வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஔவையார் அருளிய விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics in Tamil

Updated On: August 25, 2025 7:04 PM
Follow Us:
Vinayagar Agaval Tamil
---Advertisement---
Advertisement

ஔவையார் அருளிய விநாயகர் அகவல் | Vinayagar Agaval in Tamil

Vinayagar Agaval Tamil/ Vinayagar Agaval in Tamil Lyrics: விநாயக பெருமானை அனைத்து கிழமைகளிலும் வழிபாடு செய்து வரலாம். சில நேரங்களில் வழிபாடு செய்ய தவறினால் வெள்ளிக்கிழமை மற்றும் விநாயகருக்கு உகந்த நாளான சதுர்த்தி திதியில் தவறாது வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். விநாயகரை நினைத்து வழிபாடு செய்யும் போது ஔவையாரையும் நினைத்துக்கொள்ளுங்கள்.

ஔவையார் அருளிய விநாயகர் அகவலை (vinayagar agaval lyrics in tamil) சங்கடஹர சதுர்த்தியின் போது விநாயகருக்கு பாராயணம் (விநாயகர் அகவல் பாராயணம்) செய்து வந்தால் கஷ்டங்கள் அனைத்தும் விலகும். சரி இப்போது ஔவையார் எழுதிய விநாயகர் அகவலை இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள்..!

விநாயகர் அகவல் பாடல் வரிகள்:

Vinayagar Agaval Tamil

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

சிவபுராணம் பாடல் வரிகள்

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

ஔவையார் அருளிய விநாயகர் அகவல் கூறுவதால் கிடைக்கும் நன்மைகள்:

ஔவையார் அருளிய விநாயகர் அகவலை சதுர்த்தி நாளில் கூறுவதன் மூலம் வாழ்க்கையில் இருக்கும் காரிய தடை ஆனது நீங்கும். துனபங்கள் நீங்கி இன்பங்கள் பெருக்கெடுக்கும். மன அழுத்தத்தில் இருந்தால் அவை நீங்கி மன அமைதி கிடைக்கும். வாழ்க்கையை பற்றிய பயம் தேவையில்லை, மகிழ்ச்சியாக இருப்பதற்கு அந்த விநாயக பெருமானே அருள்புரிவார். அதனால் இந்த பாடல் ஆனது சதுர்த்தி அன்று மட்டும் தான் கேட்க வேண்டும் என்றில்லை. விநாயக பெருமானை நினைத்து தினமும் கூட கேட்கலாம்.

ஓம் விக்ன விநாயகா போற்றி…

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now