10 Easy Thirukkural in Tamil
10 Easy Thirukkural: திருவள்ளுவரால் இயற்றப்பட்ட உலக புகழ் பெற்ற தமிழ் இலக்கியம் திருக்குறள் ஆகும். திருக்குறள் 1330 குறட்பாக்களையும் 133 அதிகாரங்களையும் கொண்டுள்ளது. நாங்கள் இந்த பதிவில் பள்ளி மாணவர்களுக்கு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் எளிமையான பத்து திருக்குறள் மற்றும் அதனுடைய விளக்கத்துடன் இந்த பதிவில் கொடுத்துள்ளோம். திருக்குறள் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எளிமையான பத்து திருக்குறளை படித்தறியலாம் வாங்க. திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பால்களை உடையது. அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன. வாழ்க்கையில் நல்வழிக்கு செல்ல வேண்டும் என்றால் தினமும் ஒரு திருக்குறளை படியுங்கள்.
10 Easy Thirukkural in Tamil – திருக்குறள் தமிழ்:
- நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
விளக்கம்: இந்த உலகில் வாழும் எந்த மனிதராலும் நீர் இல்லாமல் வாழ முடியாது, அப்படிப்பட்ட நீர் வானம் இல்லாமல் கிடைக்காது.
மு .வரதராசன் உரை விளக்கம்: எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.
மு. கருணாநிதி உரை விளக்கம்: உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
2. இனிய உளவாக இன்னாத கூறல்
கனியருப்பக் காய்கவர்ந் தற்று.
விளக்கம்: இவ்வுலகில் இனிமையான சொற்கள் பல இருக்கும் போது, கடுமையான சொற்களை பயன்படுத்துவது எப்படி இருக்குமானால், மரத்தில் பழங்கள் அதிகமாக இருந்தும் காய்களை சாப்பிடுவதற்கு சமமாக கருதப்படும்.
மு .வரதராசன் உரை விளக்கம்: இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.
மு. கருணாநிதி உரை விளக்கம்: இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
3. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
விளக்கம்: இனிய சொற்கள் மூலம் இனிமையை காணலாம் ஆனால் அதற்கு பதிலாக கடுஞ்சொற்களை கூறுவதால் என்ன பயன் கிடைக்க போகிறது.
மு .வரதராசன் உரை விளக்கம்: இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?
மு. கருணாநிதி உரை விளக்கம்: இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?
திருக்குறள் தமிழ் – 10 Easy Thirukkural in Tamil:
4. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
விளக்கம்: பிறருக்கு துன்பத்தை தராமல் இருக்க கூடிய ஒரு சிறிய இனிமையான சொற்களும் அவனுக்கு இப்பிறவியிலும், மறுபிறவியிலும் இன்பத்தை தரும்.
மு .வரதராசன் உரை விளக்கம்: பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.
மு. கருணாநிதி உரை விளக்கம்: சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.
5. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
விளக்கம்: பிறருக்கு நல்லதை மட்டும் செய்து, தீய செயல்களை எப்போதும் செய்யாதவர்களுக்கு அந்த நற்பயனே அவர்களுக்கு நன்மை பயக்கும்.
மு .வரதராசன் உரை விளக்கம்: பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.
மு. கருணாநிதி உரை விளக்கம்: நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.
| கடவுள் வாழ்த்து திருக்குறள் |
6. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
விளக்கம்: உள்ளத்தில் எவ்வித வஞ்சமும் இல்லாமல் மெய்ப்பொருள்களை மட்டும் பேசுபவர்களின் சொற்கள் இனிய சொற்களாக இருக்கும்.
மு .வரதராசன் உரை விளக்கம்: அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.
மு. கருணாநிதி உரை விளக்கம்: ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.
7. அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
விளக்கம்: முகம் மலர்ந்து சிரித்த முகத்துடன் இனிய சொற்களை கூறுபவர்கள், மனம் மகிழ்ந்து தன்னிடம் இருக்கும் பொருளை கொடுப்பவர்களை விட சிறந்தவர்கள் ஆவார்கள்.
மு .வரதராசன் உரை விளக்கம்: முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது.
மு. கருணாநிதி உரை விளக்கம்: முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.
8. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
விளக்கம்: எல்லோரிடமும் மகிழ்ச்சியுடன் இனிய சொற்களை பேசுபவர்களுக்கு, துன்பத்தை அதிகப்படுத்தும் வறுமை என்பது அவரை நெருங்காது.
மு .வரதராசன் உரை விளக்கம்: யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.
மு. கருணாநிதி உரை விளக்கம்: இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை’ எனும் துன்பமில்லை.
9. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
விளக்கம்: யார் ஒருவர் மிகவும் பணிவாகவும், இனிய சொற்களை பேசுகிறார்களோ அவர்களிடம் அணிகலன் இல்லையென்றாலும் அவருடைய நற்பண்பு அவருக்கு அணிகலன் போன்று இருக்கும். மற்றவர்களிடம் அணிகலன்கள் இருந்தாலும் அவர்களிடம் நற்பண்பும், இனிமையான சொற்களும் இல்லையெனில் அது அணிகலன்களாக கருதப்படாது.
மு .வரதராசன் உரை விளக்கம்: வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா.
மு. கருணாநிதி உரை விளக்கம்: அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.
10. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
விளக்கம்: நல்ல எண்ணங்களையும், நற்பண்புகளையும், இனிய சொற்களை பேசுபவர்களிடம் இருக்கும் பாவங்கள் கூட கரைந்து நன்மைகள் பெருகுமாம்.
மு .வரதராசன் உரை விளக்கம்: பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
சாலமன் பாப்பையா உரை விளக்கம்: பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.
மு. கருணாநிதி உரை விளக்கம்: தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.
| தொடர்புடைய பதிவு: |
| திருக்குறள் பற்றிய சிறப்பு கட்டுரை |
| திருக்குறள் சிறப்புகள் |
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |














