திருமணத்தின் போது அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன் தெரியுமா?

Advertisement

தமிழர் திருமண சடங்குகள்..! Tamilar Thirumana Sadangukal..!

Tamilar Thirumana Sadangukal:- இந்துக்களின் திருமணம் பல சடங்குகளைக் கொண்டது. ஒவ்வொரு சடங்குக்கும் ஓர் அர்த்தம் உள்ளது. அந்த வகையில் சிறப்பு மிக்க கணவன் – மனைவி என்னும் பந்தத்தை ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் ஏற்படுத்தும் திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு ஏன்?  என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அம்மி மிதித்தல்:-

அம்மி மிதித்தல் என்கிற நிகழ்வினை ‘அச்மாரோஹணம்’ என்று கூறுவார்கள். இந்து மதத்தில் திருமணத்தின் போது செய்யப்பட வேண்டிய முக்கியமான சடங்கு இது.

மணமகன் மணமகளின் வலக்கால் கட்டைவிரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறம் அம்மி மீது ஏற்றி வைக்கிறான். “இந்தக் கல்லின் மீது ஏறி நிற்பாயாக.

இந்தக் கல்லைப்போல நீ மனம்கலங்காமல் உறுதியாக இருக்க வேண்டும். இல்லறவாழ்வில் உனக்கு ஏற்படும் இடர்களைப் பொறுத்துச் சகித்துக் கொள்ள வேண்டும். எது வந்தாலும் அசையாமல் ஏற்றுக்கொள்” என்று கூறி, மனோதத்துவ அடிப்படையில் அவளுக்கு மனோபலம் அளிக்கிறான்.

எந்த உலோகத்தையும்விடக் கல் உறுதியானது. வளைக்கவோ, உருக்கவோ முடியாதது. அதனால்தான் இந்த பாவனைக்கு மிக உறுதியான கல்லான அம்மியை வைத்து உபயோகிக்கிறார்கள்.

அருந்ததி நட்சத்திர தரிசனம்:-

அதன் பிறகு மணமக்கள் அருந்ததி தரிசனம் செய்கிறார்கள். இதன் பொருள் என்ன? சப்தரிஷிகளின் ஒருவரான வசிஷ்டரின் மனைவி அருந்ததி. வானில் உள்ள நட்சத்திர மண்டலங்களில் சப்த ரிஷி மண்டலம் ஒன்று. வசிஷ்டர் முதலான சப்தரிஷிகளே நட்சத்திரங்களாகத் திகழ்கின்றனர். இந்த நட்சத்திரத் தொகுப்பில் வசிஷ்டர் நட்சத்திரத்துடன் இணைந்தாற்போல் இருக்கும் நட்சத்திரமே அருந்ததி.

வாழ்க்கையில் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் பிரியாமல், இணைந்தே இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதே அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி. மணப் பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள்.

அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்தப்படுத்திக்கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரியாகத் திகழ்கின்றாள் என்பதுதான் அதன் அர்த்தமாம்.

கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்..?

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement