எந்த உயிரினமும் நிலை பெற்று வாழ முடியாது. அந்த நீரை உலகத்திற்கு வழங்குகின்ற மழை இல்லையென்றால் இவ்வுலகில் எந்த ஜீவராசிகளும் வாழ்ந்திட முடியாது.
இவ்வுலகில் பெய்கின்ற மழையானது பெய்யாது எனில் நீர்நிலைகள் வற்றி, பசுமைகள் வரண்டு போய் உலகமே வெறுமையாக மாறிவிடும். இதனால் இறை நம்பிக்கை அற்று போய் மனிதப் பண்புகளும் மறைந்து விடும் என்பது இதன் உட்கருத்தாக கொள்ளப்படுகின்றது. இவ் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நலம் பெற்று வாழ நீர் மிகவும் அவசியமான ஒன்றாகும். இக்கட்டுரையில் நீரின்றி அமையாது உலகு என்பதை விரிவாக பார்க்கலாம்.
நீரின் சிறப்பு:
இந்த பூமி 75% நீரினாலே சூழப்பட்டுள்ளது. அந்த நீரானது ஆறுகள், கடல்கள், குளங்கள் மற்றும் ஏனைய பல வடிவங்களில் பரந்து காணப்படுகின்றது. மனிதனது நாகரீகத்தை உற்று நோக்கி பார்த்தால் ஆதி காலம் தொட்டே மனிதன் தனது வாழ்விடத்தை நீர் நிலைகளை அண்டியே அமைத்து வந்ததை அறிந்து கொள்ளலாம்.
நமது முன்னோர்களும் நீரை தெய்வமாக போற்றி வந்துள்ளனர். மாரிகாலத்தில் கிடைக்கும் மழைநீரை அணைக்கட்டுகள், குளங்கள் அமைத்து அதனை சேமித்து வறட்சி காலத்தில் பயன்படுத்தினார்கள். இதன் மூலம் எமது முன்னோர்கள் நீரிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இதுவே நீரின் சிறப்பு ஆகும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை |
தண்ணீரின் பயன்கள்:
நீரே மனித வாழ்வின் அடித்தளமாகும். நீர் இல்லையேல் உயிரினங்கள் அனைத்துமே அழிந்து விடும். நீரில் அதிகளவான ஆக்சிஜன் இருப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தி உடலை மிகவும் வலுவாக மாற்றுகின்றது. மனிதர்களிற்கு மட்டுமல்ல, இவுலகத்தில் உள்ள செடி, கொடி, மரம் போன்ற இயற்கைக்கு பசுமை சேர்க்கின்ற தாவரங்களிற்கும் ஏனைய உயிரினங்களிற்கும் நீர் இன்றியமையாததாக விளங்குகின்றது.
இதனையே நீரை குடிப்பதற்கு, சமைப்பதற்கு, போன்ற அன்றாட தேவைகளிற்கு பயன்படுத்தப்பட்டு வருவதோடு மின்சக்தி உற்பத்தி, விவசாயம் செய்தல் போன்றனவற்றிற்கும் பயன்பட்டு வருகின்றது. தற்போதய நவீன சூழலில் விவசாயத்தை மேற்கொள்வது அரிதாகி வருகின்றது. இதற்கான பிரதான காரணம் நீர்வளக் கிடைப்பளவு குறைந்து வருவதாகும். தாவரங்களிற்கு உணவு உற்பத்தி செயல்முறைக்கு நீர் மிகவும் அவசியமாகும்.
நீர் மாசடைதல்:
அனைத்து உயிரினங்களிற்கும் மிக முக்கியமாக விளங்குகின்ற நீரானது பல்வேறு காரணிகளால் மாசுபட்டு வீணாகும் நிலமை காணப்பட்டு வருகின்றது. நீர் மாசடைதலிற்கு பிரதான காரணமாக அமைவது, கைத்தொழில் மயமாதல் ஆகும். அதாவது அதிகளவான தொழிற்சாலைகள் முறையற்ற விதத்தில் அமைக்கும் போது அதன் கழிவுகள் நீர்நிலைகளிலேயே கொட்டப்படுகின்றன.
இதனால் நீர் அதிகளவில் மாசடைகின்றது. எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், புயல் போன்றவற்றினால் நீர் மாசடைந்தாலும் குப்பை கூழங்களை நீர்நிலை மேல் கொட்டுதலே அதிகளவான மாசடைதலை ஏற்படுத்துகின்றது. மேலும் குழாய்கள் மூலம் நிலத்தடி நீரை உறுஞ்சுதல் நீர்வளத்தை அரிதாக்குகின்றது.
நீர் பாதுகாப்பு:
நீரின் அளவு குறைந்து வருதல், நீர் மாசடைதல் போன்ற காரணங்களால் நீர்ப்பாதுகாப்பு உலகளாவிய ரீதியில் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 22-ம் திகதி நீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தினால் மாத்திரமே எதிர்கால சந்ததியினரும் பயன்படுத்தும் வகையில் பாதுகாக்க முடியும்.
மாரிகாலத்தில் மழைநீரை தேவையற்று கடலில் சேரவிடாது குளங்கள், அணைக்கட்டுக்களை அமைத்து சேகரித்து அதனை வேளாண்மைக்கு பயன்படுத்த முடியும். ஓவ்வொரு வீடுகளிலும் மழைநீர் சேமிப்புத் தொட்டிகளை அமைப்பது நீரை சேமிப்பதற்கான பிரதான வழியாகும். மழையை உருவாக்குவதற்கு மூல காரணமாக விளங்குபவை காடுகள். ஆகவே காடுகளை அழிக்காமல் பாதுகாப்பதும் மிகவும் அவசியமானது.
முடிவுரை:
உலகளாவிய ரீதியில் அதிகளவான பேசுபொருளாக மாறிவருவது, நீர்வளங்களை பாதுகாத்தல் பற்றியதாகும். ஓவ்வொருவரிற்கும் இன்றி அமையாததாக விளங்குகின்ற நீர் வளத்தை பாதுகாத்தல் நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.
எனவே நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதனை எதிர்கால சந்ததியினருக்கு கையளிப்பதனூடாக இவ் வையகம் சிறப்பாக விளங்க வழிவகுப்போமாக.
இது போன்று கட்டுரை சார்ந்த பதிவுகளை விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tamil Katturai |