Varalakshmi Vratham History in Tamil | Varalakshmi Vratham Endral Enna | வரலக்ஷ்மி விரதம் பற்றி
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வரலக்ஷ்மி விரதம் என்றால் என்ன.? வரலக்ஷ்மி விரதத்திற்கு பின்னால் இருக்கும் வரலாற்று கதை என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். ஆடி மாதத்தில் வரக்கூடிய முக்கியமான நாட்களில் வரலக்ஷ்மி விரதமும் ஒன்று. இந்த ஆண்டு 2024 வரலக்ஷ்மி விரத நாள் ஆனது, ஆகஸ்ட் 16 ஆம் தேதியும், ஆடி 31 ஆம் தேதியும் வருகிறது. அதாவது, ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது.
நம்மில் அனைவருக்கும், வரலக்ஷ்மி விரதம் அன்று வீட்டில் லட்சுமி தேவியை வழிபடுவார்கள் என்பது தெரியும். ஆனால், வரலக்ஷ்மி விரதம் எதற்கு இருக்கிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் வரலாற்று கதை என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
வரலக்ஷ்மி விரதம் என்றால் என்ன.?
வரலக்ஷ்மி விரதம் என்பது, பதினாறு வகை செல்வத்திற்கும் அதிபதியான இலட்சுமியை வழிபடும் நாள் ஆகும். லட்சுமி தேவியின் அருள் வேண்டி, இந்து மதத்தில் உள்ள கன்னி பெண்கள் மற்றும் சுமங்கலி பெண்கள் விரதம் இருந்து லட்சுமியை வழிபடும் முறை ஆகும். கன்னி பெண்கள், தனக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று எண்ணி, இந்நாளில் விரதம் இருந்து லட்சுமி தேவியை வழிபடுவார்கள். அதேபோல், சுமங்கலி பெண்கள் தங்கள் கணவரின் ஆரோக்கியதிற்காகவும், நலத்திற்காகவும், ஆயுள் வேண்டியும் விரதம் இருந்து வழிபடுவார்கள்.
சகல வளங்களை அள்ளித்தரும் வரலட்சுமி பாடல் வரிகள்
வரலக்ஷ்மி விரதம் கதை | Varalakshmi Vratham Kathai in Tamil:
வரலக்ஷ்மி விரத நாளிற்கு பின்னால் பல வரலாற்று கதைகள் உள்ளது. அதனை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கதை 1 :
- செளராஷ்டிரா மன்னன் பத்ர சர்வா தீவிர விஷ்ணு பக்தர். இவருடைய மனைவி சந்திரிக்கா. இவர்களுக்கு 7 ஆண் பிள்ளைகளும் 1 பெண் குழந்தையும் உள்ளார்கள். பெண் குழந்தையின் பெயர் சியாமா. சந்திரிக்கா மிகவும் நல்ல குணத்துடனும், தெய்வ பக்தியுடனும், தானம் தர்மம் செய்யும் குணத்துடன் இருந்து வந்தாள். இவரின் நல்ல குணம் லட்சுமி தேவிக்கு பிடித்தது. இதனால், சந்திரிக்காவிற்கு ஆசி வழங்க வேண்டும் என்று ஒரு துவாதசி வெள்ளிக்கிழமை அன்று சந்திரிக்காவின் இல்லத்திற்கு சாதாரண சுமங்கலி பெண் போன்று வருகிறாள். அன்றைய தினத்தில் சந்திரிக்கா வயிறு முழுக்க உணவு உண்டுவிட்டு வாய் நிறைய வெற்றிலை பாக்கு போட்டு விட்டு அமர்ந்திருந்தாள்.
- அப்போது, அங்கு சுமங்கலி பெண் உருவத்தில் வந்த லட்சமியை பார்த்து, அம்மா நீங்கள் யார்.? உங்களுக்கு என்ன வேண்டும்.? எதற்காக இங்கு வந்தீர்கள் என்று கேட்டாள். அதற்கு லட்சுமி தேவி, சந்திரிக்கா நீ நல்லவள் தான். ஆனால், மகாலக்ஷ்மி அவதரித்த துவாதசி வெள்ளிக்கிழமை நாளில், மகாலக்ஷ்மியை வழிபடாமல் இப்படி வயிறு முழுவதுமாக சாப்பிட்டு விட்டு வெற்றிலை பாக்கு போட்டு கொண்டிருக்கிறியே என்று கேட்டாள்.
- அதற்கு, சந்திரிக்கா நான் நாட்டின் இளவரசி. நான் சாப்பிடுவதில் உனக்கென்ன வந்தது என்று, கோபமடைந்து லட்சுமி தேவியை கன்னத்தில் அறைந்து, இந்த இடத்தை விட்டு போ என்று கூறினாள்.
- சுமங்கலி உருவத்தில் வந்த லட்சுமி தேவி அழுதுகொண்டே வெளியில் சென்றாள். அதனை கண்ட சந்திரிகா மகள் சியாமா. லட்சுமி தேவியை பார்த்து ஏன் அழுகுறீர்கள் என்று கேட்டாள். அதற்கு லட்சுமி தேவி, உங்க அம்மா செய்த் தவறை எடுத்துரைத்து நல்வழிப்படுத்த வந்தேன். ஆனால், உங்கள் அம்மா என்ன அவமதித்து விட்டாள். அதனால் இனிமேல் நான் இங்கு வரமாட்டேன் என்று கூறினாள்.
- அதனை கேட்ட சியாமா. என் அம்மா செய்த தவறுக்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறி, என் அம்மாவிடம் என்ன சொல்ல வந்தீர்கள்.. அதனை என்னிடம் கூறுங்கள் என்று கேட்டாள். லட்சுமி தேவியும் வரலக்ஷ்மி விரதம் பற்றிய விவரங்களை சியாமாவிடம் எடுத்துரைத்தாள். சியாமா திருமணம் ஆகி சென்றதும் சியாமாவும் வரலக்ஷ்மி விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் முறையாக கடைபிடித்து வந்தாள். இதனால், அவள் குடும்பம் செல்வ செழிப்போடு வளர்ந்து வந்தது.
- ஆனால், லட்சுமி தேவியை அவமதித்த சந்திரிக்கா குடும்பம் மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை வந்தது. இதனால், தன் பெற்றோர்களின் நிலையை அறிந்த சியாமா அவர்களுக்கு ஒரு பெட்டி நிறைய தங்கம் கொடுத்து இதை வைத்து பிழைத்து கொள்ளுங்கள் என்று கூறினாள். சிறிது நேரம் கழித்து சந்திரிக்கா பெட்டியை திறந்து பார்த்தாள். ஆனால், அதில் வெறும் கரித்துண்டு மட்டுமே இருந்தது.
- இவை அனைத்திற்கும், லட்சுமிதேவையை அவமதித்தே காரணம் என்று கூறி, சியாமா தன் அம்மாவிடம் அவர் செய்த தவறினை கூறினாள். தவறினை உணர்ந்த சந்திரிக்கா லட்சுமிதேவியிடம் மன்னிப்பு கேட்டு, வரலக்ஷ்மி விரதம் மேற்கொண்டாள். இதனால், அவர்களின் ஏழ்மைநிலை நீங்கி நல்வாழ்வு அமைந்தது. லட்சுமிதேவியின் அருளை பெற்ற சந்திரிக்கா மற்றும் அவளின் மகள் சியாமா இருவரும் வரலக்ஷ்மி விரதத்தின் முக்கியத்துவம் பற்றி பலருக்கும் எடுத்துரைத்தார்கள்.
கதை 2 :
- மகத நாட்டில் குஞ்சினாபுரம் என்ற ஊரில் சாருமதி என்ற பெண் ஏழை குடும்பத்தில் வாழ்ந்து வந்தாள். ஏழை குடும்பத்தில் வாழ்ந்து வந்தாலும், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்களை போலல்லலாமல் கடவுளாகவே கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளின் நல்ல குணம், பணிவிடை லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தது. அவளின் அன்பான தூய்மையான மனதை கண்டு லட்சமிதேவி மகிழ்ச்சி அடைந்தாள்.
- ஒரு நாள் லட்சமிதேவி சாருமதியின் கனவில் தோன்றினாள். கனவில் வந்து, சாருமதியிடம் என்னைத் துதித்து வரலட்சுமி விரதம் இருந்தால்,அவர்களின் வீட்டில் நான் எப்போதும் இருப்பேன் என்றும், என்றுன் அவர்களுக்கு நன்மையே அளிப்பேன் என்றும் கூறினாள். அதுமட்டுமில்லாமல், வரலக்ஷ்மி விரதம் எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதையும் கூறினாள். இந்த விரத முறை பற்றி அனைவரிடமும் எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறினாள்.
- கனவில், லட்சமிதேவி கூறியதுபோல் சாருமதியும் அனைத்தையும் செய்து முடித்தாள். சாருமதி வரலக்ஷ்மி விரதம் இருந்து பல நன்மைகளை பெற்றாள். இதனை பார்த்த மற்ற பெண்களும் வரலக்ஷ்மி விரதம் இருந்து லட்சுமி தேவியை வழிபட தொடங்கினார்கள். இதன் காரணமாக அந்த நாடே சுபீட்சம் அடைந்தது என்று புராண கதைகள் கூறுகின்றன.
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |