வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

திருக்குறள் மூன்றாம் அதிகாரம் | Thirukkural Adhikaram 3 in Tamil

Updated On: March 27, 2025 3:52 PM
Follow Us:
Thirukkural Adhikaram 3 in Tamil
---Advertisement---
Advertisement

 Thirukkural Athikaram 3

திருக்குறளில் தான் பிறக்கும் குழந்தைகள் முதல் இறக்கும் மனிதர்கள் வரை அனைவருக்கும் தேவையான கருத்துக்கள் எல்லாவற்றையும் கொண்டுள்ளது. தெய்வப்புலவர் என்று அழைக்கப்படும் வள்ளுவர் தனது மூன்றாம் அதிகாரமான நீத்தார் பெருமை எனும் அதிகாரத்தில் ஐம்புலன்களையும் அடக்கி வாழ்பவரின் பெருமைகள் மற்றும் சிறப்புகளை பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். இந்த பதிவில் திருவள்ளுவர் நீத்தார் பெருமை அதிகாரத்தின் மூலம் உலகிற்கு சொல்ல வந்த கருத்தை குறள் மற்றும் பொருளுடன் தெரிந்து கொள்வோம் வாங்க.

திருக்குறள் அதிகாரம் 3 PDF 

குறள்: 21

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

விளக்கம்:

  • ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் ஒழுக்கத்தை கடைபிடித்து, ஆசையை துறந்து வாழவேண்டும். அப்படி வாழ்பவர்களின் சிறப்பை எடுத்து கூறுவது தான் நூலிற்கு பெருமையாக இருக்கும்.

மு. வரதராசன் உரை விளக்கம்: ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.

மு. கருணாநிதி உரை விளக்கம்: ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்.

குறள்: 22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

விளக்கம்:

  • உலகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை எப்படி அளவிட முடியாதோ, அது போல தான் உண்மையாகவே துறவியாக இருந்தவர்களின் பெருமைகளை அளவிட முடியாது.

மு. வரதராசன் உரை விளக்கம்: பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.

குறள்: 23

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு

விளக்கம்:

  • துன்பத்தையும், இன்பத்தையும் ஆராய்ந்து, மெய் உணர்ந்து அறத்தை செய்பவரின் பெருமையே இந்த உலகில் உயர்ந்து விளங்குகிறது.

மு. வரதராசன் உரை விளக்கம்: பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது,

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.

மு. கருணாநிதி உரை விளக்கம்: நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.

குறள்: 24

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

விளக்கம்:

  • மெய், வாய்,கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களை அடக்கி வாழ்பவனின் வாழ்க்கையே துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதை.

மு. வரதராசன் உரை விளக்கம்: அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.

குறள்: 25

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

விளக்கம்:

  • ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்பவர் கடவுளுக்கு தலைவனாக இருக்கும் இந்திரனுக்கு நிகராக கருதப்படுவார்.

மு. வரதராசன் உரை விளக்கம்: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

குறள்: 26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

விளக்கம்:

  • பெருமை தரும் செயல்களை செய்பவர்கள் தான் பெரியோர்கள்; பெருமைக்குரிய செயல்களை செய்யாதவர்கள் சிறியோர்களாக இருப்பார்கள்.

மு. வரதராசன் உரை விளக்கம்: செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.

மு. கருணாநிதி உரை விளக்கம்: பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.

குறள்: 27

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

விளக்கம்:

  • சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐம்புலன்களை அடக்கியாளும் திறன் கொண்டவரையே இந்த உலகம் போற்றும்.

மு. வரதராசன் உரை விளக்கம்: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.

குறள்: 28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

விளக்கம்:

  • நிறைவான மொழிகளை கூறும் முன்னோர்களின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களின் நூல்களே அடையாளம் காட்டிவிடும்.

மு. வரதராசன் உரை விளக்கம்: பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

குறள்: 29

குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது

விளக்கம்:

  • குணத்தால் உயர்ந்த நிலையில் உள்ளவர்களால், தங்களுடைய கோபத்தை சிறிது நேரம் கூட வைத்து கொள்ள முடியாது.

மு. வரதராசன் உரை விளக்கம்: நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

குறள்: 30

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

விளக்கம்:

  • அனைத்து உயிர்களிடமும் அன்புகொண்டு பழகும் அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் என்று அழைக்கப்படுகிறார்.

மு. வரதராசன் உரை விளக்கம்: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.

திருக்குறள் அதிகாரம் 2 வான் சிறப்பு

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement

Dharani

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now