Why Ayyappa Devotees Take Ghee Coconut to Sabarimala in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவின் வாயிலாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் ஏன் திருமுடியில் நெய் தேங்காய் கொண்டு செல்கிறார்கள்.? என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. நாம் அனைவருமே, சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் தேங்காயில் நெய் ஊற்றி அதனை மூடி இருமுடியை வைத்து செல்வதை பார்த்து இருப்போம். ஆனால், ஏன் நெய் தேங்காய் எடுத்து செல்கிறார்கள் என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
சபரிமலை ஐயப்பனுக்கு நெய்யால் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். ஐயப்ப பக்தர்கள் நெய் தனியே தேங்காய் தனியே எடுத்து செல்ல மாட்டார்கள். தேங்காய்க்குள் நெய் ஊற்றி அந்த நெய் தேங்காயை தான் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்ய கொடுப்பார்கள்.
சபரிமலைக்கு ஏன் நெய் தேங்காய் கொண்டு செல்கிறார்கள் தெரியுமா.?
நெய் தேங்காய் எதற்காக.?
முக்கண் கொண்ட தேங்காய் ஆனது, சிவனை குறிக்கிறது. பசு நெய் கோபாலனாகிய மகாவிஷ்ணுவை நினைவுபடுத்துகிறது. விஷ்ணு, சிவன் இருவருடைய அருள் கதிரொளியின் சக்தியாக அவதரித்தவர் தான் ஐயப்பன். இதனால், சிவன் விஷ்ணு வடிவமான நெய் தேங்காயை ஐயப்பனுக்கு நிவேதனம் செய்கின்றனர்.
ஐயப்பனின் கால்கள் ஏன் கட்டப்பட்டிருக்கிறது என்று தெரியுமா.?
நெய் எதற்காக.?
ஐயப்பனுக்கு நெய் தேங்காய் எடுத்து செல்வது காலம் காலமாய் வழக்கத்தில் இருந்து வருகிறது. இதற்கு ஒரு வரலாற்று காரணமும் உள்ளது.
ஒருமுறை பந்தள மன்னனின் மனைவி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தபோது புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என அரசவை வைத்தியர் கூறினார். அதனால், ஐயப்பன், தாய்க்கு புலிப்பால் கொண்டுவரக் காட்டுக்கு சென்றான்.
அப்போது, ஐயப்பனின் தந்தையான பந்தள மன்னன், காட்டுக்கு செல்லும் மகனுக்கு பசிக்கும் என்பதற்காக பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாக கட்டினார். அதேசமயம், சிவ பக்தனான பந்தள மன்னன், சிவனின் அம்சம்போல் (சிவனை துணைக்கு அழைப்பதுபோல்) ஒரு தேங்காயை மற்றொரு முடியில் கட்டிக் கொடுத்தார்.
இந்த இருமுடிகளையும், ஐயப்பன் தலையில் ஏந்தியவாறு காட்டுக்கு புலிப்பால் கொண்டுவர சென்றார். இருமுடியை தலையில் ஏந்தியது ஐயப்பன் சுவாமியே ஆவார். இவ்வாறு இருமுடியை தலையில் சுமந்து, ஐயப்பனை வழிபடும் முறை நாளடைவில் வழக்கமாக மாறிவிட்டது.
அதுமட்டுமில்லாமல், தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போக இருந்தார். அப்போது, பந்தளமகாராஜா ஐயப்பனிடம், “நீ என்னை விட்டு பிரிந்து சபரிமலைக்கு செல்கிறாய்” நான் உன்னை பார்க்க வேண்டுமானால் எப்படிய்யா காட்டு பகுதிகளை கடந்து வருவது.? எனக்கு வயதாகி விட்டது..! உன்னை காண நாம் எப்படி வருவது என்று கேட்டார்.
உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அதன் வழிகாட்டுதலின்படி நீங்கள் எளிதில் என்னை காண வந்து விடலாம் என்று கூறினார். அதேபோல், ஐயப்பனை காண ஆண்டுக்கு ஒருமுறை பந்தள மன்னன் சபரிமலைக்கு செல்வார். அப்போது, ஐயப்பனுக்கு பிடித்தவற்றை எடுத்து செல்வார். நெய்யில் செய்த பலகாரங்களைக் கொண்டு செல்வார். அதுமட்டுமில்லாமல், நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி எடுத்து சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும் என்பதற்காக நெய் தேங்காய் எடுத்து செல்வார். சபரிமலையை அடைய பல நாட்களாகும். எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏன் பெண்கள் போகக்கூடாது தெரியுமா.?
நெய் தேங்காயின் தத்துவம்:
தேங்காய் என்பது நம் உடம்பு, நெய் என்பது ஆத்மா. தேங்காயில் நெய் நிரப்பி இருமுடியில் வைத்து, நம்முடைய உடல், ஆன்மாவை அவரிடம் அர்ப்பணிக்கும் பொருட்டு நெய் தேங்காயாக மாற்றி இருமுடியில் கட்டி கொண்டு செல்ல வேண்டும். சபரிமலையில் 18 படிகள் ஏறி தர்ச சாஸ்தாவை தரிசனம் செய்த பிறகு, குருசாமியின் கையால் அந்த தேங்காயை உடைத்து அதில் உள்ள நெய் எடுத்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்ய கொடுக்க வேண்டும். அந்த நெய்யால் சுவாமியை அபிஷேகம் செய்யும் போது நம் ஆத்மா பரந்தாமனை நோக்கி செல்கிறது. அதனால் தான் நெய் தேங்காய் எடுத்து செல்கிறோம்.மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் -> | Thinking |