சொல் என்றால் என்ன | Tamil Sol Vagaigal
வணக்கம் நண்பர்களே இலக்கணம் சார்ந்த சொல் என்றால் என்ன, சொல் வகைகள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம். சொல் என்பது ஒரெழுத்தாலோ, பல எழுத்துகளாலோ ஆக்கப்பட்டு ஒரு பொருளைத் தரும் மொழிக்கூறு. சொல்லைக் கிளவி, பதம் என்றும் இருவகையாக அழைப்பதுண்டு. வாங்க இந்த பதிவில் சொல் வகை பற்றி விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
இலக்கணம் என்றால் என்ன? |
சொல் வகைகள்:
சொற்கள் நான்கு வகைப்படும் அவை:
1) பெயர்ச்சொல்
2) வினைச்சொல்
3) இடைச்சொல்
4) உரிச்சொல்
எடுத்துக்காட்டு:
சொல் வகை | எடுத்துக்காட்டு |
பெயர்ச்சொல் | மலை |
வினைச்சொல் | சென்றான் |
இடைச்சொல் | ஐ |
உரிச்சொல் | மா |
சொற்களை இயல்பும், இடமும் நோக்கி நான்கு வகைகளாக பிரிப்பர், அவை:
1) இயற்சொல்
2) திரிசொல்
3) திசைச்சொல்
4) வடசொல்
இயற்சொல் என்றால் என்ன:
இயற்சொல் என்பது தமிழ் நிலத்தில் கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் பொருள் விளங்குமாறு தொன்றுதொட்டு வழங்கி வரும் சொல்லாகும்.
(எ.டு.) மரம், வந்தான்.
திரிசொல் என்றால் என்ன:
திரிசொல் என்பது கற்றவர் மட்டுமே பொருள் உணரக்கூடியது. இது ஒரு பொருள் குறித்த பல சொல்லாகவும், பல பொருள் குறித்த ஒரு சொல்லாகவும் வரும்.
(எ.கா)
- கிள்ளை, தத்தை, சுகம் – கிளி என்னும் ஒரு பொருள் குறித்த பல திரிசொல்.
- வாரணம் – யானை, கோழி, சங்கு முதலிய பல பொருள் குறித்த ஒரு திரிசொல்.
திசைச்சொல் என்றால் என்ன:
திசைச்சொல் என்பது செந்தமிழ் வழங்கும் நிலம் தவிர்த்த கொடுந்தமிழ் வழங்கும் நிலங்களில் வழங்கும் சொல்லும், வேற்றுமொழி பேசுவோர் தமிழ் நிலத்தில் வந்து தம் கருத்தைக் குறிக்க வழங்கும் சொல்லும் ஆகும்.
(எ.கா)
சிறுகுளம் – இதனைப் ‘பாழி’ என்பர் பூழி நாட்டார்; ‘கேணி’ என்பர் அருவாநாட்டார்.
வடசொல் என்றால் என்ன:
ஆரிய மொழியில் வழங்கும் சொல் வடசொல். இது தமிழ்ச்சொல்லுக்கு ஒப்பாக, வடதிசை மொழியான ஆரியத்திலிருந்து தமிழில் கலந்து வழங்கும் சொல்லாகும்.
(எ.கா)
- காரியம், காரணம் – பொது எழுத்தால் அமைந்துள்ளது.
- போகி, சுத்தி – சிறப்பெழுத்தால் அமைந்துள்ளது.
- கடினம், சலம் – இருவகை எழுத்தாலும் அமைந்துள்ளது.
மேல் கூறிய பெயர்ச்சொல் நான்கையும், இயற்சொல் நான்கையும் சேர்த்து 10 சொற்களாக பிரிப்பதுண்டு அவை:
பெயர் இயற்சொல் | பெயர்த் திரிசொல் |
வினை இயற்சொல் | வினைத் திரிசொல் |
இடை இயற்சொல் | இடைத் திரிசொல் |
உரி இயற்சொல் | உரித் திரிசொல் |
திசைச்சொல் | வடசொல் |
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? |
பெயர்ச்சொல் என்றால் என்ன:
ஐம்புலனுக்கும், மனதிற்கும் புலப்படும் பொருள்களைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். பெயர்ச்சொல்லை ஆறு வகைகளாக பிரிக்கப்படுகிறது.
பொருட்பெயர் | எ.கா: புலி, கல் |
இடப் பெயர் | எ.கா: வீடு, தமிழகம் |
காலப் பெயர் | எ.கா: கிழமை, ஆண்டு |
சினைப் பெயர் | எ.கா: கை, கால் |
பண்புப் பெயர் | எ.கா: செம்மை, ஒன்று |
தொழிற் பெயர் | எ.கா: வாழ்தல், புகழ்தல் |
வினைச்சொல் என்றால் என்ன:
வினைச்சொல் என்பது பொருளின் செயலை உணர்த்தக்கூடிய சொல்லாகும். வினை, தொழில், செயல் என்பவை ஒரு பொருள் குறித்த சொற்கள்.
தெரிநிலைவினை என்பது வினைமுதல், கருவி, இடம், செயல், காலம், செயப்படுபொருள் என்னும் ஆறின் காரணமாகவோ, அல்லது இவ்வாறில் பலவற்றின் காரணமாகவோ நிகழும்.
எ.கா:
வனைந்தான் | தெரிநிலைவினை |
வினைமுதல் | குயவன் |
கருவி | தண்டு, சக்கரம், மண் போன்றவை |
இடம் | வனைதற்கு ஆதாரமான இடம் |
செயல் | வனைவதற்கு முதற்காரணமாகிய செய்கை |
காலம் | இறந்த காலம் |
செயப்படுபொருள் | குடம் |
இடைச்சொல் என்றால் என்ன:
இடைச்சொல் என்பது ஒரு பெயரும், வினையும் போலத் தனித்து நடக்கும் ஆற்றல் இல்லாதது; இது பெயரையும், வினையையும் சார்ந்து வரக்கூடிய சொல்லாகும். இது ஒன்பது வகைப்படும். அவை:
1) வேற்றுமை உருபுகள் – ஐ, ஆல் முதலியன
2) விகுதி உருபுகள் – ஆன், ஆள் முதலியன
3) இடைநிலை உருபுகள் – ப், வ், த் முதலியன
4) சாரியை உருபுகள் – அன், அத்து முதலியன
5) உவம உருபுகள் – போல, புரைய முதலியன
6) தம்பொருள் உணர்த்துவன – அ(சுட்டு), ஆ(வினா) முதலியன
7) ஒலிக் குறிப்பு முதலிய பொருள் உணர்த்துவன – ஓ ஓ, ஐயோ முதலியன
8) (செய்யுளில்) இசைநிறைக்க வருவன – “ஏஎ இவளொருத்தி…” முதலியன
9) அசைநிலையாய் வருவன – “மற்றுஎன்னை ஆள்க” முதலியன
உரிச்சொல் என்றால் என்ன:
உரிச்சொல் என்பது பொருளுக்கு உரிமை உடைய அதன் பண்பினை உணர்த்தக்கூடிய பெயரை சேர்ந்ததாகும்.
பொருள்கள் இரண்டு வகைப்படும்:
- உயிருள்ள பொருள்
- உயிர் அற்ற பொருள்
எ.கா:
உயிர்ப் பொருள்களின் குணப் பண்பு | அறிவு, அச்சம் முதலியன |
உயிர்ப் பொருள்களின் தொழில் பண்பு | உண்ணல் முதலியன |
உயிரில் பொருள்களின் குணப் பண்பு | வண்ணம் முதலியன |
உயிரில்லாப் பொருள்களின் தொழில் பண்பு | தோன்றல் முதலியன |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |