Tamil Thai Valthu Lyrics in Tamil
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்..! தமிழ்த்தாய் வாழ்த்து என்பது இந்திய அரசுகளுள் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கொண்டிருக்கும் மாநிலங்களில் பாடப்பெறும் வாழ்த்து பாடலாகும். இது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். பெரும்பாலும் இந்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பள்ளிகள், கல்லூரிகள், அரசு விழாக்கள், கூட்டம் முதலிய நிகழ்வுகளில் இந்த பாடல் வரியை அனைவரும் பாடுவார்கள். இந்த நிகழ்வுகள் நிறைவடைந்த பிறகு இறுதியாக இந்திய தேசிய கீதம் பாடப்படும். சரி இந்த பதிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரி மற்றும் இந்த பாடலை எழுதியவர் யார் போன்ற தகவல்களை நாம் படித்தறியலாம் வாங்க.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஆசிரியர் யார்?
தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணீயம் பெ.சுந்தரனார் என்பவராவார். இப்பாடலில் ஆரியம் போல தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும் சில வரிகள் தள்ளப்பட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளன. இப்பாடலை 1970 ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதியின் தலைமையின் கீழ் செயற்பட்ட தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.
பெ.சுந்தரனார் எழுதி 1891 வெளியிட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதி இப்பாடலாகும்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகள்:
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
தமிழ் தாய் வாழ்த்து முழு பாடல் பொருள்:-
நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கிற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த தமிழர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே! இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!
தமிழ்த்தாய் வாழ்த்து முழு பாடல் வரிகள்:
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |