மழைநீர் சேகரிப்பு கட்டுரை | Malai Neer Segaripu Katturai
இந்த உலகிற்கு மிகவும் ஆதாரமாக அமைவது நீர் தான். இத்தகைய நீர் நமது பூமிக்கு பல வழிகளில் கிடைத்தாலும், பெரும் பங்கு வகிப்பது மழைநீர் தான். கடுமையான நீர்ப் பற்றாக்குறையை சந்தித்து வரும் உலக மக்களுக்கான பதிவு தான் இந்த பதிவு இயற்கையின் கொடையாக கிடைக்கும் மழை நீரை நாம் அனைவரும் சேமிப்பதன் மூலம் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து விடுபட முடியும். சரி இந்த பதிவில் மழைநீர் சேமிப்பு பற்றி கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம் வாங்க.
மழைநீர் உயிர்நீர் கட்டுரை
குறிப்புச்சட்டம்:
- முன்னுரை
- மழை நீரின் முக்கியத்துவம்
- மழைநீர் சேகரிப்பின் அவசியம்
- மழை நீர் சேகரிப்பு முறைகள்
- மழைநீர் பாதுகாப்பு
- முடிவுரை
முன்னுரை:
“நீரின்றி அமையாது உலகு” என்ற திருவள்ளுவர் வாக்கிற்கமைய இந்த உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமாய் விளங்குவது நீர். தாவரங்கள் தனது உணவை உற்பத்தி செய்வதற்கும். விலங்குகளும், பறவைகளும் தாகம் தணிப்பதற்கும் நீர் இன்றியமையாததாய் விளங்குகின்றது. இத்தகை நீர் பூமிக்கு பலவகைகளில் கிடைத்தாலும் மழை மூலம் கிடைக்கப் பெறுகின்ற நீரே மனிதர்களின் பெரும்பாலான தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது. ஆகவே இத்தகைய மழைநீரை நாம் அனைவருமே சேமித்து சிக்கனமாக நமது தேவைக்கு பயன்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். இக்கட்டுரையில் மழை நீர் சேமிப்பின் அவசியம் மற்றும் மழை நீர் சேமிக்கும் முறைகள் பற்றி பார்க்கலாம்.
மரம் வளர்ப்போம் கட்டுரை |
மழை நீரின் முக்கியத்துவம்:
பொதுவாக நீரின் முக்கியத்துவத்தை பற்றி வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அந்த வகையில் மழைநீரானது நிலம் மற்றும் நீர்நிலைகளிலுள்ள நீர் ஆவியாகி பின் மழையாகி மீண்டும் இப்பூமியை வந்தடைகின்றது. இத்தகைய மழைநீர் நாம் சமைப்பதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தலாம்.
ஆனால் இந்த நீரை நேரடியாக பயன்படுத்தாமல் நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டியே பயன்படுத்த வேண்டும். மனிதர்களிற்கு உணவைத் தருவது விவசாயம். ஆதிகாலம் தொட்டு விவசாயத்திற்கு மழைநீரே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய விவசாய்கள் அணைக்கட்டுக்கள் அமைத்து அந்நீரை மழை கிடைக்காத காலங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய மழைநீர் நமக்கு கிடைக்காவிட்டால் வேளாண்மை நிலங்களெல்லாம் வறண்டு உணவுப்பஞ்சம் தோன்றிவிடும். இந்த உலகை உயிர்ப்பாக வைத்திருப்பதில் பெரும்பங்கு வகிப்பவை காடுகளே. அந்த காடுகள் நிலைத்திருத்தலிற்கு காரணமாய் அமைவது மழைநீர். இவ்வாறு மழைநீரின் இன்றியமையாமையானது நீண்டு கொண்டே செல்கின்றது.
மழைநீர் சேகரிப்பின் அவசியம்:
இப்பூமிப்பரப்பில் காணப்படும் நீரானது மாசடைதலிற்கு உட்படுவதாலும், ஆழ்துளைக்கிணறுகளை அமைத்து நிலத்தடிநீரை உறிஞ்சுவதனாலும் அழிவடைகின்றது. இந்நிலை மாறவேண்டுமாயின் மழைநீரை சேமிப்பது அவசியமாகும். மழைநீரானது வெறுமனே வீணாக கடலுக்கு செல்வதனைத் தடுத்து நிறுத்தி அதனை நமது அன்றாட தேவைகளிற்கு பயன்படுத்தும் போது நிலத்தடி நீர் சேமிக்கப்படுகிறது. அத்துடன் மழைநீரை சேமிக்கும் போது அவற்றை பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ளல், கட்டடம் கட்டுதல் போன்றவற்றிக்கு பயன்படுத்தலாம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை |
மழை நீர் சேகரிப்பு முறைகள்
வானிலிருந்து பொழியும் மழையை சேகரித்து நீண்டகாலத்திற்கு பயன்படுத்துவதற்கு பல முறைகள் இருக்கின்றது. பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் மழைநீரை சேகரிப்பதற்காக பெரிய அளவிலான அணைக்கட்டுக்களையும், குளங்களையும் அமைத்தார்கள்.
அத்துடன் மலைச்சரிவுகளில் விழும் நீரை வயலிற்கு அனுப்பவதற்காக படிக்கட்டு முறையிலான கால்வாய்களையும், உருளை வடிவில் நிலத்தடிநீரை சேமிக்கும் அமைப்புக்களையும் அமைத்தார்கள்.
தற்காலத்தில் நீரை சேகரிப்பதற்கு பல்வேறு நவீனமுறைகள் பின்பற்றபட்டு வருகின்றன. நகரப்புறங்களில் மொட்டை மாடிகளில் மழைநீர் தொட்டிகள் அமைத்தும், கட்டடக்கூரைகளில் இருந்து விழும் மழைநீரை நிலத்தடியில் தொட்டிகள் அமைத்தும் சேகரிக்கும் முறைகள் காணப்படுகின்றன.
கிராமப்புறங்களில் கிணறுகள் மூலமும், தூர்வாரப்பட்ட குளங்கள் மூலமும் மழைநீர் சேகரிக்கப்படுகின்றது. அத்துடன் சில நாடுகள் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆழ்துளைக்கிணறுகளை அமைத்தும் மழைநீரை பெரிய அளவில் சேமிக்கின்றன.
மழைநீர் பாதுகாப்பு:
இந்த உலகில் ஒவ்வொரு வருடமும் பெய்கின்ற மழையில் கிட்டத்தட்ட நாற்பது சதவீதமான மழைநீரானது வீணாக கடலை சென்றடைகின்றது. இந்த மழைநீரை சேமித்து வைத்தாலே உலகிலுள்ள தண்ணீர்ப்பஞ்சம் ஒழிந்துவிடும். மழையினால் கிடைக்கும் மிகுதி நீரானது நிலத்தினால் உறிஞ்சப்படுகின்றது. ஆனால் தற்பொழுதான் நாகரிக வளமாக மாறிவிட்டதே திறந்தவெளிகள் அனைத்தும் சிமெண்ட் தளங்கள் அமைத்து மூடப்பட்டுவிட்டது இதன் காரணமாக நிலத்தினால் மழைநீரை உறிஞ்ச முடிவதில்லை.
இதன் காரணமாக தான் நிலத்தடி நீரின் அளவு குறைந்து வருகின்றது. அதற்கு மாற்றுவழியாக கட்டடத்தைச் சுற்றி உறிஞ்சுகுழிகளை அமைப்பது அவசியம். மழையை இவ்வுலகிற்கு வாரிவழங்குவதில் உயர்பங்கு வகிப்பது காடுகள். ஆகவே காடுகளை அழித்தால் மழைக் கிடைப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகிவிடும். எனவே காடுகளை பாதுகாப்பதும், மரங்களை மேலும் உருவாக்குவதும் நம் அனைவரது அவசியமாகும்.
முடிவுரை:
அனைத்து நாடுகளும் மழை நீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருவதையும், மழைநீர் சேகரிப்பில் ஈடுபடுவோரை ஊக்குவிப்பதனையும் காணலாம். மழைநீர் சேகரிப்பு என்பது ஒரு பணிமட்டும் இல்லை. மாறாக எதிர்கால நீர்வளத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு அரிய முதலீடு ஆகும். கடுமையான நீர்பற்றாக்குறையை இவ்வுலகம் எதிர்நோக்கி வரும் இக்காலகட்டத்தில் இலவச கொடையாகக் கிடைக்கும் மழைநீரை சேமித்து பெருகிவரும் நீர்ப்பற்றாக்குறையை தடுப்போமாக.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |