தை மாதத்தின் சிறப்பு | Thai Month Sirappu
தை மாத சிறப்புகள்: தை மாதத்தை நம் தமிழர்கள் அறுவடை மாதமாக சிறப்பித்து கூறுகிறார்கள். தை மாதத்தினை அறுவடை காலமாகவும், சூரிய கடவுளை வணங்கி நன்றி தெரிவிக்கும் மாதமாகவும் சொல்கிறார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பெரியவர்களின் சொல்லுக்கு ஏற்ப தை மாதத்தில் பல சிறப்பு விசேஷங்கள் இருக்கிறது. சூரியனின் தேர்ப்பாதை வடதிசையில் மாறும் உத்தராயண காலத்தின் ஆரம்பமே தை மாத முதல் நாள்.
இது மிகவும் புண்ணியமான காலம் என்று புராணங்கள் சொல்கின்றன. உயர்வான இந்த மாதத்தில் பல ஆலய தலங்களில் சிறப்பான பூஜைகள் நடைபெறும். இந்த பதிவில் தை மாதத்தின் சிறப்புகளை பற்றி படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
தை மாத சிறப்பான தைப்பூச திருவிழா:
தைப்பூச திருவிழாவானது தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்றைய திருநாளில் சிவபெருமன் மற்றும் முருக பெருமானை வழிபாடு செய்கிறோம். தை பூச நாளில் தான் அன்னை பார்வதி தேவி, அசுரர்களை அழிப்பதற்காக ஆறுமுகக் கடவுளுக்கு சக்தி வேலை வழங்கிய நாள். அதனால் தான், தைபூச திருநாள் உலகம் முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாவாகும். இந்த வருடம் வரும் ஜனவரி 25, 2024 வியாழக்கிழமை தைப்பூசம் தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது.
தை அமாவாசை:
தை மாதத்தில் வருகின்ற தை அமாவாசையில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். இந்த வழிபாடானது ஆறு, குளம், புண்ணியஸ்தலம், கடல் போன்ற இடங்களில் நடைபெறும். இந்த வழிபாடுகள் மூலம் நாம் இதுவரை செய்து வந்த பாவ புண்ணியங்கள் நீங்கி குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம், குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சி நிலைக்கும்.
ரத சப்தமி:
தை மாதத்தின் வளர்பிறையில் வரக்கூடியது தான் இந்த ரத சப்தமி. இந்த நாளில் சூரியன் தனது வடஅரைக்கோள பயணத்தை தொடங்குகிறார். ரத சப்தமி நாளில் விரதம் எடுத்து வந்தால் உடலில் இருந்து வந்த நோய்கள் அனைத்தும் நீங்கி, வீட்டில் உள்ள அனைத்து குழப்பங்களுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.
வீரபத்ர வழிபாடு:
இந்த வீரபத்ர வழிபாடானது வருடம் முழுவதும் செவ்வாய்க்கிழமை அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. வருடம் முழுவதும் இந்த வழிபாட்டினை தொடர முடியாதவர்கள் தை மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமையில் மட்டுமாவது வழிபாடு மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டினை செய்வதன் மூலம் தங்களை பிடித்த அனைத்து தடைகளும், தீராத பகையும் நம்மை விட்டு நீங்கிவிடும்.
தை வெள்ளி வழிபாடு:
உத்திராண்ய காலத்தின் ஆரம்ப மாதமான தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையை அம்மனுக்கு உகந்த வழிபாடாக மேற்கொள்ளப்படுகிறது. தை வெள்ளியில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி போன்ற அம்மன் பாடல்களை பாடி வழிபாடு மேற்கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல் ஊர்தோறும் தை மாதத்தில் கோவில் திருவிழாக்களும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
வசந்த பஞ்சமி:
ஸ்ரீசரஸ்வதி அவதரித்த தினமே வசந்த பஞ்சமி. அந்த நாள் தை மாதத்தில் வரும் சுக்ல பஞ்சமியாகும். இதனை “மகாபஞ்சமி’ என்றும் சொல்வார்கள். ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால், ஞான சித்தியாகும். அக்ஷராப்பியாசத்திற்கும் கல்வி சம்மந்தமான புதிய முயற்சிகள் இன்றைய நாளில் தொடங்கலாம்.
சபலா ஏகாதசி:
தை மாதமான தேய்பிறையில் வரும் ஏகாதசி சபலா ஏகாதசி என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. இன்றைய நாளில் உணவு உண்ணாமல், உறங்காமல் விரதமிருந்து மஹாவிஷ்ணுவை வழிபட்டால் நாம் முன்பு செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். அன்றைய நாளில், ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்வதால், ஒளிமயமான வாழ்க்கை அமையும்.
புத்ரதா ஏகாதசி:
தை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியானது, புத்ரதா ஏகாதசி என்றும் சந்தான ஏகாதசி என்றும் சொல்லப்படுகிறது. இந்நாளில் ஏகாதசி விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
சாவித்ரி கௌரி விரதம்:
தை மாதம் இரண்டாம் நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் சாவித்ரி கௌரி விரதமாகும். சிரஞ்சீவியான மார்க்கண்டேயர் இந்த விரதத்தை தருமனுக்கு எடுத்துக் கூறியதை அடுத்து தருமரும் இந்த விரதத்தை மேற்கொண்டார். இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு, களிமண்ணால் செய்த சாவித்ரி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். சாவித்ரி அம்மனை பூஜை செய்யும் போது, அன்றைய தினம் 9 முடிச்சுகள் போடப்பட்ட கயிற்றை கையில் கட்டிக்கொண்டு மௌன விரதம் இருக்க வேண்டும். இவ்வாறு 9 நாட்கள், 9 ஆண்டுகள் பூஜை செய்து வர வேண்டும்.
9-வது ஆண்டு முடிவில் 9 முறங்களில், ஒவ்வொன்றிலும் வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள் கிழங்குகள் என அனைத்தும் 9 எண்களுடன் வைத்து 9 சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், முறம் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நீடித்த ஆயுளும், வற்றாத செல்வமும், சந்தான பாக்கியமும் கிடைக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |