பெயர்ச்சொல் வகைகள் யாவை? | Peyar Sol Types in Tamil
இலக்கணத்தை எளிமையான வகையில் புரிந்துகொண்டால் ஈசியாக மதிப்பெண் பெறலாம். நாம் இன்றைய பதிவில் பெயர்ச்சொல் என்றால் என்ன என்பதையும், பெயர்ச்சொல் வகைகளையும் பற்றி எடுத்துக்காட்டுடன் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.. பெயர்ச்சொல்லை மொத்தம் ஆறு வகைகளாக பிரித்து வைத்திருக்கிறார்கள். சரி வாங்க இந்த பதிவில் பெயர்ச்சொல் பற்றியும் அவற்றின் வகைகளையும் பற்றி படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
சொல் வகைகள் |
பெயர்ச்சொல் வகைகள்:
பெயர்ச்சொல்லை ஆறு வகைகளாய் பிரிக்கலாம்: அவை
- பொருட்பெயர்
- இடப்பெயர்
- காலப்பெயர்
- சினைப்பெயர்
- பண்புப்பெயர்
- தொழிற்பெயர்
பொருட்பெயர் என்றால் என்ன:
உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் பெயரை குறிப்பது பொருட்பெயர் எனப்படும்.
எடுத்துக்காட்டு: அமுதன், வள்ளி, பொன்.
மேல் கூறிய எடுத்துக்காட்டுகளில் உயிர்தினை பொருள்களும் இடம் பெற்றுள்ளது, அஃறிணைப் பொருள்களும் இடம் பெற்றுள்ளது.
இடப்பெயர் என்றால் என்ன:
ஏதேனும் ஒரு இடத்தை குறிப்பது இடப்பெயர் ஆகும்.
எடுத்துக்காட்டு: மேடு, பள்ளம், சென்னை, திருச்சி
மேல் உள்ள எடுத்துக்காட்டுகளில் ஊர்களுடைய பெயர்களும், ஊரில் உள்ள நிலப்பிரிவின் பெயர்களையும் குறிப்பது இடப்பெயர் ஆகும்.
காலப்பெயர் என்றால் என்ன:
காலத்தினை குறிப்பது காலப்பெயர் ஆகும்.
எடுத்துக்காட்டு: திங்கள், காலை, மாலை, தை மாதம்
மேல் கூறிய எடுத்துக்காட்டுகளில் பொழுதுகளின் பெயர்களையும், நாட்களின் பெயர்களையும், ஆண்டுகளின் பெயர்களையும் குறிப்பது காலப்பெயர் ஆகும்.
- பொழுது – காலை
- நாள் – செவ்வாய்க்கிழமை
- திங்கள் – ஆனித்திங்கள்
- ஆண்டு – திருவள்ளுவர் ஆண்டு
இலக்கணம் என்றால் என்ன? |
சினைப்பெயர் என்றால் என்ன:
சினைப்பெயர் என்பது ஒரு பொருளுடைய உறுப்புகளை குறிப்பது சினைப்பெயராகும். சினைப்பெயரானது உயர்திணை பொருள்களின் உறுப்புகளையும், அஃறிணைப் பொருள்களின் உறுப்புகளையும் இது குறிக்கிறது.
சினைப்பெயர் எடுத்துக்காட்டு: கை, கண், கிளை, இலை.
பண்புப்பெயர் என்றால் என்ன:
பண்புப்பெயர் என்பது ஒருவருடைய பண்புகளையும், ஒரு பொருளின் பண்பை உணர்த்தும் பெயர் பண்புப்பெயர் ஆகும்.
பண்புப்பெயர் எடுத்துக்காட்டு: நிறம், சுவை, வடிவம், அளவு ஆகியவற்றின் அடிப்படையில் பண்புப்பெயரானது வரும்.
தொழிற்பெயர் என்றால் என்ன:
ஏதேனும் ஒரு தொழிலை உணர்த்தும் பெயர் தொழிற்பெயர் எனப்படும். தொழிற்பெயரானது அல், தல் முதலிய விகுதிகளை பெற்று வரும்.
எடுத்துக்காட்டு:
- ஆடல், நாடல் – அல் விகுதி
- ஆடுதல், நாடுதல் – தல் விகுதி
மேல் கூறிய எடுத்துக்காட்டுகளில் முதலில் உள்ள ஆடல், நாடல் ஆகியவை அல் என்னும் விகுதியைப் பெற்றுள்ளன; ஆடுதல், நாடுதல் ஆகியவை தல் என்னும் விகுதியைப் பெற்றுள்ளன.
இந்த விகுதிகள் இல்லாமலும் தொழிற்பெயர் வருவதுண்டு. அவை 2 வகைப்படும்:
- முதனிலை தொழிற்பெயர்
- முதனிலை திரிந்த தொழிற்பெயர்
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? |
முதனிலை தொழிற்பெயர்:
தொழிற்பெயர் தனக்குரிய விகுதியை பெறாமல் பகுதி மட்டும் வந்து தொழிலை உணர்த்துவது முதனிலை தொழிற்பெயர் எனப்படும்.
முதனிலை தொழிற்பெயர் எடுத்துக்காட்டு:
- சோறு கொதி வந்தது
- மின்னி இடி இடித்தது
இவை கொதித்தல், இடித்தல் என்று வராமல் கொதி, இடி என்று பகுதி மட்டும் வந்துள்ளன. அதனால் இவை முதனிலை தொழிற்பெயர் ஆகிட்டு.
முதனிலை திரிந்த தொழிற்பெயர்:
தொழிற்பெயரின் விகுதியைப் பெறாத முதனிலை, திரிந்து (மாறுபட்டு) வருவது முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.
முதனிலை திரிந்த தொழிற்பெயர் எடுத்துக்காட்டு:
- கெடுவான் கேடு நினைப்பான்
- காந்தியடிகள் துப்பாக்கி சூடுபட்டு இறந்தார்
இந்த எடுத்துக்காட்டுகளில் கெடு என்னும் முதனிலை கேடு என்றும் சுடு என்னும் முதனிலை சூடு என்றும் மாறி வந்துள்ளன. எனவே இவை முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |