Annabhishekam History in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அன்னாபிஷேகம் தோன்றிய வரலாற்று கதை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். சிவபெருமான் அபிஷேக பிரியர். இதனால், தினமும் சிவபெருமானுக்கு 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்படும். அப்படி சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது அன்னத்தால் செய்யப்படும் அபிஷேகம். இதனை தான் அன்னாபிஷேகம் என்று கூறுவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பெளர்ணமியில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். இதனை நாம் அனைவருவே தரிசிக்க செல்வோம். ஆனால், அன்னாபிஷேகம் என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.? என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
அன்னாபிஷேகம் என்றால் என்ன.?
அன்னாபிஷேகம் என்பது, சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுவதாகும். அதாவது, சமைக்கப்பட்ட அரிசியால், இறைவனுக்கு அபிஷேகம் செய்வதாகும். பொதுவாக, அன்னாபிஷேகம் ஆனது, ஐப்பசி மாத பெளர்ணமி நாளில் செய்யப்படுகிறது. சிவபெருமானுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டாலும் இந்த ஐப்பசி பெளர்ணமி நாளில் செய்யக்கூடிய அன்ன அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
அரிசி என்பது, வாழ்க்கை, செழுமை, செழிப்பு ஆகிவற்றின் சின்னமாக திகழ்கிறது. அதுமட்டுமில்லாமல், சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி ஆகும். சிவபெருமான் அபிஷேக பிரியர். எனவே, ஒருவருடைய வாழ்க்கையில், அரிசியின் முக்கியத்துவத்தையும், தெய்வீக பங்கினை குறிக்கும் வகையிலும், ஆண்டுதோறும் சிவனுக்கு ஐப்பசி பெளர்ணமி நாளில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
அன்னாபிஷேகம் வரலாறு:
- சந்திரன் என்பவர் நவகிரகங்களில் ஒருவர் ஆவார். ஜோதிடத்தில் குறிப்பிடப்படும், 27 நட்சத்திரங்களும் சந்திரன் மேல் காதல் கொண்டு சந்திர தேவனின் மனைவி ஆனார்கள். இந்த 27 நட்சத்திரங்களும் வானில் நட்சத்திரங்களாக வலம் வரும் தட்சனின் மகள்கள் ஆவார்கள்.
- இந்த 27 மனைவிகளில், சந்திரன் மிகவும் அழகான ரோகிணியுடன் மட்டும் காலம் கழித்தார். இதனால் மற்ற மனைவிகள் தங்கள் தந்தையான தட்சனிடம் புகார் செய்தார்கள்.
- இதனால் கோபம் கொண்ட தட்சனன். தனது மகள்களை சமமாக நடத்தாததனால் “உன்னுடைய அழகு நாளொன்றுக்கு ஒன்று என அழிந்து மறைந்து போகட்டும்” என சந்திரனுக்கு சாபமிட்டார். சாபத்தின்படி, சந்திரன் தனது கலை ஒவ்வொன்றாக இழந்து, பொலிவிழந்தார்.
- தனது, பதினான்கு கலைகளை இழந்த சந்திரன், மீதமுள்ள கலைகளை தக்கவைத்து கொள்ள, திங்களூரில் கைலாசநாதரை தன் சாபம் நீங்க வேண்டும் என்று வேண்டினார்.
- சந்திரனின் 16 கலைகளில் மூன்று கலைகள் மட்டும் மீதமிருந்த நிலையில், சிவபெருமான் சந்திரனின் வேண்டுதலை ஏற்று, அவருக்கு அருள் புரிந்தார். அந்த 3ம் பிறையை தன் தலையில் சூடினார்.
- என்னை சரணடைந்த இந்த ஐப்பசி மாத பெளர்ணமி மிக பிரகாசமாக இருக்கும் என அருளினார். இதன் காரணமாக தான் ஒவ்வொரு வருடமும், ஐப்பசி மாத பெளர்ணமியில் சிவ ஆலயங்களில் மிக சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது.
- ஐப்பசி மாத பெளர்ணமிக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. அன்று தான் சந்திரன் தனது சாபம் நீங்கி 16 கலைகளுடன் முழு பொலிவுடன் தோன்றுகிறார். ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தன்று, சந்திரன் பூமிக்கு மிக அருகில் நெருக்கமாக வந்து, அதிக பிரகாசத்துடன் காட்சியளிப்பார்.
- சந்திரனை தன்னுடைய சடை முடியில் சூடிய சிவபெருமானுக்கு, அந்த சந்திரன் முழுமதியாக ஒளிரும் நாளில், சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. நவகிரங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக ஈசனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |