Vallarai Keerai Thuvaiyal Recipe in Tamil..!
வணக்கம் அன்பான நேயர்களே… இன்று நாம் இந்த பதிவில் வல்லாரை கீரை துவையல் எப்படி செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். வல்லாரை கீரையில் அதிகப்படியான சத்துக்கள் காணப்படுகின்றன. வல்லாரை கீரை முழங்கால் வலி மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது. இதில் முழங்கால் பிரச்சனையை போக்க கூடிய அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருக்கின்றன.
இது அல்சர் மற்றும் வாயு பிரச்சனை போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இது முடி நன்றாக வளர உதவுகிறது. இந்த வல்லாரை கீரை முடி உதிர்வை தடுத்து முடி நன்றாக வளர உதவுகிறது. இவ்வளவு நன்மைகள் நிறைந்த இந்த வல்லாரை கீரையை துவையல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும். வாங்க நண்பர்களே வல்லாரை கீரை துவையல் எப்படி செய்வது என்று பாப்போம்.
இதையும் செய்து பாருங்கள்–> பூண்டு சட்னி செய்வது எப்படி..?
வல்லாரை கீரை துவையல் எப்படி செய்வது..?
தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- மிளகு – 1 டீஸ்பூன்
- தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
- வெல்லம் – 1 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 10
- பூண்டு – 5 பற்கள்
- காய்ந்த மிளகாய் – 2
- வல்லாரைக் கீரை – 2 கப்
- புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
வல்லாரை கீரை துவையல் செய்முறை:
செய்முறை -1
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ள வேண்டும். அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடான பிறகு அதில் தேவையான அளவு கடலைப் பருப்பு, மிளகு, வரமிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
செய்முறை -2
பின்னர் அதில் நாம் எடுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் அதை ஒரு தட்டில் வைத்து ஆற வைக்க வேண்டும்.
செய்முறை -3
பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து அதில் வல்லாரை கீரையை போட்டு நன்றாக வதக்க வேண்டும். கீரை நன்றாக வதங்கிய பின் நாம் துருவி வைத்துள்ள தேங்காயை இதில் போட்டு வதக்க வேண்டும்.
செய்முறை -4
பிறகு நாம் வதக்கி வைத்துள்ள பொருட்களை எல்லாம் ஒரு மிக்சியில் போட்டு அதனுடன் வெல்லம், புளிச்சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
அவ்வளவு தான்… வல்லாரை கீரை துவையல் ரெடி..! நீங்களும் இதுபோல வல்லாரை கீரை துவையல் செய்து சாப்பிட்டு பாருங்கள்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |