பிரதோஷம் வகைகள் | Pradosham Types in Tamil

Advertisement

பிரதோஷ வகைகளும் அதன் பலன்களும் | Pradosham Types and Benefits in Tamil

பிரதோஷ விரதம் என்பது சிவபெருமானுக்கு உரிய விரத முறையாகும். இந்த விரதம் எடுப்பதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. அதிலும் பிரதோஷ விரதத்தில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பிரோதோஷங்கள் வருகின்றன. இப்போது இருக்கும் காலகட்டத்தில் பிரதோஷம் இவற்றை பற்றியெல்லாம் தெரிவதில்லை. ஒவ்வொரு பிரதோஷங்களை நாம் கடைப்பிடிப்பதில் இருந்து நமக்கு பல நன்மைகள் வாழ்வில் கிடைக்கின்றன.  ஒவ்வொரு வகையான பிரதோஷ விரதத்தில் சிறப்பான மகிமைகள் உள்ளன. பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடு செய்து வந்தால் கோடி புண்ணியம் கிடைக்குமாம். வாங்க பிரதோஷ வகைகளையும், அதன் பலன்களையும் படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

தினசரி பிரதோஷம்:

பகலும், இரவும் சந்திக்கின்ற காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனை வழிபாடு செய்து வந்தால் உத்தமம் கிடைக்கும். தொடர்ந்து ஐந்து வருடம் வரை முறையாக யார் நித்யப்ரதோஷத்தை செய்து வருகிறார்களோ அவர்களுக்கு முக்தி கண்டிப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

பட்ச பிரதோஷம்:

சுக்லபட்சம் என்ற வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் என்று கூறுகிறார்கள். இந்த திதியில் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்து வந்தால் வேண்டிய பலன் கிடைக்கும்.

மாச பிரதோஷம்:

கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையில் பவுர்ணமிக்கு அடுத்து வரும் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாத பிரதோஷமாகும். இந்த திதியில் சிவனுக்கு மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

நட்சத்திர பிரதோஷம்:

பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்வது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

திவ்ய பிரதோஷம்:

பிரதோஷம் அன்று துவதாசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தால் அது திவ்ய பிரதோஷம் என்று கூறப்படுகிறது. இன்றைய நன்னாளில் மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் பூர்வஜென்ம வினைகள் அனைத்தும் நீங்கும்.

தீப பிரதோஷம்:

பிரதோஷ நாளன்று திரயோதசி திதியில் மற்றவர்களுக்கு தீப தானங்களை செய்து வந்து, சிவன் ஆலயங்களை தீபத்தினால் அலங்காரம் செய்து வர சொந்தமாக வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு விரைவில் கைக்கூடி வரும்.

சப்தரிஷி பிரதோஷம்:

வானில் வ வடிவத்தில் தோன்றுகிற நட்சத்திர கூட்டமே சப்தரிஷி மண்டலமாகும். இந்த நட்சத்திரமானது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதத்தில் தெள்ள தெளிவாக தெரியும். சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு ஈசன் கஷ்டங்களை நீக்கி அருள் புரிவான்.

மகா பிரதோஷம்:

கார்த்திகை மாதம் சனிக்கிழமை அன்று ஈசன் விஷம் உண்ட நாள் திரயோதசி திதியாகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷம் அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.

உத்தம மகா பிரதோஷம்:

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையில் தான். அந்த கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானது. சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில் சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இந்த தினம் மிக சிறப்பும், கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

ஏகாட்சர பிரதோஷம்:

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

அர்த்தநாரி பிரதோஷம்:

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

திரிகரண பிரதோஷம்:

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது

பிரம்ம பிரதோஷம்:

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

அட்சர பிரதோஷம்:

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

கந்த பிரதோஷம்:

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

சட்ஜ பிரபா பிரதோஷம்:

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

அஷ்ட திக் பிரதோஷம்:

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

நவகிரக பிரதோஷம்:

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

பன்னிரண்டு ராசிக்காரர்களும் இந்த பொருட்களை சிவபெருமானின் அபிஷேகத்திற்கு வாங்கி தருவதால் உங்களின் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் நடக்கும்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement