நேர்மை பற்றிய கட்டுரை | Nermai Katturai in Tamil

Advertisement

நேர்மையின் சிறப்பு | Honesty Katturai in Tamil

முன்னொரு காலத்தில் நேர்மையை கடைப்பிடித்து பல மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் நூற்றில் பாதி பேரிடம் மட்டுமே நேர்மை குணம் உள்ளது. நேர்மை குணம் அதிகம் உள்ள மனிதர்கள் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றிருப்பார்கள். இவர்களிடம் வசதியும், ஆடம்பர வாழ்க்கை இல்லாவிட்டாலும் மன நிறைவுடன் வாழ்வார்கள். வாங்க மேலும் நேர்மையின் சிறப்பு பற்றிய கட்டுரையை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

பொருளடக்கம்:

முன்னுரை 
நேர்மை எனும் உயரிய அறம் 
முன்னேற்றம் அடைய நேர்மையே சிறந்த வழி 
நேர்மையின் சிறப்பு 
நேர்மை தரும் மன நிறைவு 
நேர்மை இல்லாதவர்களின் வாழ்க்கை 
முடிவுரை 

முன்னுரை:

நேர்மையான வாழ்வே உங்களுக்கு எப்போதும் சிறந்த வாழ்க்கையை அமைத்து தரும். உங்களிடம் பொய் குணமும், சுயநலம் கொண்ட குணமும் இருந்தால் சக மனிதர்களிடம் அன்பினை பெற்றுவிட முடியாது. நேர்மையான வழியில் வாழ்வதற்கு சற்று கடினமாக தான் இருக்கும். மனதில் துணிவுடன் இருந்தால் நேர்மையாக வாழ்ந்து வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். செய்யும் தொழில், வாழ்கின்ற வாழ்க்கை, சந்திக்கின்ற மனிதர்கள் என முடிந்தவரைக்கும் மனசாட்சிக்கு உண்மையாக நேர்மையாக இருப்பது தான் ஒரு மனிதனுடைய மிக சிறந்த வாழ்க்கையாக இருக்கும்.

நேர்மை எனும் உயரிய அறம்:

மனிதர்கள் எல்லோருமே பணக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களிடம் நேர்மை ஒன்று தவறாக இருந்தால் எவ்வளவு செல்வம் இருந்தாலும் ஒன்றுமே இல்லாதது போன்று தான். நேர்மையாய் இருப்பவர்கள் ஏழ்மையாக இருந்தாலும் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும், அவர்களிடம் பேரன்பு நிலைத்து நிற்கும். உயரிய சிந்தனை நல்லெண்ணங்கள் உடையவர்களாக இருப்பார்கள்.

முன்னேற்றம் அடைய நேர்மையே சிறந்த வழி:

ஒருவருக்கு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற மனநிலை இருந்தால் அவர்களிடம் நேர்மை என்ற ஒன்று கட்டாயமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் பொருளின் மீது ஆசைப்படாமல் நேர்மையாக வாழும் போது வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு செல்லலாம். நேர்மை என்ற விளக்கானது தன்னை மட்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில்லை. தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் வழிப்படுத்தும்.

நேர்மையின் சிறப்பு:

ஒருவரிடம் நேர்மை குணம் எங்கு அதிகமாக காணப்படுகிறதோ அங்கு அவர்களிடம் மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருக்கும். நேர்மையான குணம் கொண்டவர்களை காலம் கடந்தும் போற்றலாம். நேர்மையாக நடந்து கொள்ளும் ஒரு மனிதர் சமூகத்தில் என்றென்றும் நம்பிக்கைக்குரியவராக இருப்பார். “நேர்மையானவர்” “நேர்மையான மனிதர்” என்றெல்லாம் அழைக்கப்படுவர்.

நேர்மை தரும் மன நிறைவு:

நேர்மையாகவும், உண்மையாகவும் உழைப்பதனால் கிடைக்கும் சிறிய அளவு ஊதியம் கூட உங்களுக்கு மிகச்சிறந்த மன நிறைவை கொடுக்கும். கோடி ரூபாய் கொடுத்தாலும் நேர்மைக்கு கிடைக்கும் மன நிறைவை யாராலும் ஈடு செய்ய முடியாது. உலகில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக பல மனிதர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். நேர்மைக்கு எடுத்துக்காட்டாக மகாத்மா காந்தி⸴ டாக்டர் அம்பேத்கர்⸴ ஏ.பி.ஜே அப்துல் கலாம்⸴ சுவாமி விவேகானந்தர்⸴ நேரு⸴ காமராஜர் போன்றவர்களை தாராளமாக கூறலாம். இவர்களை போன்று இன்றைய காலத்தில் நேர்மையான மனிதர்களையும் நேர்மை பண்பையும் காண்பது மிகவும் அரிதானது.

நேர்மை இல்லாதவர்களின் வாழ்க்கை:

நேர்மை குணம் இல்லாதவர்கள் மற்றவர்களது உழைப்பை சுரண்டி ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்களாக இருப்பார்கள். இவர்களது வாழ்வு இருட்டினிலே வாழும் வெளவாலின் வாழ்க்கைக்கு ஈடானது. நேர்மை இல்லாதவர்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலும் அவர்களை நிச்சயம் தண்டிக்கும். தன்னை மட்டும் கவனம் செலுத்தி மற்றவர்களுடைய வாழ்க்கையில் விளையாடும் சுயநலவாதிகள் இந்த உலகில் அதிகரித்துவிட்டார்கள். மிகச்சிறந்த தலைவர்களது வியர்வையாலும் குருதியாலும் உருவான சுதந்திர இந்தியா இன்று ஊழல் எனும் சாக்கடையாக மாறியுள்ளது. இனி வரும் காலம் இளைஞர்கள் காலம் அவர்களால் தான் இந்த தேசம் சிறந்த தேசமாக மாற வேண்டும்.

முடிவுரை:

நேர்மை இல்லாத வாழ்க்கை எப்போதோ ஒரு நாள் அழிவை தரும். எது எப்படி இருந்தாலும் தங்களால் முடிந்தவரை நேர்மையாக வாழ கற்றுக்கொள்ளுவோம். நேர்மையான வாழ்க்கையே உங்களுக்கு மகிழ்ச்சியை தேடி தரும். நேர்மையை கடைப்பிடித்து வாழ்பவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். எனவே இவ்வுலகில் வாழும் அனைவரும் நேர்மையை கடைப்பிடித்து வாழ்வோம்..!

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement