உரிச்சொல் என்றால் என்ன? அதன் வகைகள்..!

Advertisement

உரிச்சொல் விளக்கம் | Urichol Explain in Tamil

நண்பர்களுக்கு வணக்கம் இந்த பதிவில் உரிச்சொல் என்றால் என்ன? மற்றும் அதனுடைய வகைகளை பற்றியும் தெரிந்துக்கொள்ளலாம். இலக்கணம் எனும் பாடத்தில் மதிப்பெண்களை எளிமையாக பெறலாம். இலக்கணத்தை புரிந்து கொள்ளும் வகையில் புரிந்துகொண்டால் பல வருடம் ஆன பிறகும் கற்ற இலக்கணமானது மறக்கவே மறக்காது. சிறு சிறு இலக்கண கேள்வியானது போட்டி தேர்வுகளிலும் கேட்கப்படுகிறது. நாம் இந்த பதிவில் உரிச்சொல் என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

இலக்கணம் என்றால் என்ன?

உரிச்சொல் என்றால் என்ன?

உரிச்சொல் என்பது ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாக விளங்கும் சொல்லை தான் உரிச்சொல் என்று கூறுகிறோம். ஒரு சொல்லானது பல பொருளுக்கு உரிமை தந்து, பல சொற்கள் ஒரு பொருளுக்கு உரிமை தருவது உரிச்சொல்லாக விளங்குகிறது. இது பெயர்ச்சொல்லாகவோ, வினைச்சொல்லாகவோ, பெயருக்கு அடைமொழியாகவோ, வினைக்கு அடைமொழியாகவோ, பெயருக்கும் வினைக்கும் பொதுவானதாகவோ இருக்கலாம்.

உரிச்சொல் வகை:

உரிச்சொல்லை இரண்டு வகையாக பிரிக்கின்றனர்:

  1. ஒரு பொருட்குறித்த பலசொல்.
  2. பல பொருட்குறித்த ஒருசொல்.

ஒரு பொருட்குறித்த பலசொல் எடுத்துக்காட்டு:

  • சாலப்பேசினான்.
  • உறுபுகழ்.
  • தவஉயர்ந்தன.
  • நனிதின்றான்.

இந்த நான்கு சொற்களிலும் வரும் சால, உறு, தவ, நனி எனும் உரிச்சொல் மிகுதி எனும் ஒரே பொருளை தருகிறது.

பல பொருட்குறித்த ஒருசொல் எடுத்துக்காட்டு:

  • கடிமனை – காவல்
  • கடிவாள் – கூர்மை
  • கடிமிளகு – கரிப்பு
  • கடிமலர் – சிறப்பு

இந்த நான்கு சொற்களிலும் வரும் கடி எனும் உரிச்சொல் – காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு எனும் பல பொருளை குறிக்கிறது.

உரிச்சொல் குறிப்பவை:

  1. உயர்திணை பண்புகள்
  2. அஃறிணை பண்புகள்
சொல் என்றால் என்ன?

உயர்திணை பண்புகள்:

உடம்போடு கூடிய உயிர்களின் குணங்கள் 32 என்று கூறுகிறார் நன்னூலார் அதன் பட்டியலை கீழ் காண்போம்.

  1. அறிவு
  2. அருள்
  3. ஆசை
  4. அச்சம்
  5. மானம்
  6. நிறைவு
  7. பொறை (பொறுமை)
  8. ஓர்ப்பு (தெளிவு)
  9. கடைப்பிடி
  10. மையல் (மயக்கம்)
  11. நினைவு
  12. வெறுப்பு
  13. உவப்பு (மகிழ்வு)
  14. இரக்கம்
  15. நாண்
  16. வெகுளி (கோபம்)
  17. துணிவு
  18. அழுக்காறு (பொறாமை)
  19. அன்பு
  20. எளிமை
  21. எய்த்தல் (சோர்வு)
  22. துன்பம்
  23. இன்பம்
  24. இளமை
  25. மூப்பு
  26. இகல் (பகை),
  27. வென்றி (வெற்றி)
  28. பொச்சாப்பு (பொல்லாங்கு)
  29. ஊக்கம்
  30. மறம்
  31. மதம் (வெறி)
  32. மறவி (மறதி) ஆகியவை உயிர்களின் பண்புகளாகும்.

அஃறிணை பண்புகள்:

வடிவங்கள்
  1. வட்டம்
  2. இருகோணம்
  3. முக்கோணம்
  4. சதுரம் முதலிய பலவகைளும்
நாற்றங்கள்
  1. நறுநாற்றம்
  2. துர்நாற்றம்
வண்ணங்கள் 
  1. வெண்மை
  2. செம்மை (சிவப்பு)
  3. கருமை
  4. பொன்மை (மஞ்சள்)
  5. பசுமை
சுவைகள்
  1. கைப்பு (கசப்பு)
  2. புளிப்பு
  3. துவர்ப்பு
  4. உவர்ப்பு
  5. கார்ப்பு (காரம்)
  6. இனிப்பு
தொடு உணர்வுகள்
  1. வெம்மை (வெப்பம்)
  2. தண்மை (குளிர்ச்சி)
  3. மென்மை, வன்மை
  4. நொய்மை (நைதல்)
  5. திண்மை
  6. இழுமெனல் (வழவழப்பு)
  7. சருச்சரை (சொரசொரப்பு)

விளக்கம்:

தமிழில் உரிச்சொல் முழுச்சொல்லாகவும், குறைச்சொல்லாகவும் வரும்.

சான்று:

  • செல்லல், இன்னல், இன்னாமையே – இது முழுச்சொல்லாக வந்த உரிச்சொல் வகை.
  • தடவும் கயவும் நளியும் பெருமை – தடமருப்பு எருமை, கயவாய் மதகு, நளியிரு முந்நீர் – இவற்றில் தட, கய, நளி என்னும் உரிச்சொற்கள் குறைசொற்களாக உள்ளன.

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல் உரிச்சொல் என்ற நான்கு வகை சொற்களில் உரிச்சொல்லானது கடைசியாக இடம் பெற்றுள்ளது.

உரிச்சொல்லானது, பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காமல் வரும். பெயருக்கு அல்லது வினைக்கு உரிய பான்மையை உணர்த்தும். அதாவது, பொருளுக்குரிய பண்புகளைக் குறிப்பதாகும். “உரி” என்னும் அடைமொழியைச் “சொல்” என்பதனோடு சேர்த்து “உரிச்சொல்” என்றனர்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement