குற்றியலுகரம் என்றால் என்ன..? | Kutriyalugaram in Tamil

Advertisement

குற்றியலுகரம் வகைகள் | Kutriyalugaram Vagaigal in Tamil

வணக்கம் நண்பர்களே தமிழ் மொழியில் இலக்கணம் என்றாலே ஒரு சிலருக்கு நன்றாக புரியும், ஒரு சிலர் அரை குறையாக புரிந்துகொள்வார்கள். இலக்கணமானது புரிந்துக்கொள்ளும் வகையில் புரிந்துகொண்டால் இதைவிட எளிமையான பாடம் எதுவுமில்லை. தமிழ் மொழிப்படத்தில் ஈசியாக மதிப்பெண் பெற்றுவிடலாம். இதற்கு முந்தைய பதிவில் நமது பொதுநலம்.காம் பதிவில் பகுபத உறுப்பிலக்கணம், இலக்கணம் எத்தனை வகைப்படும் இது போன்ற பல இலக்கணங்களை பார்த்தோம். அதனை தொடர்ந்து இந்த பதிவில் குற்றியலுகரம் என்றால் என்ன? குற்றியலுகரத்தின் வகைகளை பற்றி விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

பகுபத உறுப்பிலக்கணம்

குற்றியலுகரம் என்றால் என்ன?:

குற்றியலுகரம் என்றால் என்ன

குற்றியலுகரம் பிரித்து எழுதுக:

குற்றியலுகரம் = (குறுமை + இயல் + உகரம்)

உ – என்ற உகரம் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரையாக ஒலித்தால் அது குற்றியலுகரம் எனப்படும்.

உகரம் என்பது ஒரு மாத்திரை அளவு ஒலிக்க கூடியது. இந்த ஒரு மாத்திரை அளவும் குறைந்து குறுகி ஒலிக்கிற இடங்களும் உண்டு. அது குற்றியலுகரம் (குறுகி ஒலிக்கின்ற உகரம்) என்று அழைக்கப்படும்.

அதற்கு சில வரையறைகள் உண்டு.

வல்லின மெய்யோடு சேர்ந்த உகரம் மட்டுமே குற்றியலுகரமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. (கு, சு, டு, து, பு, று) போன்ற ஆறு எழுத்துகள் மட்டுமே இந்த வகையில் அடங்கும்.

இறுதியில் 1 மாத்திரைக்கு பதிலாக 1/2 மாத்திரை அளவே ஒலிக்கும்.
தனிக்குறில் எழுத்தை அடுத்து வந்தால் அது குற்றியலுகரம் ஆகாது. (உதாரணம்: அது, பசு, வடு, அறு முதலியவை.)

குற்றியலுகரம் எழுத்துக்கள்:

  • கு, சு, டு, து, பு, று

குற்றியலுகரம் எடுத்துக்காட்டு:

மாடு, காடு, காது, ஆறு, எஃகு, அஃது, அரசு, கயிறு, பாக்கு, பேச்சு, பத்து, காற்று, நுங்கு, மஞ்சு, வண்டு, அம்பு, மார்பு, மூழ்கு, எய்து, சால்பு போன்ற எழுத்துக்கள் குற்றியலுகரத்தின் எடுத்துக்காட்டாகும்.

குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

குற்றியலுகரம் 6 வகைப்படும்: அவை

1. நெடில் தொடர் குற்றியலுகரம்
2. ஆய்தத் தொடர் குற்றியலுகரம்
3. உயிர்த் தொடர் குற்றியலுகரம்
4. வன்தொடர் குற்றியலுகரம்
5. மென்தொடர் குற்றியலுகரம்
6. இடைத்தொடர் குற்றியலுகரம்

நெடில் தொடர் குற்றியலுகரம் என்றால் என்ன?

தனி நெடிலைத் தொடர்ந்து (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ) குற்றியலுகர எழுத்துக்கள் (கு,சு,டு,து,பு,று) வந்தால் அது நெடில் தொடர் குற்றியலுகரம் என அழைக்கப்படும். அதாவது குற்றியலுகர எழுத்துக்கு முன்னால் நெடில் எழுத்துக்கள் இருந்தால் நெடில் தொடர் குற்றியலுகரம் எனப்படும்.

  1. தனி நெடிலைத் தொடர்ந்து வரும்
  2. ஈரெழுத்து சொற்களாகவே அமையும்.

எடுத்துக்காட்டு: மாடு, காடு, காது, ஆறு

ஆய்தத் தொடர் குற்றியலுகரம் என்றால் என்றால் என்ன?

குற்றியலுகர எழுத்துக்கு முன்பு ஆய்த எழுத்து வந்தால் அது ஆய்தத் தொடர் குற்றியலுகரம். அதாவது ஆய்த எழுத்தை தொடர்ந்து குற்றியலுகர எழுத்துக்கள் காணப்படும்.

  1. ஆய்த எழுத்தை தொடர்ந்து வரும்
  2. மூன்று எழுத்து சொற்களாக அமையும்

எடுத்துக்காட்டு: எஃகு, அஃது

இலக்கணம் என்றால் என்ன?

உயிர்த் தொடர் குற்றியலுகரம் என்றால் என்ன?

தனி நெடில் அல்லாத உயிர் எழுத்துக்களை (அ, இ, உ, எ, ஒ) தொடர்ந்து குற்றியலுகரம் (கு,சு,டு,து,பு,று) வந்தால் அவை உயிர்த் தொடர் குற்றியலுகரம் எனப்படும்.

  1. தனி நெடில் அல்லாத உயிரெழுத்தை தொடர்ந்து வரும்.
  2. இரண்டு எழுத்துக்கு மேற்பட்ட சொற்களாக அமையும்.

எடுத்துக்காட்டு: அரசு, கயிறு

வன்தொடர் குற்றியலுகரம் என்றால் என்ன?

வல்லின மெய் எழுத்துக்களை (க்,ச்,ட்,த்,ப்,ற்) தொடர்ந்து குற்றியலுகரம் (கு,சு,டு,து,பு,று) வந்தால் அவை வன்தொடர் குற்றியலுகரம் எனப்படும்.

எடுத்துக்காட்டு: பாக்கு, பேச்சு, பத்து, காற்று

மென்தொடர் குற்றியலுகரம் என்றால் என்ன?

மெல்லின மெய் எழுத்துக்களை (ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்) தொடர்ந்து குற்றியலுகரம் (கு,சு,டு,து,பு,று) வந்தால் அவை மென்தொடர் குற்றியலுகரம் எனப்படும்.

எடுத்துக்காட்டு: நுங்கு, மஞ்சு, வண்டு, அம்பு

இடைத்தொடர் குற்றியலுகரம் என்றால் என்ன?

இடையின மெய் எழுத்துக்களை (ய், ர், ல், வ், ழ்,ள்) தொடர்ந்து குற்றியலுகரம் (கு,சு,டு,து,பு,று) வந்தால் அவை இடைத்தொடர் குற்றியலுகரம் எனப்படும்.

  1. மெய் எழுத்துக்களில் “வ்” வராது.
  2. சு, டு, று ஆகிய மூன்று குற்றியலுகர எழுத்துக்களில் சொற்கள் முடிவடையாது.

எடுத்துக்காட்டு: மார்பு, மூழ்கு, எய்து, சால்பு

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement